சிறப்புக் கட்டுரைகள்

விமானத்தில் சிக்கும் பறவைகள் + "||" + Birds troubling in flight

விமானத்தில் சிக்கும் பறவைகள்

விமானத்தில் சிக்கும் பறவைகள்
‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.
சென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக் கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது. புறாவிலிருந்து, காக்கைகள் வரை இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதானாம்.


முதலில் இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் என்ற ஒரு பறவை மோதியதில் விமானம் பாதிப்படைந்து விமான ஓட்டிகள், அதில் பயணித்தவர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். பெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும் போதுதான் (புறப்படும் நேரத்திலும், வந்துசேரும் நேரத்திலும்) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.

சமீப காலமாகப் பறவைகளும், விமானங்களும் மோதிக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கிய காரணம். தவிர பழைய விமானங்களில் பிஸ்டன் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும் போது (விமானத்தின் முன், பின்புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் என்ஜின் அருகே பொருத்தப் பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், ஜெட் என்ஜின்கள் அறிமுகமான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் என்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு, பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் என்ஜின் திடீரென செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.

பொதுவாக விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன. ஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதாது.

விமான நிலைய பகுதிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம். விமான தளங்களை தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம். பறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ‘பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா?’ என்று தோன்றுகிறதா?

அப்படியானால் வழக்கம் போல் இயற்கை சமநிலையை பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும் என்ற எச்சரிக்கை ஒலியும் எழாமல் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் பரபரப்பு: சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம் - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
2. சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா
டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய பெண்ணை, பிரியங்கா காந்தி விமானத்தில் அனுப்பி வைத்தார்.
3. மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
4. ரஷியாவில் விமானத்தில் ஐ.எஸ். பயங்கரவாதி சிக்கினார்
ரஷியாவில் விமானத்தில் பயணம் செய்த ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் சிக்கினார்.
5. தினம் ஒரு தகவல் : பசி இல்லாத வாழ்க்கை
இன்றைக்குப் பலரும் பசியே இல்லை என்று சாதாரணமாக சொல்கிறார்கள்.