தினம் ஒரு தகவல் : தோணி ஆமை


தினம் ஒரு தகவல் : தோணி ஆமை
x
தினத்தந்தி 27 Oct 2018 8:04 AM GMT (Updated: 27 Oct 2018 8:04 AM GMT)

கடலில் வாழும் ஆமைகளில் மிகப்பெரியது தோணி ஆமைதான். அதன் பெரிய உடல், அதன் முதுகில் இருக்கும் ஏழு வரிகள் ஆகியவற்றைக்கொண்டு, இவற்றை ‘ஏழு வரி ஆமை‘ என்று அழைக்கிறார்கள்.

தோணி வகை ஆமையின் நீளம் 1½ மீட்டர், அகலம் 1 மீட்டர், உயரம் ¾ மீட்டர், எடை சுமார் 300 முதல் 400 கிலோ ஆகும். அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த ஆமை இந்திய கடற்கரைகளில் அதிகமாக காணப்படும் ஓர் உயிரினம்.

மேலும், இந்திய கடற்பகுதிகளில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை, ஓங்கில் ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் காணப்படுகின்றன. கடலில் வாழும் ஆமைகள் முட்டை இடுவதற்கு மட்டும் கடலை ஒட்டிய நிலப்பகுதிக்கு இரவு நேரத்தில் வருகின்றன. அந்த முட்டை பொரிந்து இரவு நேரத்தில் வெளிவரும் குஞ்சுகளின் மனதில் நிலத்தின் அமைப்பு, அங்கு நிலவும் காந்தப்புலம், அங்கு வீசும் நறுமணம் ஆகியவை பதிந்துவிடுவதால், இந்த குஞ்சுகள் வளர்ந்து இனப்பெருக்கத்துக்கு தயாராகும்போது, பிறந்த கடற்கரை பகுதிக்கே மீண்டும் முட்டையிட வருகின்றன. இந்த வியக்கத்தக்க செயல்பாட்டை ‘நேட்டல் ஹோமிங்‘ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

‘லெதர்பேக் டர்டில்‘ என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த வகை ஆமைதான், கடல் ஆமைகளிலேயே மிகப்பெரியது. மிகுந்த எடை உள்ளது. சராசரியாக 8 அடி நீளம் வரை வளரும். அதிகபட்சமாக 800 கிலோ எடை கொண்டவை.

கருஞ்சாம்பல் வண்ணத்தில் காணப்படும் இந்த வகை ஆமைகள், ஜெல்லி மீன்களை விரும்பி உண்கின்றன. சுமார் 400 முதல் 1,200 மீட்டர் ஆழத்தில் கடலின் உள்ளே அரை மணி நேரம்வரை மூச்சுப் பிடித்து நீந்தும் திறன் கொண்டவை. ஆனால், கடல் ஆமைகள் இறைச்சிக்காகவும் கொழுப்புச் சத்துக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன.

கடற்கரைகளில் முட்டையிடுவதால் நாய், காக்கை உள்ளிட்டவற்றால் முட்டைகளுக்கும், குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால் அந்த ஆமைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

Next Story