சிறப்புக் கட்டுரைகள்

எச்சரிக்கையோடு விடுதலை செய்யலாமே...! + "||" + To be released with caution ...!

எச்சரிக்கையோடு விடுதலை செய்யலாமே...!

எச்சரிக்கையோடு விடுதலை செய்யலாமே...!
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் எதிர்காலத்தில் பசுமை பட்டாசு ரசாயனப் பொருட்களை கலப்பில்லாத பட்டாசுகள் தயாரிப்பதற்கு திட்டமிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்கலாம் என்றும், பழைய பட்டாசுகள் விற்பனையை தடை செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறுகிறது.

இந்தத் தீர்ப்பை அமலாக்கிடும் வகையில் தமிழ்நாடு மாநில அரசு 6-11-2018 அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று முடிவெடுத்து அறிவித்தது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை விடுத்தது.


உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாக தீபாவளியன்று சுமார் 1200 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், காற்று, தண்ணீர், நிலம் மாசுபடக்கூடாது என்பதில் அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். நமது தேசத்தில் நகர்மயமாதல் வேகமாக நிகழ்ந்து வருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற பெருநகரங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கிராமங்களை விட நகரங்களில் மக்களின் அடர்த்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களில் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

‘பருவ நிலை மாற்றம்‘ குறித்த சர்வதேச பேச்சுவார்த்தை உலக அளவில் நடந்து வருகிறது. பசுமைக்கூட வாயுக்கள் அதிகளவில் வெளியேறுவதால் சமீப காலத்தில் பூமி ஏற்கனவே இருப்பதை விட ஒரு டிகிரி அளவிற்கு வெப்பமடைந்துள்ளது. அடுத்து பல ஆண்டுகளில் இது இரண்டு டிகிரியாக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதால் 1.5 அளவிற்கு பசுமைக்கூட வாயு வெளியாவதை நிறுத்திட வேண்டுமென உலக அளவிலான பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

பூமி வெப்பமடைவதை தடுக்கவில்லை என்றால் கடல் மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்கிவிடும் ஆபத்து உள்ளது. இதற்கும் பட்டாசு வெடிப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இதுவும் முக்கியமான ஒன்று. இதுபோன்ற சுற்றுச்சூழல் பிரச்சினையிலும் அரசுக்கும், மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

மக்கள் அடர்த்தியாக உள்ள நகரங்களில் காற்று மாசுபட்டால் சுவாச பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசுபடக்கூடாது என்பது தான் உச்சநீதிமன்றத்தின் சாரம். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இத்தீர்ப்பினை அமலாக்குவதற்கு முன்னதாக மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கிட வேண்டும். பசுமைப்பட்டாசு, ரசாயனப்பொருள் கலப்பில்லாத பட்டாசுகள் தயாரிப்பதற்கும் திட்டமிட வேண்டும். இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பணிகளைசெய்திட குறுகிய காலத்தில் இயலாது.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாக்கவோ, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான பட்டாசுகளை உற்பத்தி செய்யவோ மாற்று ஏற்பாடு செய்வதற்கான காலமும் இல்லை. இப்பின்னணியில்தான், இப் பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.

நாட்டிலும், தமிழகத்திலும் ஆரோக்கியமான சமூகச்சூழலையும், ஜனநாயக சூழலையும் பல கோர நிகழ்வுகள் பாதித்து வருகின்றன. ஊழலும், மக்கள் சொத்து கொள்ளை போவதும், பாலியல் வன்மங்களும், ஆணவக்கொலைகளும், சமூக விரோத நடவடிக்கைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே இன்றைய அவசிய, அரசியல் தேவையாக உள்ளது. மாறாக, தீபாவளியன்று தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு அல்லாத நேரத்தில் பட்டாசு வெடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் ஒரு எச்சரிக்கை செய்து விடுதலை செய்வது பொருத்தமானது.

- ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி தொடர் போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் கடந்த 3 மாதமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலை பாதுகாக்கக்கோரி நேற்று சிவகாசியில் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.