சகிப்புத்தன்மையை வளர்ப்போம்...! மனிதநேயம் காப்போம்...!


சகிப்புத்தன்மையை வளர்ப்போம்...! மனிதநேயம் காப்போம்...!
x
தினத்தந்தி 15 Nov 2018 7:19 AM GMT (Updated: 15 Nov 2018 7:19 AM GMT)

பகுத்தறிவுள்ள மனிதனின் தலையாயப்பண்பு, சகிப்புத்தன்மையாகும். வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.

நாளை(நவம்பர்16-ந்தேதி) சர்வதேச சகிப்புத்தன்மை தினம்,

பகுத்தறிவுள்ள மனிதனின் தலையாயப்பண்பு, சகிப்புத்தன்மையாகும். வாழ்க்கையில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரிடமும் குறிப்பாக தலைமைப் பண்புகளில் சிறந்தவர்களிடம் காணப்படும் சீரியகுணம் சகிப்புத் தன்மையாகும்.

உலகத்தில் வாழும் 750 கோடி மக்களும் வெவ்வேறானவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. சமூகங்களாக வாழும் மக்களிடையே பொது பண்பு நலன்கள் உள்ளன. தனி மனிதனோ அல்லது ஒரு குழுவினருக்கோ அவர் தம்மொழி, கலாசாரம், வாழ்வியல் முறைகள், குறிப்பாக உணவு, உடை இவைகள் தனித்தன்மை வாய்ந்தவை மற்றும் இன்றியமையாதவை. இன்றைக்கு தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள அபரிதமான வளர்ச்சிகளாலும், நாடுகளிடைய பயணிக்கும் நேரங்கள் குறைந்து விட்டமையாலும் உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது, மேலும், உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், வெவ்வேறு நாடுகளில் மக்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளது. புதிதாக குடியேறும் நாட்டிலுள்ள கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணுவதா, அல்லது இது நாள் வரை தான் பழகி வந்ததை தொடர்வதா என்கிற குழப்பம் ஏற்படுவது இயல்பு. அது போல தனது நாடு, தனது மொழி, தனது கலாசாரம் முக்கியம். அவைகள், புதிதாக வருபவர்களிடமிருந்து காக்கப்படவேண்டும் என்று அந்நாட்டு குடிமக்கள் எதிர்பார்ப்பது நியாயம். இத்தகைய முரண்பாடுகளை களைய, வளர்த்துக் கொள்ள வேண்டியது சகிப்புத்தன்மையும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் நற்பண்புகள். உதாரணமாக, புலால் உணவை வாழ்வில் சுவைக்காதவரும், அதை அறவே விரும்பாதவரும், புலால் சாப்பிடுபவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லா நேரங்களிலும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அவைகளால் நமக்குள் ஏற்படும் பாதிப்பினையோ அல்லது அதற்கு எதிர்வினையாற்றுவதையோ நாம் தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் வேடிக்கையாக ஏதோ சொல்லி விடுகிறார் என்று வைத்து கொள்வோம். அது நம்மை காயப்படுத்தி விடுகிறது. நமக்கு முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று உடனே அந்த நபர் மீது கோபம் கொண்டு பதிலுக்கு அவமானப்படுத்துவது. இப்படி செய்வதன் மூலம் அங்குள்ள சூழ்நிலையை இறுக்கமாக்கி விடுகிறோம். அதே நேரத்தில் ஒரு புன்னகையோடு அதனை கடந்து செல்லும் போது சூழ்நிலையை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரையும் வென்று விடுகிறோம். சிறைச்சாலையில் கொலைக்குற்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் ஒரு சில நொடிகளில் உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பில் குற்றம் செய்ததாக கூறியுள்ளனர். ஒரு நொடியில் தவற விட்ட சகிப்புத்தன்மை காலம் முழுவதும் அவர்களை சிறைக்குள்ளிருந்து வருந்த செய்கிறது.

