சிறப்புக் கட்டுரைகள்

30 வயதில், 60 குழந்தைகளுக்கு தாயானவர்..! + "||" + At age 30, a mother of 60 children

30 வயதில், 60 குழந்தைகளுக்கு தாயானவர்..!

30 வயதில், 60 குழந்தைகளுக்கு தாயானவர்..!
அமெரிக்காவை சேர்ந்த மேகி டாய்னிக்கு 30 வயதுதான் ஆகிறது. அதற்குள் 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார்.
இந்த கட்டுரையை படித்து முடிப்பதற்குள், அவரது குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த மேகிக்கு, கல்வி பாடத்தை விட, வாழ்க்கை பாடத்தை படிக்க ஆசை. அதனால் 18 வயதிலேயே உலகை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார். அப்படி நேபாளத்திற்கு சுற்றுலா வந்தபோது, அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைமுறை மேகிக்கு பிடித்துபோக, அங்கேயே தங்கிவிட்டார். அங்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் அதிகம் என்பதால், ஏழை-எளிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறார். இப்படி ஒன்று... இரண்டாக... குழந்தைகளை தத்தெடுத்து, இன்று 60 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். மேகிக்கு காதல் திருமணமாகி குழந்தை ஒன்றும் இருக்கிறது. பாரபட்சமின்றி அனைவரையும் அன்பாக வளர்த்து வருகிறார். அவரிடம் பேசுவோம்.


60 குழந்தைகள், உங்களை ‘அம்மா’ என்று அழைக்கும் தருணத்தை நீங்கள் எதிர்பார்த்தது உண்டா?

நேபாளத்திற்கு வரும் வரை அப்படி ஒரு எதிர்பார்ப்பு இல்லவே இல்லை. ஆனால் நேபாளம், என்னை 60 குழந்தைகளின் தாயாக மாற்றிவிட்டது. இங்கு வாழும் மலைவாழ் மக்கள், ஏழ்மையானவர்கள். மலைத்தோட்டங்களிலும், இயற்கை பராமரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு தங்களது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். உணவிற்கே கஷ்டப்படும் இவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனி. அதை எட்டும் கனியாக மாற்றுவதே என் வேலை.

முதலில் ஓரிரு குழந்தைகளை தத்தெடுத்து, கல்வி கட்டணம் செலுத்தி வந்தேன். ஆனால் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, நானே சொந்தமாக கோபில்லா மலைப்பகுதியில் பள்ளி ஒன்றை கட்டிவிட்டேன். இந்த பள்ளியில் இணையும் அத்தனை குழந்தைகளும், என்னுடைய குழந்தைகளே. அவர்களுக்கு கல்வி, உணவு, நல்ல எதிர்காலத்தை இலவசமாக கொடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாகிறது. அந்தவகையில்தான் நான் 60 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன்.

உங்களுடைய குடும்பம் அமெரிக்க பாரம்பரியத்தை பின்பற்றுகிறதா? இல்லை நேபாள பாரம்பரியத்தை பின்பற்றுகிறதா?

இரண்டுமே இல்லை. நாங்கள் அன்பு வழி பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம். காலை முதல் மாலை வரை படிப்பு, இடை இடையில் விளையாட்டு, இரவில் கூட்டாக உணவு, அதற்குபின் ஆட்டம் பாட்டம்... என புதுவிதமான ‘டைம்-டேபிள்’ வகுத்திருக்கிறோம். இந்த டைம்-டேபிள் குழந்தைகளுக்கு சலிப்பை ஏற்படுத்தாது.

உங்களது திருமணம் 60 குழந்தைகளின் முன்னிலையில் நடந்ததை பற்றி கூறுங்கள்?


கோபில்லா பள்ளி பற்றியும், 60 குழந்தைகள் பற்றியும் தெரிந்துகொண்ட ஆவணப்பட இயக்குனர் ஜெரிமி, என்னை காண நேபாளம் வந்திருந்தார். அதோடு ஒரு பிரத்யேக ஆவணப்படத்தை தயாரித்தார். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நாங்கள் காதல் வயப்பட்டோம். எங்களது திருமணம் நேபாள முறைப்படி, குழந்தைகளின் முன்னிலையில் நடந்தது. அம்மா என்று மட்டுமே சொந்தம் கொண்டாடியவர்களுக்கு, அப்பாவும் வந்துவிட்டார். அதோடு, ஒரு குட்டி தம்பியும் வந்துவிட்டான். அதனால் எங்களது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தின்போது, அமெரிக்காவிற்கு செல்லவில்லையா?

இல்லை. முறையான மருத்துவ வசதியில்லாத இடத்தில், சுகப்பிரசவமாகும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக எனக்கு கிடைத்தது. மலைவாழ் பெண்கள், கணவர் ஜெரிமி முன்னிலையில் எனக்கு குழந்தை பிறந்தது.

அடுத்த இலக்கு என்ன?

என்னுடைய குழந்தைகளை மருத்துவர், வழக்கறிஞர், கட்டுமான பொறியாளர், மென்பொறியாளர், இயற்கை ஆர்வலர்... என நல்ல சமூகத்திற்கு தேவையான தூண்களாக மாற்றி, மலைவாழ் மக்களின் சமுதாயத்தை சக்திவாய்ந்த சமுதாயமாக மாற்ற இருக்கிறேன். குறிப்பாக என்னுடைய சொந்த மகனையும் நேபாளத்திலேயே வளர்த்து, இங்கேயே தங்கவைக்க இருக்கிறேன்.

நேபாளத்திற்கு வராமல், அமெரிக்காவிலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்தது உண்டா?

நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில் இருந்திருந்தால் பணக்காரியாக இருந்திருப்பேன். ஆனால் 60 குழந்தைகளுக்கு தாயாகி இருக்க முடியாது. ஏன்..? திருமணம் நடந்திருக்குமா, என்பது கூட சந்தேகமாகவே இருக்கிறது. அந்தவகையில் நேபாளம் என்னுடைய வாழ்க்கையின் பொக்கிஷம். இதை தொலைத்துவிட மாட்டேன்.