சர்க்கரை நோயை வென்றிடுவோம்...!


சர்க்கரை நோயை வென்றிடுவோம்...!
x
தினத்தந்தி 14 Nov 2018 11:01 AM GMT (Updated: 14 Nov 2018 11:01 AM GMT)

இன்று (நவம்பர் 14-ந்தேதி) உலக சர்க்கரை நோய் தினம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து 1991-ம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தை உருவாக்கின. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் உலக சர்க்கரை நோய் நிறுவனமும், உலக சுகாதர நிறுவனமும் இந்த ஆண்டு “குடும்பமும் சர்க்கரை நோயும்” என்ற குறிக்கோளுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறியுள்ளது.

நம் உடம்பில் பல தொழிற்சாலைகள் இரவு பகல் பாராமல் இயங்குகின்றன. இவை இயங்குவதற்கு தேவையான எரிபொருள் நாம் உண்ணும் உணவில் இருந்தே மாவுப் பொருட்கள் மூலமாக கிடைக்கின்றன இந்த மாவு பொருட்களின் சக்தி நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் அனுப்பும் வேலையை சரியாக செய்வது நம் உடம்பில் உள்ள கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினே. இந்த இன்சுலின் சரியாக சுரக்காவிட்டாலோ, அல்லது நம் உடம்பு அதை சரியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அல்லது அதற்கு எதிரான, சுரப்புகள் அதிகமாகி விட்டாலோ ஏற்படுவதுதான் சர்க்கரைநோய்.

சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல.சாபமும் அல்ல. இது நம் இயக்கத்தின் ஒரு மாறுபாடு நம்மோடுதான் இது இறுதிவரை இருக்கும் ஒரு நண்பனைப் போல நாம் நம் நண்பரிடத்தில் வெளிப்படையாக துரோகம் இழைக்காமல் பழகினால் மட்டும்தான். அவன் நமக்கு ஒத்துழைப்பான் அதுபோல்தான் சர்க்கரை நோயும் நாம் சரியாக கவனமுடன் இருந்தால் 100 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழலாம்.

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும் :முதல் வகை இன்சுலின் சுரக்காமலே அல்லது மிகக் குறைந்த அளவில் சுரந்து இருப்பதினால் வருவது. இரண்டாம் வகை நம் உடம்பு இந்த இன்சுலினுக்கு ஈடு கொடுக்காமலோ, அல்லது குறைவாக சுரந்தாலோ அல்லது இரண்டினாலேயே அல்லது அதற்கு எதிரான சுரப்புகளாலோ வருவது. இதில் நாம் எந்த வகை என்று அறிய வேண்டும். இதற்கு நமது பாரம்பரியமும் மிகமுக்கியமான காரணமாகும்.

இப்போது அகில உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திற்கு வரக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன, இதற்கு முக்கிய காரணம் நமது உணவுப் பழக்க வழக்கமே. அதுமட்டுமல்ல நாம் இப்போது, கலாசாரம், உணவு முறை கல்விமுறை இவற்றில் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறோம் உதாரணத்திற்கு முதலாவதாக உணவில் இருக்கும் மாவுப் பொருள் கிடைப்பது நம் பகுதியில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை, ஆப்பிரிக்காவில் உருளைக்கிழங்கு மேலை நாடுகளில் ஓட்ஸ் என்று சொல்லலாம். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த நான்கையுமே எடுத்துக்கொள்கிறோம். அப்பொழுது நம் ரத்தத்தில், செல்களுக்கு அனுப்பியது போக அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் தங்கி விடுகிறது. நம் பகுதியில் கிடைக்கும் அரிசியை அளவோடு எடுத்துக் கொள்வது தான் நமக்கு நல்லது அடுத்ததாக மாவுப்பொருள் எடுத்துக்கொள்ளும் போது மென்று சாப்பிடகூடிய அளவில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் அப்போதுதான், நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து அரைப்படும் போது, இன்சுலின் சுரப்பதற்கு ஏதுவாய் இருக்கும்

மூன்றாவதாக நம் உடல் உறுப்புகள் வேலை செய்தால்தான் செல்களுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் அதிக அளவு குளுக்கோஸ் செல்களுக்கு தேவைப்படாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

நான்காவதாக நம் உடம்பில் தொப்பை அதிகமாகிவிட்டால், நம் உடம்பில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது அதன் மூலமும் குளுக்கோஸ் ரத்தத்திலேயே தங்கிவிடும். ஐந்தாவதாக நாம் டென்ஷனாகவே தொடர்ந்து ஒய்வின்றி கண் விழித்தோ மூளைக்கு வேலை அதிகம் கொடுத்தால் இன்சுலினுக்கு எதிராக சுரப்புகள் அதிகமாகி இன்சுலினை அழித்து விடும் அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும்.

ஆறாவதாக தொற்று நோய் கிருமிகளாலோ கணையத்தில் தொற்று, கட்டி போன்றவை தோன்றினாலோ இன்சுலின் சுரப்பதற்கு பாதிப்பு ஏற்படும். அதன் மூலமும் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும். மேலே கூறியவற்றில் நாம் எந்த வகையில் பொருந்துகிறோம் என்று மருத்துவர்கள் கணித்து அதற்குண்டான மருத்துவமுறைகளை அளிப்பார்கள் அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் மகிழ்ச்சியாக வாழலாம். உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு,முறையான உடற்பயிற்சி மன அமைதி, சரியான உடல் எடை வருடாந்திர உடல் பரிசோதனை அவசியம்.வாழ்க்கை மகிழ்ச்சியாக நீண்டநாட்கள் தொடர வேண்டுமென்றால் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம் இந்தநாளில் சர்க்கரை நோயை வென்றிட உறுதி ஏற்போம்.

டாக்டர் எஸ். வீரபாண்டியன்,சர்க்கரை நோய் நிபுணர், செம்பனார்கோயில்.

Next Story