தேனீக்களின் விசித்திர வாழ்க்கை


தேனீக்களின் விசித்திர வாழ்க்கை
x
தினத்தந்தி 20 Oct 2018 9:32 AM GMT (Updated: 20 Oct 2018 9:32 AM GMT)

ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ, ஆண் தேனீக்கள், 80 ஆயிரம் வேலைக்கார தேனீக்கள் இருக்கும்.

ராணி தேனீதான் அந்த கூட்டத்திற்கு தலைவி. முட்டையிடுவதும், வேலைக்கார தேனீக்களுக்கு கட்டளை இடுவதும் தான் இதன் வேலை. கூட்டில் இருக்கும் ஆண் தேனீக்களுக்கு எந்த வேலையும் கிடையாது. இவைகளின் ஒரே பிரதான வேலை இனச்சேர்க்கை மட்டும்தான். 80 ஆயிரம் வேலைக்கார தேனீக்களும் முழுமையாக வளர்ச்சியடையாத பெண் தேனீக்கள்தான். இதனால் முட்டையிட முடியாது. எனவே இவை எப்போதும் வேலைக்கார தேனீக்களாகவே இருக்கும்.

பருவம் அடைந்ததும் ராணி தேனீயின் உடலில் இருந்து ஒருவித வாசனை வெளிப்படும். அது ஆண் தேனீக்களை கவர்ந்திழுக்கும். அந்த நேரத்தில் ராணித்தேனீ கூட்டை விட்டு வெளியே வந்து வானத்தை நோக்கிப் பறக்கும். உடனே ஆண் தேனீக்களும் காதல் உணர்வுடன் ராணி தேனீயை பின்தொடரும். அது தொடர்ந்து மேல் நோக்கி பறந்துகொண்டே வரும், பாதி உயரத்திலேயே முக்கால்வாசி ஆண் தேனீக்கள் தொடர்ந்து பறக்க முடியாமல் திரும்பிவிடும்.

கடைசியாக ராணி தேனீக்கு சமமாக பறந்து வந்த ஆண் தேனீக்கு உறவு கொள்ள அனுமதி கிடைக்கும். இந்த உறவு மிக உயரத்தில் வானிலே நிகழும். உறவு முடிந்ததும் அந்த ஆண் தேனீ இறந்துவிடும். மறுநாளும் இதேபோல் இன்னொரு ஆண் தேனீயுடன் உறவு நிகழும். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும். அதன்பின் ராணி தேனீ தொடர்ந்து முட்டையிட்டுக்கொண்டே இருக்கும்.

அந்த முட்டையிலிருந்து 13 நாட்களில் தேனீக்கள் பொரித்து வெளிவரும். பிறந்து ஒரு வாரம் ஆன தேனீக்களுக்கு கூட்டை சுத்தப்படுத்துவதுதான் வேலை. இந்த வகை தேனீக்களை ‘ஹவுஸ் கீப்பிங் பீஸ்’ என்கிறார்கள். இதுபோக காவல்கார தேனீக்கள் இருக்கின்றன. இவைதான் கூட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. மனிதர்களைப் போலவே தேனீக்களிலும் திருடர்கள் உண்டு. ஒரு கூட்டில் இருக்கும் தேனீ மற்றொரு கூட்டுக்குள் நுழைந்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தேனை திருடி சென்று விடும். அத்தகைய தேனீக்களை அடையாளம் கண்டு அவைகளுடன் போரிட்டு விரட்டி அடிப்பதோ அல்லது கொன்று விடுவதோ காவல்கார தேனீக்களின் வேலை.

தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிர்வாழக் கூடியவை. பிறந்து ஒரு வாரத்துக்கு மேலான தேனீக்கள் மலர்களில் இருந்து தேனை சேகரித்து வரும் வேலையைப் பார்க்கின்றன. 55 நாட்களுக்கு மேல் உள்ள வயதான தேனீக்கள் அந்த பகுதியில் எங்கெங்கு தேன் கிடைக்கும், மலர்கள் நிறைந்த இடங்கள் எங்கிருக்கின்றன என்ற தகவலை வேலைக்கார தேனீக்களுக்கு தெரிவிக்கும். அனுபவம் நிறைந்த இந்த வயதான தேனீக்கள் கூறும் தகவலை வைத்தே தேனீக்கள் தேனை சேகரித்து வருகின்றன.

தேனீக்கள் இல்லையென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் மடிந்துபோகும் நிலை ஏற்படும். காரணம் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையால்தான் நமக்கு தாவரங்கள் மூலமாக உணவு கிடைக்கிறது. தேனீக்கள் இல்லையென்றால் மகரந்த சேர்க்கையும் இல்லை, உணவும் இல்லை, பல உயிரினங்களும் இல்லை.

Next Story