உஷாரய்யா உஷாரு...


உஷாரய்யா உஷாரு...
x

அந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் பார்க்க அழகாக, பளிச்சென்ற நிறம் கொண்டவள். அடர்ந்த கூந்தல் அவளுக்கு கூடுதல் பொலிவைக் கொடுத்தது. எடுப்பான உடல்வாகும் கொண்டிருந்தாள்.

இரண்டாவது மகள் கறுப்பு நிறம். ஒல்லியான உடல்வாகு. பெற்றோர் இருவரையும் ஒரே மாதிரி பாவித்தாலும், இரண்டாவது மகளுக்கு, தான் இவ்வாறு பிறந்துவிட்டோமே என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது.

அதனால் உருவான தாழ்வுமனப்பான்மையால் அவள் படிப்பிலும், வீட்டு வேலைகளிலும் ஆர்வம்காட்டாமல் இருந்தாள். தன்னைவிட அக்காள் அழகாக இருந்ததால் அவள் மீது தனது கோபத்தை அதிகம்காட்டுவாள். அக்காள் ஏதாவது வேலை சொன்னாலும் செய்யமாட்டாள். பெயரை சொல்லி அழைத்தாலும் பதில் சொல்லாமல் அலட்சியமாக இருந்துவிடுவாள். அதனால், தங்கை தன்னை மதிக்காமல் இருக் கிறாளே என்ற ஆத்திரம் அக்காளுக்கு வரும். அப்போது, ‘ஏய் கறுப்பி வாடீ..’ என்பாள். நிறத்தை குறிப்பிட்டு தன்னை அழைப்பதை அவள் அவமானமாக கருதினாள்.

அவர்கள் வசித்துவந்த தெரு பகுதியில் இளைஞர்கள் அதிகம். பெண்கள் குறைவு. அதனால் அழகான மூத்தப் பெண் தேர் மாதிரி அசைந்து வெளியே செல்லும்போது பலரது பார்வையும் அவள் மீது பதியும். சில இளைஞர்கள் அவளது ரசிகர்களாகவே மாறிப்போயிருந்தார்கள். ஒரு சிலர் அவளுக்கு காதல் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தார்கள். அதில் ஒருவரை அக்காளும் சில வருடங்கள் காதலித்தாள். பின்பு காதல் கசந்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது பழைய சம்பவம்.

ஆனால் தங்கையை யாரும் காதலிக்கவில்லை. அவ்வளவு ஏன், இளைஞர்கள் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அவள் வெளியே செல்லும்போது, ‘ஏய் கறுப்பி போகிறாள் பாரு..’ என்று அவள் காதுபடவே சிலர் பேசி நோகடித்தார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களும் அக்காளிடமே அதிக பாசம் காட்டினார்கள். தன்னை வீடும், சமூகமும் புறக்கணிப்ப தாக அவள் கருதினாள்.

அக்காள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார்கள். தங்கை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். கல்லூரியிலும் நிறம் அவளை தனிமைப்படுத்தியது. அங்கு ஒருசில தோழிகளே அவளுக்கு இருந்ததால், அவர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களுக்காக நிறைய செலவு செய்துகொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில் அவ்வப்போது பணம் காணாமல் போய்க்கொண்டிருந்தது. அதை யார் திருடுவது என்று தெரியாமல் அனைவரும் குழம்பிக்கொண்டிருந்தார்கள். பணத்தை தங்கைதான் எடுத்துச் செல்கிறாள் என்ற சந்தேகம் அக்காளுக்கு வந்தது. அதை சொன்னபோது, ‘அப்பாவும், அம்மாவும் என்னை வெறுத்து ஒதுக்கவேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே திருட்டுப்பட்டம் சுமத்துகிறாய்’ என்று அக்காள் மீது பாய்ந்தாள். அடுத்த சில நாட்களிலே தந்தையின் பர்சில் இருந்து அவள் பணம் எடுத்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக அக்காள் பிடித்து, தங்கையை அப்பா முன்னால் கொண்டு போய் நிறுத்திவிட்டாள். அதனால் அவளுக்குள் ஏற்பட்ட அவமானம் வன்மமாக மாறியிருந்தது.

நகரத்தில் ஆசிரியராக வேலைபார்க்கும் ஒருவரது குடும்பம் அக்காளை பெண் பார்க்க வந்தது. அவர்களுக்கு பெண்ணை பிடித்துப்போய்விட்டது. மாப்பிள்ளையும் கம்பீரமாக தோன்றினார். அதிக சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தார். இருதரப்பினருக்கும் பிடித்துப்போனதால் கல்யாண தேதி குறித்தார்கள். அதை தொடர்ந்து கல்யாண ஏற்பாடுகள் மளமளவென நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் சோகமான மனநிலையில் மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் வீட்டை தேடி வந்தார்கள். அவர்கள் கையில் சில காதல் கடிதங்கள் இருந்தன. அவை நாலைந்து வருடங்களுக்கு முந்தையது என்றாலும், அதில் இருந்த வரிகள் காதல் ரசம் சொட்டச் சொட்ட எல்லை மீறிய வரிகளால் எழுதப்பட்டிருந்தது. அந்தரங்கமாகவும் வர்ணிக்கப்பட்டிருந்தது. ‘இந்த கடிதங்கள் எல்லாம் எங்களுக்கு தபாலில் வந்தது. ஊரில் விசாரித்தோம். காதலித்தது உண்மைதான் என்று சொன்னார்கள். எங்க மனதுக்கு பிடிக்கலை. அதனால் கல்யாணத்தை நிறுத்திடுங்க!’ என்று கூறிவிட்டு, கிளம்பிவிட்டார்கள்.

தான் கிழிக்காமல் வைத்திருந்த பழைய காதல் கடிதங்களை தன் மீது உள்ள கோபத்தால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பியது, தனது தங்கைதான் என்பது அக்காளுக்கு தெரியும். இளைய மகள் திட்டமிட்டு மூத்த மகளை பழிவாங்கிவிட்டாள் என்று பெற்றோர்களுக்கும் தெரியும். ஆனாலும் திட்டினால், இளைய மகள் தவறான முடிவு எதுவும் எடுத்துவிடுவாள் என்று பயந்து, அமைதியாக புலம்புகிறார்கள்!

சகோதரிகள் என்றாலும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருங்கணும்ங்க..!

- உஷாரு வரும்.

Next Story