பெருநட்சத்திர வெடிப்பு


பெருநட்சத்திர வெடிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 8:58 AM GMT (Updated: 16 Nov 2018 8:58 AM GMT)

அது என்ன பெருநட்சத்திர வெடிப்பு? என நீங்கள் கேட்கலாம்.

சூரியனைவிட பல மடங்கு பெரிய நட்சத்திரம் தன் ஆயுளின் முடிவில் மிக மிக பிரமாண்டமாக வெடித்துச் சிதறி அணைந்து போவதுதான் பெருநட்சத்திர வெடிப்பு.

இந்த நிகழ்வு சூரிய குடும்பத்துக்கு அருகில் நடக்கும் விஷயம் அல்ல. இவ்வளவு பிரமாண்டமாக வெடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் நமக்கு அருகில் இல்லை; அப்படி நிகழ்ந்தால், பூமி பெரும் ஆபத்தை சந்திக்கக்கூடும். ஆனால் கற்பனையே செய்துபார்க்க முடியாத தூரத்தில் எவ்வளவோ பெரிய நட்சத்திரங்கள் அடிக்கடி வெடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி வெடிக்கும்போது பிரபஞ்ச வெளியில் அவை வாண வேடிக்கை நிகழ்த்துகின்றன.

இதைப்பற்றி பெரும் ஆராய்ச்சி நிகழ்த்தி வருகிறார், ராபர்ட் ஓவன் இவான்ஸ் என்பவர்.

உண்மையில், இவான்சிடம் இருப்பது, முதுகில் தூக்கிச் செல்லக் கூடிய அளவிலான தொலைநோக்கிதான். அந்தத் தொலைநோக்கியைத் தூக்கிக்கொண்டு தன் வீட்டுப் பரணுக்குச் செல்வார். ஓர் ஆள் மட்டும் உட்கார்ந்து பார்க்கக்கூடிய இடம் இருக்கும். அந்த இடத்திலிருந்து பார்க்கக் கிடைக்கும் வானமோ மிகச் சிறிய அளவுதான். அந்த சிறிய வானத்தில்தான் பெருநட்சத்திர வெடிப்பு. அப்படிப்பட்ட பெருநட்சத்திர வெடிப்புகளை (தொலைநோக்கியில்) வேடிக்கைப் பார்ப்பதுதான் இவான்சின் முக்கிய வேலை. 42 முறை பெருநட்சத்திர வெடிப்பை பார்த்த சாதனை இவருக்கே சொந்தம்.

இந்த 42 நட்சத்திரங்களை இவான்ஸ் வெறும் 42 நாட்களில் பார்த்துவிடவில்லை. கிட்டத்தட்ட 55 வருடங்களின் பெரும்பான்மையான இரவுகளில் நடத்திய வேட்டையின் பலன் இது. அப்படியென்றால் எவ்வளவு நேரம் வானத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார் இவான்ஸ் என கேட்க தோன்றும்.

பெருநட்சத்திர வெடிப்பின் காட்சி என்பது அவருக்கு உறுதி அளிக்கப்பட்ட ஒன்றல்ல. மிகக் குறைந்த கால அளவில் அடுத்தடுத்து சில பெருநட்சத்திர வெடிப்புகளைப் பார்க்க நேரிட்ட அனுபவத்தைப் போலவே மாதக் கணக்கில் வானத்தை துழாவியும் பெருநட்சத்திர வெடிப்பு இவான்ஸின் கண்ணில் படாமல் போன அனுபவமும் நிறைய உண்டு.

இப்போது தானியங்கி தொழில்நுட்ப கருவிகளை வைத்து வானில் ஏற்படும் சிறு அசைவையும் படம்பிடிக்கும் வசதி வந்துவிட்டது. ஆனால் ‘அண்டவெளி வழியாகப் பயணித்து பூமியை வந்துசேரும் ஒளியை அந்தத் துல்லியமான தருணத்தில் வானின் சரியான இடத்தில் யாரோ ஒருவர் பார்க்கிறார்கள் என்பதே ஏதோ ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரமாண்டமான நிகழ்வை யாராவது ஒருவர் பார்ப்பதே பொருத்தமானது’ என்கிறார் இவான்ஸ். மேலும் பெருநட்சத்திர வெடிப்பை கண்ணால் பார்ப்பதில் கிடைக்கும் அனுபவம், சாதனங்களை வைத்துப் பதிவுசெய்வதில் இல்லை என்றும் கூறுகிறார் அவர்.

நம்மை நோக்கி எவ்வளவோ ஒளி வந்துகொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்குமுன் அணைந்துபோன நட்சத்திரத்தை அது இப்போது இருப்பதாக எண்ணிக்கொண்டு நாம் ‘எவ்வளவு அழகாக அந்த நட்சத்திரம் மினுக்குகிறது பார்’ என்று சொல்கிறோம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் இவான்சை பொறுத்தவரை ஒளிக்கு அர்த்தமே வேறு; அது ஒரு நட்சத்திரத்தின் மரணம், என்று தெரிவிக்கிறார்.

Next Story