ஓலைச்சுவடிகளை பாதுகாப்போம்...!


ஓலைச்சுவடிகளை பாதுகாப்போம்...!
x
தினத்தந்தி 12 Nov 2018 6:55 AM GMT (Updated: 12 Nov 2018 6:55 AM GMT)

பழந்தமிழரின் வாழ்க்கை பனையோடு இணைந்த வாழ்க்கை. அதனால்தான் பழந்தமிழ் இலக்கியங்களை அவர்கள் பனை ஓலைகளில் எழுதி வைத்தார்கள்.

பலநூறு ஆண்டுகளின் அறிவு புதையலைத் தன்னுள்ளே வைத்துக்கொண்டுள்ள சுமார் 30 ஆயிரம் அரிய தமிழ்ச்சுவடிகள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் கரையானுக்கு உணவாகிக் கொண்டிருக்கின்றன. நம் மெத்தனத்தால் இன்னும் எத்தனைப் பொக்கிஷங்களை இழக்கப் போகிறோமோ தெரியவில்லை.

பழந்தமிழர் தங்கள் வாழ்வியலை இலக்கியமாக, சோதிடமாக, மருத்துவமாக, பனை ஓலைகளில் எழுதி வைத்ததும், அச்சுவடிகளைப் படியெடுத்து பல இடங்களில் தனித்துவமான பாதுகாப்பு முறைகளைக் கொண்டு பாதுகாத்து வைத்ததும், தமிழரின் ஆவணப்படுத்தும் திறனுக்குச் சான்று கூறுவதாய் அமைகின்றன.

ஒரு சுவடியின் ஆயுள் முன்னூறு முதல் நானூறு ஆண்டுகள் என்ற நிலையில் அடுத்தடுத்த நூறு ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் பெரிதும் முயன்றார்கள். மூலஓலைச்சுவடி கால மூப்பால் சிதைந்து போகும் நிலைவரும்போது, உடன் அவற்றை நகலெடுத்து அடுத்தடுத்த காலங்களுக்கு அவர்கள் காத்து கொண்டுசென்றார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான இலக்கண இலக்கியச் சுவடிகள் இப்படித்தான் காக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கொடையாகத் தரப்பட்டன.

சுவடிகளின் அருமை உணர்ந்தவர்கள் பழந்தமிழ் மன்னர்கள். தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜசோழன், கரையானுக்கு இரையாகிக் கிடந்த ஆயிரக்கணக்கான தமிழ்ச் சுவடிகளை நம்பியாண்டார் நம்பியின் உதவியோடு பன்னிருதிருமுறைகளாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொகுத்த புகழ் உடையவர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி, ஆயிரக்கணக்கான தமிழ், தெலுங்கு, வடமொழிச் சுவடிகளை காத்து ஆவணப்படுத்தினார். ஆதீனங்கள் ஆயிரக்கணக்கான சுவடிகளைக் காத்து தந்துள்ளனர்.

தள்ளாத வயதிலும் ஊர் ஊராய் அலைந்து திரிந்து ஓலைச்சுவடிகளில் மறைந்துகிடந்த 90 இலக்கியங்களைச் சமய வேறுபாடின்றி தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் பெரிதும் முயன்று பதிப்பித்து தமிழுக்குத் தந்தார். சங்க இலக்கியத்தின் ஐங்குறுநூறு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை, அரும்பத உரையுடன் புறநானூறு போன்ற இலக்கியங்களை பதிப்பித்தார். திருநெல்வேலி பகுதியில் மறைந்து கிடந்த சங்கரநயினார் கோயிலந்தாதி, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு போன்ற அரிய சிற்றிலக்கியங்களைத் தேடிக்கண்டுபிடித்து பதிப்பித்தார். திருநெல்வேலியில் அரிய சுவடிகள் இருக்கின்றன என்றறிந்த உ.வே.சா., திருநெல்வேலியில் தங்கி ஓராண்டு சுவடிகளை தேடியலைந்தபோது தான் தமிழகம் முழுக்க தேடிய அரிய இலக்கியச் சுவடிகள், திருநெல்வேலி வசித்த ஈஸ்வரபிள்ளை வீட்டில் கட்டுகட்டாய் இருப்பதைக் கண்டு “தமிழ்த்தெய்வத்தின் கோவில்போல் அந்த வீடு எனக்குத் தெரிந்தது” என்று எழுதினார். திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் இருநூறு ஆண்டுகள் பழைமையான பத்துப்பாட்டுச் சுவடிகளை திருப்பாற்கடல்நாதகவிராயர் வீட்டில் உ.வே.சா. கண்டார். உ.வே.சா. பெரிதும் முயன்று பதிப்புப் பணியில் இறங்கியிருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான அரிய இலக்கியங்களைக் கரையான்கள் தின்றிருக்கும்.

