வேலை தேடும்போது இந்த சறுக்கல்கள் வேண்டாமே...!


வேலை தேடும்போது இந்த சறுக்கல்கள் வேண்டாமே...!
x
தினத்தந்தி 23 Oct 2018 9:19 AM GMT (Updated: 23 Oct 2018 9:19 AM GMT)

படித்து முடித்து வேலை தேடுகிறீர்களா? பல்வேறு முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை என வருந்துகிறீர்களா?

வேலை தேடலின்போது நடக்கும் சில அடிப்படை தவறுகள் உங்களுக்கு எளிதில் வேலை கிடைப்பதை தள்ளிப்போட்டு இருக்கலாம். இதோ அந்த தவறுகளை தெரிந்து கொண்டு சரி செய்யப் பழகுவோம்... வேலையை வெல்வோம்...!

பொதுவாக வேலை தேடுனர்கள் 2 நிலைகளில் வேலை தேட வேண்டும். பொதுவாக நாம் விரும்பும் நிறுவனங்களுக்கும், விரும்பிய துறைகளுக்கும் நாமாகவே சுயவிவரப்பட்டியலை அனுப்பி வாய்ப்புக்காக காத்திருப்பது முதல் நிலை. இரண்டாவதாக பல்வேறு வேலைகளுக்கான நேர்காணல்களை எதிர்கொண்டு வருவது. இதில் அனுபவங்கள் பெறலாம். நீங்கள் எதிர்பார்ப்பது தொடர்பான வேலைவாய்ப்பை தேர்வு செய்து பணி அனுபவத்தையும் வளர்க்கலாம். இது, தகுதியை வளர்த்துக் கொண்டு நீங்கள் விரும்பிய, எதிர்பார்த்து காத்திருக்கும் பணிக்குச் செல்ல வாய்ப்பாக அமையும்..

இந்த இரு வழிகளில்தான் நாம் வேலை தேடுகிறோம் என்றாலும் அதில் பல தவறுகள் நிகழ்வதுண்டு. அந்த தவறுகளை திருத்திக் கொள்வது முக்கியம். தோல்வியைப் பற்றி அலசி ஆராய்வது வெற்றியை உறுதிப்படுத்தத்தான். அந்த தவறுகளை சரி செய்வோமா...

வேலைக்கு அனுபவம் தேவை என்ற அறிவிப்பை அடிக்கடி பார்ப்போம். நேர்காணலிலும் அனுபவம் இருக்கிறதா? என்று கேட்பதை பார்க்கும்போது நாம் மனம் நொந்துபோவோம். ‘வேலை தந்தால்தானே அனுபவம் வரும்’, ‘யார்தான் வேலை தருவார்கள்’ என்று ஏங்க வைத்துவிடும். அதனால் ஓராண்டு அனுபவம், இரண்டாண்டு அனுபவம் தேவை என கேட்கப்பட்டிருக்கும் வேலைக்கு பலரும் விண்ணப்பிப்பதில்லை. வேலை வேண்டுபவர்கள் அப்படி ஒதுக்கிவிடத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்குரிய சில பணிகளுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். உங்கள் கல்வியறிவும், திறமையும், நீங்கள் கற்ற செய்முறை பயிற்சி, செய்த ஆய்வுத்திட்டங்கள், டியூசன் எடுத்தது போன்ற பயிற்சிகள், தன்னார்வலராக நீங்கள் செய்த சேவைகள் போன்றவை உங்களுக்கு சிறந்த பணி அனுபவத்தை தந்திருக்கலாம். நேர்காணலில் உங்கள் திறனை வெளிப்படுத்துங்கள். அது உங்கள் பணிவாய்ப்பை உறுதி செய்யாவிட்டாலும், மாற்று நபராக பரிசீலிக்க வாய்ப்பை உருவாக்கும்.

