மனநலமே உலகநலம்...!


மனநலமே  உலகநலம்...!
x
தினத்தந்தி 18 Nov 2018 3:00 AM GMT (Updated: 17 Nov 2018 6:27 PM GMT)

“மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்’’ என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நாம் மனநலம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளோமா? என்பது ஐயமே.

உடல் நலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்தை நாம் மன நலத்திற்குக் கொடுப்பதில்லை. மனமும் உடலும் ஒன்றை யொன்று சார்ந்தவை. மனம் நலமாக இருந்தால்தான் உடலும் நன்றாக இருக்கும்.

 தானே சிரித்துக் கொண்டும் தானே பேசிக் கொண்டும் தன்னைப் பற்றிய மனத்தெளிவு இல்லாமல் இருப்பவர்களை மட்டுமே மனநலக் குறைபாடுடையவர்கள் என்று எண்ணுகிறோம். வீட்டில் வன்முறையான செயல்களில் ஈடுபட்டாலோ, மற்றவர்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினாலோ பயந்து அரண்டு உறவினர்கள், மனநல மருத்துவரிடம் அழைத்து வருகின்றனர், மேலும் மனநலக் குறைபாடுகளெல்லாம் பேய், பிசாசுத் தொல்லைகள். மாந்திரிகம், செய்வினை போன்ற காரணங்களாலும் வருகிறது என்ற தவறான கருத்துகள் மக்களிடையே பரவியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மனநல மருத்துவரை அணுகுவதே கேவலமானது என்ற எண்ணம் மக்களிடையே பரவியுள்ளது.

மனநலக் குறைபாடுகள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் உடலில் உள்ள சுரப்பிகளின் தன்மையில்  ஏற்படும் மாற்றங்களாலும் வருகிறது. பரம்பரையாக வருவதும் ஒரு காரணமாகும். இதைத்தவிர குழந்தைகளின் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, போன்ற காரணங்களாலும் வருகிறது.

மனநலம் என்றால் என்ன?

சிந்தனை, உணர்ச்சிகள், நினைவு ஆற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் ஆற்றல், நடத்தை, குணநலன் ஆகிய அனைத்தும் சரியாக இருப்பது மனநலம் ஆகும்.

இவற்றுள் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிக்கப்பட்டு அதனால் அவர் தனக்கும், தன்னைச் சார்ந்தவருக்கும் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார்.

ஏழை, பணக்காரர்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள், சாதி, மத, இன வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்துத் தரப்பினரிடமும் மனநலக் குறைபாடுகள் காணப்படுகின்றன.

உடல் நோயைப் போன்றே மனநலக் குறைபாடுகளும் பலவகைப்படும். காய்ச்சல் என்றால் வைரஸ் காய்ச்சல்,  பன்றிக்காய்ச்சல்,  டெங்குக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்று பலவகை இருப்பதைப் போலவே மனநலக் குறைபாடுகளிலும் பலவகையான மனநலக் குறைபாடுகள் உண்டு.

 மனிதர்களுக்குப்  பலவிதமான சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுதல் இயல்பே. இல்லறவாழ்க்கையிலும் அலுவலகத்திலும் பலவகைச் சிக்கல்களும் அவற்றால் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய தீர்வுகளைப் பற்றிய சிந்தனைக்கு நேரமும் வாய்ப்பும் கிட்டுகின்றனவா?

தேவையில்லாமலும் கோழைத்தனத்தாலும் வீண் கோபத்தாலும் தற்கொலைக்குப் பலர் முயல்வதும் வீணே மடிந்து போவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. தற்கொலை முயற்சிகளும், போதைப் பொருட்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாவதும், மனநலக்குறைபாட்டின் வெளிப்பாடுகளே.

மனநோயை  மனநலக்குறைப்பாட்டை தீவிரமான நோய், மிதமான மனநோய் என இருவகையாகப் பிரிக்கலாம். உலக மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் தீவிர மன நோய்களாலும் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2020–ம் ஆண்டில் மனநோயானது குறிப்பாக மனச்சோர்வு நோயானது உடல் சார்ந்த நோய்களைக் காட்டிலும் அதிக அளவு மக்களைப் பாதிக்கும் எனவும்  உளவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்ற மூச்சுத்திணறல், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மூட்டு வலிகள், தீராத தலைவலி, வயிற்றுப்புண், தீராத வயிற்றுப் போக்கு, வாந்தி, முதலியன மனநலக் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. சிறு வயதில் மனதில் உண்டாகும் அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அணுகும் முறைகளாலும் இவை ஏற்படுகின்றன.

மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களான பயம், பதற்றம், வலிப்பு, மயக்கம் போன்ற பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான  ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். எனவே வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் முறையான வழிகளைக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம்.

குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள உரிய வழிகாட்டி உதவ வேண்டும் தமது குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான முடிவை எடுக்கும் முன் அவர்களுடன் ஆலோசித்து அவர்களுக்குச் சரியான  புரிதலை உண்டாக்கவேண்டும். அவர்களது  மனநிலையைப் புரிந்து அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தை எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டால் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இயலும். உடல்ரீதியாக வெளிப்படும் மன நோய்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து உமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும். மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும்.

மனநலமே மனித நலம். மனநலமே சமூகநலம். மனநலமே உலகநலம். இதனைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவே உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.

- மருத்துவர் செல்வமணி தினகரன்

Next Story