தொலைக்காட்சி: அற்புதமான அனுபவம்...!


தொலைக்காட்சி: அற்புதமான அனுபவம்...!
x
தினத்தந்தி 20 Nov 2018 5:33 AM GMT (Updated: 20 Nov 2018 5:33 AM GMT)

நாளை (நவம்பர்21-ந்தேதி) உலக தொலைக்காட்சி தினம்.

தொலைக்காட்சி என்றாலே தூர்தர்ஷன் தான். ஆம், தூர்தர்ஷன் என்பதன் தமிழாக்கம் தான் தொலைக்காட்சி. டெலிவிஷன் என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகவே அது இப்போது ஆகிவிட்டது. சென்னைதொலைக்காட்சி கொடிகட்டிப் பறந்த காலத்தில் நானும் அதில் பங்கு வகித்தேன் என்பது என் மகிழ்ச்சி. தொலைக்காட்சி நிலையத்துக்குள் நான் அடியெடுத்து வைக்கும் முன்னர் டெலிவிஷன் பெட்டியை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்திருந்தேன்.

நான் செய்தி வாசிக்கத் தொடங்கியபோது நாடகம், நடனம், செய்தி விமர்சனம், விவசாயம் குறித்த நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி நிலையம் காலையிலிருந்து இரவு வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சென்னை தொலைக்காட்சியை வழி நடத்திய பெரும்பாலான நிகழ்ச்சி தயாரி்ப்பாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் இளைஞர்கள். அப்போது தான் பணியில் அமர்ந்தவர்கள். அந்த இளைய சமூகம் வளைய வருவதைப் பார்க்கும்போது ஏதோ கல்லூரி்யில் இருப்பதைப் போன்ற உணர்வு வரும். தொலைக்காட்சி நிலையமே சிரி்ப்பும் பேச்சும் குதூகலமுமாக இருக்கும்.

தமிழகத்தைச் சேர்ந்த எல்லாப் பிரமுகர்களையும் ஏதாவது ஒரு சமயத்தில் நான் ஒப்பனை அறையில் சந்தித்திருக்கிறேன். என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் போல் என்னிடம் அவர்கள் பேசும்போது எனக்கு முதலில் அது புதுமையாக இருந்தது. தினமும் அவர்கள் வரவேற்பறையில் போய் அமர்ந்தல்லவா நான் செய்திகளை எடுத்துரைத்தேன்! அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் வீதிகள் வெறிச்சோடியிருக்கும். தூர்தர்ஷனில் தமிழ்ப்படம் ஒளிபரப்பாகும் நாள் அது. நல்ல படமோ இல்லையோ, எல்லாரும் அதைக் குடும்பமாகப் பார்ப்பார்கள். செய்தி இடைவேளை வரும்போது உணவருந்தப் போவார்கள். இப்படி பல வருடங்கள் உருண்டோடின.

தூர்தர்ஷனில் நான் பணியாற்றியபோது, கடையடைப்பு போன்ற ஏதோ கலவரமான சூழ்நிலையில் ஒரு நாள் தொலைக்காட்சி நிலைய வாகனம் என்னைப் போலீஸ் பாதுகாப்போடு வீட்டிலிருந்து செய்தி வாசிக்க அழைத்துச்சென்றது. ஐந்து வயதே நிரம்பிய என் மகள், துப்பாக்கியோடு வந்து போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டு போய்விட்டது என்று நினைத்து அழுது விட்டாளாம். நான் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வதந்தி பரவியபோது எனக்குத் தெரிந்தவர்கள் துக்கம் கேட்க வீட்டுக்கே வந்து விட்டனர். நானே அவர்களை வரவேற்றேன். இப்படிப் பலப்பல அனுபவங்கள். தொடர்ச்சியாக செய்தி படித்துக்கொண்டிருந்ததால் இருமினாலும் தும்மினாலும் கூட அது செய்தியாகிவிடும்.

முதலில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பாகத் தொடங்கிய தூர்தர்ஷன் என்பதுகளின் ஆரம்பத்தில் வண்ண ஒளிபரப்புக்கு முன்னேறியது. கருப்பு வெள்ளை ஒளிபரப்பின் போது வெளிர் நிறத்தில் உடையணிந்தால் ஒப்பனை சற்று அதிகமாக இருந்தால் தான் பார்க்கச் சீராக இருக்கும். இதையெல்லாம் நாங்கள் கற்றுத் தேர்ந்து வருவதற்குள் கலர் வந்துவிட்டது. கருப்பு வெள்ளைக்கு ஒளியூட்டுவதில் கலை நயம் அதிகம் என்று எங்கள் ஒளிப்பதிவாளர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதை உணர்ந்தும் இருக்கிறேன்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கத் தொடங்கிய போது நான் மாணவி. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்துக்காகக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ‘உச்சரிப்பு’ அதில் ஒரு பாடம். ஒலி பிறக்கும் இடம், சொற்கள் உச்சரிக்கப்பட வேண்டிய விதம் ஆகியவை எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. தமிழ்ச்சொற்களில் அழுத்தம் மெய்யெழுத்துகளால் பெறப்படும். ஆனால் ஆங்கிலத்தில் அப்படியில்லை. ஆங்கிலம் ஸிலபிக் மொழி. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் ஆங்கிலேயர்கள் பேசும் விதமாகச் சொற்களில் அழுத்தங்கள் அமையும். இதை அறிந்து கொண்டபோது ஆங்கிலத்தின் ஒரு புதிய பரிமாணத்தைப் பார்த்தேன். அந்தந்த மொழிச் சொற்களை அந்தந்த மரபுப்படி உச்சரிக்கவேண்டும் என்ற அவசியம் எனக்கு விளங்கியது. இந்தத் தீர்மானத்தோடு நான் செய்தி வாசிக்கத்தொடங்கினேன். கஷ்மீர் போன்ற உச்சரிப்புகளுக்கு அது தான் காரணம்.