சமூகத்தொண்டாற்றுபவர்களிடம் காணப்பட வேண்டியது சகிப்புத்தன்மை. கொல்கத்தா வீதிகளில் சுற்றிய அனாதை குழந்தைகளை விடுதியில் வைத்து பராமரித்த அன்னை தெரசா, குழந்தைகளுக்காக கடை கடையாக ஏறி உணவு பொருட்களை தானமாக பெறும் போது, ஒரு கடைக்காரர் அன்னை நீட்டிய கைகளில் எச்சில் துப்பி விடுகிறார். அதனால் சற்றும் கவலை கொள்ளாது, கைகளை துடைத்துக் கொண்டு, எனக்கு எது கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து விட்டீர்கள், ஆனால், பசியால் வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குவேண்டியதை தாருங்கள் என்று மீண்டும் கை நீட்டியபோது, கடைக்காரர், வெட்கி, மனமிரங்கி தேவையான பொருட்களை தாராளமாக வழங்கினார்.

இன்றைய அவசர உலகத்தில் குறிப்பாக இளைஞர்கள் பழகிக் கொள்ளவேண்டியது சகிப்புத்தன்மை. எதிலும் சிறந்ததே கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். காரணம் இன்றைக்கு வளரும் சூழ்நிலை அப்படி. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும். தொழிலாக இருந்தாலும், குடும்ப வாழ்வாக இருந்தாலும் தேவையானது கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால் மனஉளைச்சல், மன அழுத்தம், சச்சரவுகள். இதன் காரணமாக இளம் தம்பதியினர்கள் பலர் திருமணமான சிலமாதங் களிலேயே மணவிலக்கு பெற முடிவெடுக்கின்றனர். சென்னையில் பெருகி வரும் குடும்பநல வழக்காடு மன்றங்களும். அதிகரித்து வரும் மணவிலக்கு வழக்குகளுமே இதற்குச் சான்று. இல்லற வாழ்வு இன்புற்றிருக்க தேவையானது சகிப்புத்தன்மையே. குடும்பத்தில் நாம் பழகும் அத்தகைய பண்பு, நமதுதொழிலிலும் விரிவடைகிறது. தொழிற் செய்பவருக்கு அவசியமானது பொறுமையும், சகிப்புத்தன்மையும்ஆகும்.

சகிப்புத்தன்மை நாம் சார்ந்தவர்களிடம் மட்டுமல்ல, முன்பின் தெரியாதவர்களிடம் வெளிப்படுத்துதலே மிக முக்கியமானது. சாலைகளில், பேருந்துகளில் பயணிப்பவர்கள், வாகன ஓட்டிகள் இவர்கள் எல்லாம் ஈடுபடும் வாக்குவாதங்கள், சண்டைகள் நாம் அன்றாடம் காணும் காட்சி. இவைகளால் தீமைகள் தான் கூடுகிறது.

அதே நேரத்தில் சமூக அவலங்களை சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நான் கண்டு கொள்ளமாட்டேன் என்று சொல்வதை ஏற்கமுடியாது. எங்கள் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாற்றத்தையும், சிரமத்தையும் சகித்துக்கொண்டு நடந்து செல்கிறோம் என்று சொல்வது பொது ஒழுங்கிற்கும், சமூக கடமைக்கும் எதிரானது. சமூக அவலங்களை கண்டு பொங்கி எழுதல் நமது தார்மீக கடமை. அந்தநேரத்தில் சகிப்புத்தன்மையுள்ளவன் என்றுகூறிக்கொள்வது பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும்.

சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். இதற்கு, அவர்கள் நிலையிலிருந்து உணரவேண்டும்.அடுத்து, வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும் அதனை அங்கீகரிக்கவும், பாராட்டவும் பழகவேண்டும். நம்மிடம் எத்தனை வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம், அடிப்படையில் நாம்ஒருவர்; மனிதஇனம், என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சக மனிதனை மதித்தல், அனைவருக்கும் வாழும் உரிமை, சமூகநீதி இவைகள் தான்அடிப்படை. இதற்காக, நாம் சுமக்கும் கலாச்சாரம், பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம் இழக்க வேண்டியிருந்தாலும், தயங்ககூடாது. இதுவே நாம் உலக சகிப்புத்தன்மை தினத்தில் எடுத்துக் கொள்ளும் சூளுரையாக இருக்கட்டும்.

நா. வெங்கடேஷ், திறன் மேம்பாட்டாளர்

Next Story