நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி நாட்டு சர்க்கரையில் நல்ல லாபம் பெறும் கரும்பு விவசாயி


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி நாட்டு சர்க்கரையில் நல்ல லாபம் பெறும் கரும்பு விவசாயி
x
தினத்தந்தி 4 Nov 2018 6:38 AM GMT (Updated: 4 Nov 2018 6:38 AM GMT)

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவை தொகையை பெறுவதற்கான தொடர் போராட்டங்கள் ஒரு புறம், கரும்பு கொள் முதலுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றொரு புறம்.

ர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவை தொகையை பெறுவதற்கான தொடர் போராட்டங்கள் ஒரு புறம், கரும்பு கொள் முதலுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றொரு புறம். இவ்வாறு தமிழக கரும்பு விவசாயிகள் சந்திக்கும் 2 முக்கிய பிரச்சினையிலும் சிக்காமல் தான் உற்பத்தி செய்யும் கரும்பை தானே நாட்டு சர்க் கரையாக மாற்றி நேரடி விற்பனை மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறார் கரும்பு விவசாயி சோமசுந்தரம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 50 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் போன்றவற்றை இயற்கை முறையில் அவர் சாகுபடி செய்கிறார். சத்தியமங்கலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள ராஜநகர், கொத்தமங்கலம் ஆகிய 2 கிராமங்களில் மொத்தம் 5 இடங்களில் அவருக்கு தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தோட்டமாக அழைத்து சென்று நமக்கு சுற்றி காண்பித்தார்.

“பரம்பரை விவசாய குடும்பமாக இருந்தாலும் நான் 30 வருஷமாக மர வியாபாரம் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுல சம்பாதிச்ச பணத்த வச்சு ஆத்து ஓரத்துல நிலம் வாங்க முடிவு செய்தேன். 2013-ல் இங்கு 2 தோட்டத்தை வாங்கினேன். 2015-ல் ஈஷா ஏற்பாடு செய்த பாலேக்கர் ஐயாவோட ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ வகுப்பில் கலந்துகிட்டதுக்கு பிறகு மேலும் 3 தோட்டங்களை வாங்கினேன்.

இப்போ மொத்தம் இருக்குற 50 ஏக்கர் நிலத்துல 20 ஏக்கரில் கரும்பும், 13 ஏக்கரில் வாழையும் போட்டிருக்கேன். 10 ஏக்கரில் பூசணிக்காயும், அரசாணி காயும் சேர்த்து விளைவிக்கிறேன். 5 ஏக்கரில் கிளைரி செடியை நட்டுருக்கேன். அதில் இந்த மாசம் மிளகு கொடி ஏத்தப்போறேன். இதுதவிர மீதமிருக்குற நிலத்தில் நெல், காய்கறிகள், பழ மரங்கள் நட்டிருக்கேன்.

பாலேக்கர் ஐயா வகுப்புக்கு பிறகு ஈஷா விவசாய இயக்கத்தில் இருந்து தோட்டத்துக்கு அடிக்கடி வந்து நிறைய ஆலோசனைகள் கொடுத்தாங்க. அதில் முக்கியமாக, மதிப்பு கூட்டி நேரடி விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்னும் சொன்னாங்க. அதனால் நானும் என் தோட்டத்துல விளையுற கரும்புகளை நாட்டு சர்க்கரையா மாத்தி விற்க ஆரம்பிச்சேன்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய தோட்டத்தில் உள்ள சிறிய சர்க்கரை ஆலைக்கு அழைத்து சென்றார்.

தோட்டங்களில் விளையும் அனைத்து கரும்புகளையும் கூலி ஆட்கள் அறுவடை செய்து ஆலைக்கு எடுத்து வருகின்றனர். அங்குள்ள அரவை எந்திரத்தில் சாறு பிழிந்து, கரும்பு சாறு மட்டும் ஒரு குழாய் வழியாக அருகில் உள்ள பெரிய கொப்பரைக்கு செல்லும் விதமாக அதை வடிவமைத்துள்ளனர். கரும்பு சக்கைகளை காய வைத்து அடுப்பு எரிப்பதற்கு பயன் படுத்தி கொள்கின்றனர். கரும்பு சாறை நன்கு சுண்ட காய்ச்சி பின்னர் அதை இன்னொரு கொப்பரைக்கு மாற்றி நாட்டு சர்க்கரையாக மாற்றுகின்றனர்.

``ஆரம்பத்துல எனக்கு தெரிஞ்ச ஆட் களுக்கு நாட்டு சர்க்கரையை நேரடியாக விற்பனை செஞ்சேன். இயற்கை முறையில தயாரிக்கப்பட்ட சர்க்கரை என்பதால், விற்பனை அமோகமாக நடந்தது. விற்பனைக்காக நான் எந்த விளம்பரமும் பண்ணலை.

இப்போது தினமும் 500 கிலோ வரைக்கும் நாட்டு சர்க்கரையை சில்லரையாக விற்பனை செய்றேன். மக்களே நேரடியாக தோட்டத்துக்கு தேடி வந்து வாங்கிட்டு போறாங்க. ஈரோடு மட்டுமில்லாமல் திருப்பூர், கோயம்புத்தூர் ஏன் சென்னையில இருந்து கூட வந்து வாங்கிட்டு போறாங்க. எவ்வளவு சர்க்கரை தயார் செய்தாலும், எல்லாத்தையும் விற்றுவிட முடிகிறது.

பாலேக்கர் ஐயா சொன்ன மாதிரியே 8 அடி இடைவெளியில் கரும்பு நட்டுருக்கேன். ஒரு ஏக்கரில் விளைகிற கரும்பில் இருந்து 5 டன் நாட்டு சர்க்கரை கிடைக்குது. ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கிறேன். ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு நாட்டு சர்க்கரை விற்கலாம். எல்லா செலவும் போக ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கலாம். நாட்டு சர்க்கரை விற்பனையோடு சேர்த்து அடுத்து பன்னாரி பகுதியில் ஒரு கரும்பு ஜூஸ் கடை வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

ஒரு ஏக்கர் நெல் வயலில் இருந்து 3000 கிலோ வெள்ளை பொன்னி அறுவடை செய்தேன். அதில் கிடைத்த அரிசியை கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். 5 ஏக்கரில் போட்டிருக்கும் கிளைரிசெடியில் மிளகு கொடி ஏற்றினால், அது 3 வருஷத்தில் காய் காய்க்க ஆரம்பிச்சிடும். அப்பறம், அந்த மிளகையும் நேரடியா விற்பனை பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இப்பவே மிளகு கிலோ 800 ரூபாய்ல இருந்து 1000 ரூபாய்க்கு விற்பனையாகுது. எதிர்காலத்தில் மிளகில் இருந்து தனியாக நல்ல வருமானம் பார்க்க முடியும்” என்று தன் நேரடி விற்பனை குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

நாட்டு சர்க்கரை மற்றும் அரிசி தவிர்த்து வாழை, பூசணிக்காய், அரசாணி காய் போன்ற பிற விளைப் பொருட்களை மொத்தமாக வியாபாரம் செய்கிறார். கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கதளி வாழை கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.70 வரை விற்பனையானதாக அவர் தெரிவித்தார்.

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில், “விவசாயி தன்னோட பொருட்களை விக்குறதுக்கு வியாபாரியை நம்பி இருந்தால் ஜெயிக்க முடியாது. விவசாயியே வியாபாரியாவும் மாறணும். அப்போ தான் ஜெயிக்க முடியும்” என்கிறார், சோமசுந்தரம்.

இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும், ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

- தொடரும்

Next Story