தண்ணீர் விளையாட்டுப் பொருளா?


தண்ணீர் விளையாட்டுப் பொருளா?
x
தினத்தந்தி 26 Oct 2018 6:09 AM GMT (Updated: 26 Oct 2018 6:09 AM GMT)

குட்டீஸ், தண்ணீரில் கைவிட்டு விளையாடுவதும், அதிக நேரம் குளியல் போடுவதும் உங்களுக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்தானே.

கடற்கரைக்குச் சென்றால் அலைகளுடன் விளையாடுவது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? படகுப் பயணம் செய்வது மகிழ்ச்சி தருகிறதல்லவா? நிஜம்தான் தண்ணீர் நம்மை பலவிதங்களில் மகிழ்ச்சிப்படுத்துகிறது. குடிநீராகவும், இன்னும் பல தேவைகளை நிறைவேற்றியும் நம் வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருளாக விளங்குகிறது தண்ணீர். அதனால்தான் திருவள்ளுவர் தாத்தா, “நீரின்றி அமையாது உலகு” என்று பாடியிருக்கிறார்.

ஆனால் தண்ணீரை வெறும் விளையாட்டுப் பொருளாக எண்ணுவதும், சிக்கனமின்றி பயன்படுத்துவதும் பின் வரும் காலங்களில் சிரமத்தை ஏற்படுத்தும். பெற்றோரும், ஆசிரியரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால் அதை பலரும் செயல்படுத்துவதில்லை. சிக்கன நடைமுறையைப் பின்பற்றினால், உங்கள் வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும், நாம் வசிக்கும் அனைத்து இடங்களிலும் ‘தண்ணீர் பஞ்சம்’ என்ற பேச்சே இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது, எப்படி சேமிப்பது, தண்ணீர் பஞ்சத்தை எப்படி போக்குவது பார்க்கலாமா?...

* பள்ளிக்குக் கிளம்பும்போது ‘வாட்டர் பாட்டிலில் ’ அம்மா தண்ணீர் நிரப்பித் தருகிறார். அதை நீங்கள் குடிக்கிறீர்கள். மாலையில் வீடு திரும்பியதும் அந்த பாட்டிலில் மீதி இருக்கும் தண்ணீரை, குலுக்கி அலசி கொட்டி வீணாக்கிவிடுவீர்கள் அப்படித்தானே? சிங்க் வழியே சாக்கடையில் கலக்கும் அந்த நீரை, பூந்தொட்டியில் ஊற்றி வாருங்களேன், உங்களைப்போல புன்னகைக்கும் பூக்கள் அதிகமாக, வேகமாக பூப்பதை ரசிக்கலாம்.

* அதேபோல தண்ணீர் குழாயை திறந்து விளையாடுவதும், பாட்டிலில் நிரப்புவதுமாக நீங்கள் நிறைய நேரம் தண்ணீரை வீணாக்கி இருக்கிறீர்கள் இல்லையா? இதுவும் தவறான பழக்கம்தானே. இதையும் கொஞ்சம் மாத்திக்கலாமே.

* குளிக்கும்போதும் இதுபோலவே விளையாட்டுத் தனத்துடன், நீண்ட நேரம் தண்ணீரை திறந்துவிட்டுக் கொண்டு ஜாலியாக குளிப்பீர்கள் இல்லையா? அப்போதும் இரண்டு மடங்கு நீரை வீணாக்குகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இனி அப்படி செய்யாதீர்கள்.

* நீங்கள் பல் துலக்கும்போதும், அப்பா ஷேவிங் செய்யும்போதும், அம்மா பாத்திரம் கழுவும்போதும் தண்ணீர் குழாயை திறந்து வைத்திருக்கிறீர்கள் அப்படித்தானே. நாளை நீங்கள் அப்படிச் செய்யும்போது அந்த தண்ணீரை ஒரு வாளியில் (பக்கெட்) நிரம்பும்படி செய்து பாருங்கள். ஒரு கோப்பை நீரில் பல்துலக்கி கொப்பளித்துவிடலாம். ஆனால் சுமார் ஒரு வாளி தண்ணீர் குழாயில் கொட்டுகிறதல்லவா? இப்படியே நீங்கள், சகோதர சகோதரிகள், அம்மா, அப்பா என அனைவரும் தண்ணீரை திறந்து கொண்டு பல் துலக்கினால் எத்தனை வாளி தண்ணீர் வீணாகும்?

* அம்மா பாத்திரம் தேய்க்கும்போதும் இதைவிட 2 மடங்கு தண்ணீர் வீணாகிறது என்பதை வாளியில் பிடித்து வைத்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம். இதை இனி அம்மாவுக்கு சொல்லி புரிய வையுங்கள். அப்படியே வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாத்திரங்களை கழுவி எடுக்கவும், அந்த நீரில் தோட்ட பராமரிப்பு செய்யவும் பழகுங்கள். இதுபோலவே காய்கறி கழுவும் தண்ணீரை வாசல் தெளிக்கவும், துணிகளை அலசும் தண்ணீரை தோட்டத்திற்கும், குளியலறையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

* சைக்கிள், பைக், கார்களை சுத்தம் செய்கிறேன் என்று அடிக்கடி ‘வாட்டர் வாஷ்’ செய்வதும் நீரை வீணாக்கும் செயல்தான். எப்போதாவது வாட்டர் வாஷ் செய்துவிட்டு, தினசரி துணியால் துடைக்கலாம். சில இடங்களை ஈரத்துணியால் துடைத்தாலே போதுமானது. இதை நீங்களும், உங்கள் தந்தையும் இணைந்து பின்பற்ற வேண்டும்.

* வீட்டில் தண்ணீர் குழாய்கள் கசிந்து சொட்டிக் கொண்டிருந்தால் அதை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் கோப்பைகளையும், வாளிகளையும், ஷவர் முறையையும் பின்பற்றி தண்ணீர் சிக்கனத்தை பின்பற்ற வேண்டும்.

* இவை மட்டுமல்லாமல், மழைநீர் சேகரிப்பு முறையை பாட பயிற்சித்திட்டமாக மட்டும் செய்துகொண்டிருக்காமல், வீட்டிலும் செயல்படுத்த பெற்றோரை வற்புறுத்துங்கள். வீட்டின் அருகே இடமிருந்தால் மரக்கன்று நட்டு பராமரியுங்கள். சாலையோர மரங்களுக்கும் கரிசனத்துடன் நீர் ஊற்றுங்கள்.

* வாறுகால்கள், கால்வாய்கள், ஓடைகள், ஆறுகள், குளங்கள் போன்றவற்றை அசுத்தப்படுத்தாதீர்கள். பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை கொட்டி அடைப்பு ஏற்படுத்தாதீர்கள். முடிந்தால் உங்கள் நண்பர்கள், பள்ளி ஆசிரியர்- மாணவர்கள் குழுவாக சேர்ந்து அருகில் உள்ள நீர்நிலைகளை துப்புரவு செய்யுங்கள். நீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டுங்கள்.

இவற்றை கடைப்பிடித்தால் தண்ணீர் பஞ்சம் ‘பை-பை’ சொல்லிவிட்டு போய்விடும்!

Next Story