தினம் ஒரு தகவல் : வீட்டுக்குள் இருக்கும் நச்சுக் காற்று


தினம் ஒரு தகவல் :  வீட்டுக்குள் இருக்கும் நச்சுக் காற்று
x
தினத்தந்தி 23 Oct 2018 6:56 AM GMT (Updated: 23 Oct 2018 6:56 AM GMT)

புதிய கட்டிடங்கள் சிலவற்றில் சில அசவுகரியங்களை உணரலாம். காரணம் தெரியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடும்.

என்ன காரணத்தால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியாத நிலையில், இந்த நோய்களை சிக் பில்டிங் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள். அதே நேரத்தில் கட்டிடங்களின் மாசுபட்ட காற்றால் குறிப்பிட்ட நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிய முடிந்தால் அதை ‘பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ்‘ என்கிறார்கள்.

1984-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில் இண்டோர் ஏர் குவாலிட்டி, அதாவது அறைகளில் உலவும் காற்று தொடர்பான உலக அளவிலான புகார்களில் 30 சதவீத புகார்கள் புதிய கட்டிடங்களையே குற்றஞ்சாட்டி இருந்ததாக, குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக இந்தச் சிக்கல் தற்காலிகமானது என்றாலும் சில கட்டிடங்களில் அது நீடித்த பிரச்சினையாகி விடுகிறது. பெரும்பாலும் கட்டிடத்தை முறைப்படி பராமரிக்காததால் தான் இண்டோர் ஏர் குவாலிட்டி பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்தக் கட்டிடத்தை பயன்படுத்துபவர்களின் தவறான நடவடிக்கைகளாலும், கட்டிடத்தின் வடிவமைப்பு சரியில்லாவிட்டாலும் காற்றின் தரம் பாதிப்புக்கு உள்ளாகும்.

அறைகளில் உலவும் காற்று தரமற்றது என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட கட்டிடங்களில் வசிக்கும் போது, தலைவலி, கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் தீவிரமாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி சோர்வு தோன்றும். இந்த அறிகுறிகளுக்கான முறையான காரணங்களை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கும். இத்தகைய கட்டிடங்களிலிருந்து வெளியேறியவுடன் இந்த உபாதைகளும் நீங்கிவிடக்கூடும் என்கிறது ஆய்வு.

மேலும் பில்டிங் ரிலேட்டட் இல்னெஸ் காரணமாக இருமல், மார்பு இறுக்கம், காய்ச்சல், தசைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இதுவும் கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிட்டால் குணமாகி விடுகிறது என்கின்றனர். இத்தகைய பிரச்சினைகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் அருகே உள்ள சுகாதாரக் கேடான சூழல் உடல்நிலையைப் பாதிக்கலாம். ஒவ்வாமை காரணமாக நோய்கள் உருவாகலாம். வேலை காரணமான மன அழுத்தம் சிக்கலை உருவாக்கலாம். வேறு உளவியல் பிரச்சினைகளால் உடல் உபாதை உருவாகலாம். இவற்றையும் கட்டிடத்தால் ஏற்படுகிறது என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆனாலும் மேற்கண்ட நோய் அறிகுறிகள் கட்டிடத்தின் காற்றின் தரத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. 

Next Story