உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 11 Nov 2018 11:08 AM GMT (Updated: 11 Nov 2018 11:08 AM GMT)

அவர் விளையாட்டு வீரர். அவருக்கு ஒரு காதலி இருந்தாள். பெற்றோரிடம் தனது காதலை மறைத்த அவர், பெற்றோர் சொந்த ஊரில் அவருக்கு பெண் தேடியபோது மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

 வங்கியில் வேலை பார்த்த ஒரு பெண்ணை அவருக்கு பெற்றோர் பேசி முடித்தார்கள். தனது திருமணத்தை காதலிக்கு தெரியாமல் மறைத்து விடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அது எப்படியோ காதலிக்கு தெரிந்து விட்டது.

காதலருக்கு திருமணமானதும், அவள் அவருடனான உறவில் இருந்து விலக முடிவு செய்தாள். ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவர் காதலியோடும் குடும்பம் நடத்த விரும்பினார். காதலி அதற்கு சம்மதிக்காமல் விலகியே இருந்தாள்.

அந்த நபருக்கு திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், காதலர் தினம் வந்தது. அன்று தனது முன்னாள் காதலியை அவர் போனில் தொடர்பு கொண்டார். அவள் ‘உங்களுக்கு திருமணமாகி விட்டது. இனியும் என்னிடம் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டு பிடிகொடுக்காமல் பேசினாள். உடனே அவர், ‘உனக்கு மிகச் சிறந்த காதலர் தின பரிசு ஒன்று தரப்போகிறேன். இது வரை உலகில் யாருமே இதுபோன்ற பரிசை எந்த காதலிக்கும் தந்திருக்க மாட்டார்கள். அந்த பரிசு, நம் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை இல்லாமல் செய்து நம்மை இணைத்துவிடும்’ என்று சொல்லிவிட்டு, அவர் போன் இணைப்பை துண்டித்தார். அவருக்குள் கொடூரமான திட்டம் ஒன்று உருவாகியிருந்தது.

கொடூர மன நிலையில் வீட்டிற்கு வந்தவர், துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்து தனியாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றதுபோல் காட்சிகளை ஜோடித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி காதலியை நோக்கி ஓடினார். அவளிடம், ‘என் மனைவியின் உயிரை எடுத்து விட்டேன். அதுதான் நான் உனக்கு தரும் காதலர்தின பரிசு. இனி நமக்கு எந்த தடையும் இல்லை. வா நாம் சேர்ந்து வாழலாம்’ என்றார்.

அவள் அதிர்ந்துபோய், ‘கொலைகாரப் பாவியே இங்கிருந்து ஓடிப்போய்விடு. உன்னை போன்ற கொடூரமானவனை நான் காதலித்ததே தவறு. நீ இங்கிருந்து போகாவிட்டால் நானே உன்னை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன்’ என்று கத்தியதும், அங்கிருந்து திரும்பி நேராக தனது வீட்டிற்கு வந்தார்.

வீட்டில் இருந்துகொண்டு போலீசை அழைத்து, தனது மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கொடுத்தார். போலீசார் வந்தபோது அழுது புலம்பிய அவர், போலீசார் முன்னால் அப்படியே நிலைகுலைந்து மூர்ச்சையற்று விழுவது போல் நடித்தார். அதனை உண்மை என்று நம்பிய போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணை தொடங்குவதற்குள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். தனது தோற்றத்தை மாற்றினார். குடும்பத்தினருடனான தொடர்புகளையும் துண்டித்துவிட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.

அந்த காலகட்டத்தில் இவரோடு கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் இவரை திடீரென்று சந்தித்தார். இந்த கொலையாளியை பற்றிய உண்மைகளை தெரியாத அவர், தனக்கு ஏதாவது வேலைகிடைக்க உதவும்படி கூறினார். இவரும், ‘வேலை வாங்கித்தருகிறேன். உன் ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வா’ என்றார். அவரும் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு இரவோடு இரவாக அங்கிருந்து தப்பி, அடுத்த மாநிலத்திற்கு சென்றுவிட்டார்.

அவைகளைவைத்து அடு்த்த சதித்திட்டத்தை நிறைவேற்றினார். சான்றிதழில் இருந்த பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார். அந்த சான்றிதழ்களைக் காட்டி பல நிறுவனங்களுக்கு இன்டர்வியூ சென்றார். கடைசியில் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின்பு, அங்கு வேலை பார்த்த பெண் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையானார். வருடம் 22 லட்சம் சம்பளத்தில் வளமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்.

இதற்குள், அவர் மனைவியை கொலை செய்து 15 வருடங்கள் கடந்திருந்தன. போலீசார் தேடித்தேடி களைத்துப் போயிருந்தனர். ஒரே ஒரு உயர் போலீஸ் அதிகாரி மட்டும் சளைக்காமல் கண்காணித்துக் கொண்டே இருந்தார். பெயர், ஊர், தோற்றம் அனைத்தையும் அவர் மாற்றியிருந்ததால் கண்டுபிடிக்க திணறிய போலீஸ், விளையாட்டில் அடிபட்டு கை விரல் ஒன்று வளைந்திருந்த அடையாளத்தை வைத்து துப்புதுலக்கி, பொறிவைத்து பிடித்து விட்டார்கள். இப்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த கொலையாளியும், கொலையான அவரது மனைவியும் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர் மனைவியை கொலை செய்தது, அகமதாபாத்தில். பிடிபட்டது பெங்களூருவில்.

மனுஷங்க எப்படி எல்லாம் தப்பு செய்கிறாங்க பார்த்தீங்களா..?!

- உஷாரு வரும்.

Next Story