சிறப்புக் கட்டுரைகள்

செயற்கை மழை செய்வோமா...! + "||" + To make artificial rain ...!

செயற்கை மழை செய்வோமா...!

செயற்கை மழை செய்வோமா...!
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்திருக்கிறது. அது எல்லா இடங்களிலும் எதிர்பார்த்த அளவு செழிப்பைத் தருமா? இல்லை ஏமாற்றிவிடுமா? என்பது தெரியவில்லை.
மனிதனின் செய்கையால், செயற்கைத்தனங்களால் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் செயற்கையாக மழை பெய்ய வைக்கும் யுத்தியையும் மனிதன் அறிந்துதான் வைத்திருக்கிறான். மழையை செயற்கையாக உருவாக்க முடிந்தாலும் அதற்கு இயற்கை சில உதவிகளை செய்தால்தான் சாத்தியம். செயற்கை மழையை கண்டுபிடித்தவர் யார்? செயற்கை மழை எப்படி பெய்விக்கப்படுகிறது என்பது பற்றி பார்ப்போமா?


செயற்கை மழையை பெய்விக்கும் முறையானது 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வறண்ட பகுதிகளுக்கு செயற்கை மழை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. இயற்கை மழை பொய்க்கும்போது செயற்கை மழையை பல்வேறு இடங்களில் பெய்ய வைத்திருக்கிறார்கள். உலக நாடுகளில் சீனா அதிகளவு செயற்கை மழையை பெய்ய வைத்திருக்கிறது.

செயற்கை மழை பெய்விக்கும் முறையை மேக விதைப்பு (கிளவுட் சீடிங்) என அழைக்கிறார்கள். மேகங்களின் மீது குறிப்பிட்ட ரசாயன துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பதே மேக விதைப்பு அல்லது செயற்கை மழை எனப்படுகிறது.

வெள்ளி அயோடைடு, திட கார்பன்-டை-ஆக்ஸைடு, சாதரண உப்பான சோடியம் குளோரைடு, திரவ புரப்பேன் போன்றவை மேகங்களின் மீது தூவப்படும் ரசாயன பொருட்களாகும். இந்த வெளிப்புறத் துகள்களை விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உதவியுடன் மேகங்களின் மீது தூவுகிறார்கள்.

அமெரிக்க வேதியியல் நிபுணர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர் செயற்கை மழையை கண்டுபிடித்தவர் ஆவார். இவரது சோதனை முயற்சிக்கு 1946-ல் வெற்றி கிடைத்தது. ஆனால் முதல் மழையை உருவாக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலானது. 1960-ம் ஆண்டு வாக்கில் செயற்கை மழையில் ஓரளவு வெற்றி கிடைத்ததாக வரலாற்றில் பதிவாகி உள்ளது.

பெர்னார்டு வென்னிகாட் மற்றொரு முறையில் செயற்கை மழை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் செயற்கை மழை காரணிகளை மேம்பாடு செய்தார். சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் நவீன முறையில் செயற்கை மழையை தருவித்து சாதனை படைத்தனர். இன்றளவும் செயற்கை மழை உருவாக்கத்தில் சீனா நாடு முன்னணி வகிக்கிறது.

செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன. அவை : 1 காற்றழுத்தத்தை உருவாக்குதல், 2. மழை மேகங்களை திரட்டுதல், 3. மழை மேகங்களை குளிரச் செய்தல்.

பொதுவாக மேகங்களின் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கு மேல் இருந்தால் அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்கு குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வெப்ப மேகங்கள் மழையை உருவாக்குவதில்லை. இதன்மீது வெள்ளி அயோடைடு அல்லது உலர் பனிக்கட்டியை தூவும்போது அவை குளிர்ந்த மேகங்களாக மாறுகின்றன. அப்போது நீரானது பனிகட்டியாக மாறி அதிக அடர்த்தியின் காரணமாக உடைந்து வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிகட்டியானது நீராகி மழையாக பெய்கிறது.

சிலநேரங்களில் மேகங்கள் கறுத்து இருண்டிருக்கும். ஆனால் மழை பெய்யாது. மேகங்கள் அதிகளவு குளிரடைந்திருப்பதால் இந்த நிலை உருவாகி மழை பெய்யாமல் போய்விடும். இந்த நிலையில் செயற்கை மழை முறையின் மூன்றாம் நிலையை மட்டும் பயன்படுத்தி மழையை உருவாக்க முடியும். இதுபோன்ற நேரங்களில் சிறிய விமானம் மூலம் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி தூவப்பட்டால் குளிரடைந்த நிலை கலைக்கப்பட்டு மழை பெய்ய தொடங்கி விடும்.