யாழ்ப்பாணம் நகரின் சிறுப்பிட்டி ஊரைச் சார்ந்த தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை ஓலைச்சுவடிகளில் மறைந்துகிடந்த பழைமையான நூல்களை அச்சுக்குக் கொண்டுவந்தார். தொல்காப்பியப் பொருளாதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணியைச் சுவடியிலிருந்து அச்சு வாகனமேற்றிய பெருமை இவருக்கு உண்டு. வெவ்வேறு இடங்களில் கிடைத்த 10 கலித்தொகைச் சுவடிகளைப் பெரிதும் முயன்று ஒப்புநோக்கி கலித்தொகை எனும் நூலைப் பதிப்பித்தார்.

தமிழகத்தின் சுவடிக் களஞ்சியமான தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் 46,000 சுவடிகள் உள்ளன. தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மொழிகளைச் சார்ந்த அரிய சுவடிகளை இந்த நூலகம் பாதுகாத்து வருகிறது. அழிந்து போகும் நிலையில் உள்ள தமிழ்ச்சுவடிகளை அட்டவணைப்படுத்துவதோடல்லாமல் அவற்றை மின்படியாக்கம் செய்து பாதுகாத்து வருகிறது. நூற்றுக்கணக்கான தமிழ்ச் சுவடிகளை நூல்களாகவும் பதிப்பித்துள்ளது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணை நூல்களை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

தனிமனிதர்களின் குடும்பச் சொத்தாகப் பராமரிப்பின்றி கிடக்கும் தமிழ்ச்சுவடிகளை மாவட்ட வாரியாகச் சேகரிக்கவேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்ச்சுவடிகள் ஆவணக் காப்பகம் உருவாக்கப்படவேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரித் தமிழ்த்துறைகள் சுவடிகள் வாசித்தல், பாதுகாத்தல், இணையத்தில் மின்நூலகம் ஏற்படுத்தி அவற்றை எண்ம முறையில் ஆவணப்படுத்துதல் தொடர்பான பயிலரங்குகளை நடத்தவேண்டும். ஆங்காங்கே இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் அரியநூல்களை ஒளிப்படம் எடுத்து இணையத்தில் ஒரே இடத்தில் உள்ளடு செய்துவைக்க வசதிகள் செய்யவேண்டும். அரிய சுவடிகளை மின்நூல்களாகப் பதிக்கவேண்டும். தமிழ்ச்சுவடிகள் ஆய்வுகள் நிகழ்த்த அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தனித்துறைகள் உருவாக்கவேண்டும். நாம் இவற்றை செய்யத் தவறினால் இருக்கும் சுவடிகளையும் இழக்க வேண்டியிருக்கும். கணினித் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்துகொண்டு அரிய சுவடிகளை மின்னனு முறையில் எண்மப்படுத்தாவிட்டால் நாம் தமிழுக்கு அநீதி இழைத்தவர்களாய் மாறிப்போவோம். ஆங்காங்கே தமிழக கிராமங்களில், கிராமக்கோவில்களில், வீடுகளில் மூட்டைகட்டப்பட்டு குவியலாய் கிடக்கும் சுவடிப் பொக்கிஷங்களை சேகரிப்போம், பின் தரம் பிரித்து வகைதொகைப்படுத்துவோம். அதன்பின் அவற்றை இணையத்தில் ஆவணப்படுத்துவோம். அம்முயற்சி சுவடி ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழுக்கே வளம் சேர்க்கும். உலகின் தொன்மையும், தொடர்ச்சியும் உடைய மொழி நம்மருமைத் தமிழ் மொழி. அது தந்த அறிவுக் களஞ்சியங்களை நாம் முறையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தருவது நம் கடமை.

-பேராசிரியர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி

Next Story