நீங்கள் வேலை வேண்டி விண்ணப்பிக்கும், சுயவிவரப்பட்டியல் (ரெஸ்யூம்) குறைகளைக் கொண்டிருந்தாலும், புறக்கணிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரெஸ்யூம் அளவாகவும், தெளிவான விவரங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் சார்ந்த திறமைகளை முன்னிலைப்படுத்திய ரெஸ்யூம் அவசியம். வழக்கமான பெயர், படிப்பு, முகவரி, பிறந்த நாள் என்று இருக்கும் விவரங்கள் வேலை வழங்குனருக்கு இரண்டாம்பட்சம்தான், முதலில் உங்கள் தகுதிகள், அனுபவங்களே முக்கியம். தங்கள் நிறுவனத்திற்கு தேவையான சிறப்புத் தகுதிகள் உங்களிடம் இருக்கிறதா? அது உங்கள் ரெஸ்யூமில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? என்பதையே வேலைவழங்குபவர்கள் ஆராய்வார்கள். அது இருந்தால்தான் அவர் உங்கள் பெயரையும், தொடர்பு முகவரியையும் கவனிப்பார் கள். எனவே பெயர், பிறந்தநாள், ரத்த பிரிவு போன்ற விவரங்களை விட அவசியமான தகுதிகள் நிரம்பியதாக இருக்கட்டும் உங்கள் ரெஸ்யூம். அதில் எழுத்துப்பிழைகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரெஸ்யூமை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். ஏராளமான ரெஸ்யூம் டெம்ளேட்டுகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து, புதியதாக உங்கள் சுயவிவரத்தை அப்டேட் செய்யுங்கள். இப்போதெல்லாம் ரெஸ்யூம்களை படித்துப்பார்க்கவும், தகுதிவாரியாக பட்டியல் போடவும் மென்பொருள்கள்(சாப்ட்வேர்) இருப்பதால், உங்கள் ரெஸ்யூம் தகுதிகள் நிரம்பியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்காக வேலைவாய்ப்பு தகுதியை படித்து அறிந்துகொண்டு, எந்த தகுதிக்கு முன்னுரிமை தரப்படுகிறதோ, அது தங்களிடம் இருக்கிறது என்பதை முதன்மையான தகுதியாக குறிப்பிட்டு சுயவிவரப்பட்டியலை மாற்றி அமையுங்கள். இது முதன்மையாக இருந்தால் பட்டியல் சாப்ட்வேர் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். விண்ணப்ப கடிதத்திலும் வீணான கெஞ்சுதல், கூடுதல் பணிவு, வளவளவென வார்த்தை வளர்ப்புகள் இருக்க வேண்டாம். முக்கியமாக ரெஸ்யூமை மாற்றியமைக்க சோம்பேறித்தனம் வேண்டாம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் இந்த பணியை விரும்ப காரணம் என்ன? உங்கள் பலம்-பலவீனம் என்ன? என்பது போன்ற வழக்கமான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் தயாராக வேண்டாம். சலித்துக் கொள்ளவும் வேண்டாம். அவசியமான தகவல்களை திரட்டி நேர்காணலுக்குத் தயாராகுங்கள். அழகிய பதில்களால் அசத்துங்கள்.

உங்கள் தகுதியை உயர்த்திச் சொல்வதற்காக பொய்களை கூற வேண்டாம். நிறுவனங்கள் அதை சோதித்து அறிந்து கொண்டால், வேலையும் போகும், மரியாதையும் கெட்டுவிடும்.

நேர்காணலில் ஊக்கம் குறைந்து காணப்படாதீர்கள். வேலை கிடைக்க வேண்டும் என்ற பதற்றத்துடன் நேர் காணலை எதிர்கொள்ளாதீர்கள். இது உங்கள் விருப்பத்திற்குரிய பணியாக இல்லாவிட்டாலும் உற்சாகத்துடன் நேர் காணலை எதிர்கொள்ளுங்கள், நேராக நிமிர்ந்து அமருங்கள், கண்களைப் பார்த்து கனிவாக பதில் சொல்லுங்கள். எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்.

உடைகளில் கவனம் வையுங்கள். நீங்கள் நேர்காணலுக்கு செல்ல விரும்பும் நிறுவனத்தின் பணியாளர்கள், அதிகாரி களின் உடைகளை அவர்களின் இணைய தளத்தில் பார்க்கலாம். அதற்கேற்ப உங்கள் உடைகளை அணிந்து செல்லுங்கள். விளையாட்டு, வணிகம், விற்பனை அதிகாரி, மக்கள் தொடர்பு அலுவலர் என பணிகள் ஒவ்வொன்றிற்குமான பிரத்தியேக தோற்றத்தில் செல்வது நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.

வேலைக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றிய அனேக விவரங்களை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பணி, அதை அடைவதற்கான தகுதி பற்றிய விவரங்களை விளக்குவதற்கு தயாராக செல்லுங்கள்.

நீங்கள் தோல்வியை எதிர்பாராதவராக இருங்கள். நமக்கு வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற ஏக்கத்தையும், பதற்றத்தையும் தவிர்த்துவிடுங்கள். தெளிவான அந்த மனநிலை தரும் உற்சாகம் உங்களுக்கு முன்னுரிமை தர காரணமாக அமையலாம். நீங்கள் விருப்பத்துடன் இருப்பதை நேர்காணல் செய்பவர் அறியும்போதே உங்களை தேர்வு செய்ய முன்வருவார்.

மேற்காணும் சறுக்கல்கள் இனியும் தொடராமல் பார்த்துக் கொண்டால், அடுத்த இன்டர்வியூ வேலையை வென்று தரும் என்பதில் சந்தேகமில்லை!


Next Story