மழை பொய்த்த, வறட்சி மிக்க பகுதிகளுக்கு செயற்கை மழை அவசியம் என்றாலும், செயற்கை மழையால் சில தீமைகளும் உண்டு. செயற்கை மழைக்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களால் மனிதனுக்கும், பல உயிரினங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வெள்ளி அயோடைடு அதிகமானால் சருமத்தின் நிறத்தை பாதிக்கும். மறதியை உண்டாக்கலாம்.

செயற்கை மழையில் உள்ள ரசாயன பொருட்களால் தாவரங்களின் வளர்ச்சி நிலையிலும், பூப்பதிலும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ரசாயன அளவு மிகுதியாவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் உருவாகிறது.

செயற்கை மழையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெய்ய வைக்கும்போது அது மற்ற இடத்தில் ஏற்படும் இயற்கை மழைப் பொழிவை பாதிக்கிறது.

செயற்கை மழை செலவு மிக்கதாகும். ஓரு ஏக்கர் பரப்பளவில் ஒருகன அடி மழையை பெய்விக்க 16 ஆயிரம் ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கம், வன அழிப்பு, அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் பருவமழை பொய்த்துப் போனது, பருவம் தவறி பெய்யும் சூழலும் ஏற்பட்டது. இது விஞ்ஞானிகளை செயற்கை மழை சிந்தனைக்குள் இழுத்துச் சென்றது. அந்த முயற்சி வெற்றி பெற்று, தேவையான இடங்களில் செயற்கை மழைப்பொழிய செய்யப்படுகிறது என்றாலும், அதன் தீமைகளாலும், அதிக செலவு பிடிப்பதாலும் செயற்கை மழை ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இயற்கையை பேணினால் செயற்கை மழையை உருவாக்க வேண்டிய அவசியமிருக்காது இல்லையா குட்டீஸ்!

எப்படி மழை உருவாக்கப்படுகிறது?

முதலில் எந்த இடத்தில் மழையை உண்டாக்க விரும்புகிறோமோ அந்த இடத்தில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும். இதற்காக கால்சியம் ஆக்ஸைடு, கால்சியம் கார்பைட், யூரியா-அம்மோனியம் நைட்ரேட் கலவை, உப்பும், யூரியாவும் கலந்த கலவை போன்றவற்றை வானில் தூவப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் வானிலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன. இதனால் அவ்விடத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மழைமேகங்கள் உருவாகுகின்றன.பின்னர் அந்த மழை மேகங்களில் யூரியா, சமையல் உப்பான சோடியம் குளோரைடு, அம்மோனியம் நைட்ரேட், உலர்பனி ஆகியவற்றைத் தூவி மழைமேகங்களின் கனமானது அதிகரிக்கப்படுகிறது. இது மேகங்களை திரட்டும் இரண்டாம் நிலையாகும். இப்போது மூன்றாம் நிலையாக, ஒன்று திரட்டப்பட்ட மேகங்களின் மீது வெள்ளி அயோடைடு, உலர் பனிக்கட்டி ஆகியவை தூவப்பட்டு மேகங்கள் குளிர்விக்கப்படுகின்றன‌. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளியானது மழையாகப் பெய்கிறது. ஒவ்வொரு நிலையிலும் சூழ்நிலைக்கேற்ற முறையில் உத்திகளை கையாண்டு மழையை பெய்விக்கிறார்கள்.

சுவாரசியங்கள்...

வியட்நாம் போரில் ஆபரேசன் ‘பாப்ஐ’ என்ற பெயரில் செயற்கை மழை பொழிவித்து எதிரிகளின் போர்த்தளவாடங்கள் கொண்டு செல்லும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன.சீனா ஆண்டு தோறும் 55 பில்லியன் டன் அளவு செயற்கை மழையை பெய்விக்கிறது. 2008-ம் ஆண்டு பிஜீங் ஒலிம்பிக் போட்டியின்போது அந்த பகுதியில் காற்று மாசுகளை சுத்தம் செய்யும் வகையில் செயற்கை மழையை பெய்வித்தது சீனா.

இடியின்றி மழை பெய்யவும், விமான நிலைய பகுதிகளில் பனிமூட்டத்தைப் போக்கவும், மேக விதைப்பு முறையில் செயற்கை மழையை உருவாக்குகிறது அமெரிக்கா.

தமிழ்நாட்டில் 1985 மற்றும் 2003-ல் வறட்சியின் காரணமாக செயற்கை மழை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் செயற்கை மழை முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும் அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றே கூறப் படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.