என் தாத்தா தூர்தர்ஷன் செய்திகளைத் தவறாமல் பார்ப்பார். வேகமாகப் படித்தால் விளங்கவில்லை என்பார். அதனால் அவரைப் போன்றோரை மனத்தில் வைத்துச் செய்திகளை சீரான வேகத்தில் படிப்பேன். செம்மங்குடி சீனிவாசய்யர் “நீ நிதானமாகப் படிக்கிறாய், எனக்குப் புரியும் படி” என்று அடிக்கடி சொல்வார். நான் பெற்ற பாராட்டுகளில், எம்.எஸ். அம்மாவும், சதாசிவமும் தொலைபேசியில் அழைத்து என்னை வாழ்த்தியதையும், சிவாஜி கணேசன் விமான நிலையத்தில் என் அம்மாவை எதேச்சையாக சந்தித்தபோது என் தமிழ் உச்சரி்ப்பைப் பற்றிப் பேசியதையும் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.

தமிழ் உச்சரிப்புக்கு நான் என் அம்மா ஜானகிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன். வெற்றியை வெட்ரி் என்ற போது என் தமிழ் டீச்சர் சிவகாமு அந்தத் தவறை இனங்கண்டுத் திருத்தியதை இன்றளவும் மறக்கவில்லை. எனக்குக் கிடைத்தாற்போல் தமிழாசிரியர்கள் இப்போது அருகி விட்டனரோ என்று வருத்தப்படுகிறேன். தமிழின் சீரிளமைத் திறம் வியந்த காலம் மாறி, தமிழ்த்தாய் வாடி வதங்கிப்போய் மூப்படைந்து விட்டாளோ என்று மனம் வெதும்புகிறேன். தமிழர் என்று மார்தட்டும் நாம் அந்த அடையாளம் நீடிக்க வேண்டுமானால் தமிழை மீண்டும் சரி்யாக நிறுவவேண்டும்.

1928-ல் நியூயார்க்கில் முதல் டெலிவிஷன் சேனல் தொடங்கப்பட்டது. 1975-ல் சென்னையில் தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. அவசர நிலை, இந்திராகாந்தி படுகொலை, எம்.ஜி.ஆர். மரணம், ராஜீவ் படுகொலை, ஜெயலலிதா பதவியேற்பு, நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், வாஜ்பாய் ஆட்சி இப்படிப்பல சம்பவங்கள் நடந்த கால கட்டத்தில் நான் செய்தி அறிவிப்பாளராக இருந்திருக்கிறேன். கால ஓட்டத்தில் பெயர்கள் முக்கியத்துவம் பெறுவதும் அழிவதுமாக நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கையில் ஷெல்லி எழுதிய ஒஸிமாண்டியஸ் நினைவுக்கு வருகிறது.

அதிகம் வீட்டைவிட்டு வெளியே போக முடியாதவர்களுக்கு டெலிவிஷன் ஒரு வரப்பிரசாதம். “கற்றிலனாயினும் கேட்க”, என்ற அறிவுரையை அவரவர் வீட்டில் இருந்தபடியே பின்பற்றுவதற்கு டெலிவிஷன் ஓர் அருமையான சாதனம். கலாசார மாற்றங்களுக்கு டெலிவிஷனும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இப்படியொரு சாதனமாக டெலிவிஷன் இருப்பதனால் அதில் பணியாற்றுவோர் விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. குழந்தைகள் சில சமயம் அகடவிகடமாகத் தன் வயது மீறிப் பேசும்போது, ‘ஓ இது டெலிவிஷன் தாக்கம்’, என்று நினைத்துக் கொள்வேன். அதே சமயம் ஐந்து வயதில் எழுதப் படிக்கக் கூடத் தெரியாத பருவத்திலும் டெலிவிஷன் மூலம் உயிரி்னங்களைப் பற்றிய அபாரமான அறிவைப் பெற்றிருக்கும் குழந்தைகளையும் பார்த்து வியப்படைகிறேன்.

செய்தி வாசிப்பில் ஒரு தேக்க நிலையை நான் உணர்ந்தபோது அதிலிருந்து விலகினேன். எழுதும் பழக்கம் எப்போதும் உண்டு. சமீபத்தில் ‘தி ஆஸ்பீஷெஸ்’ என்ற பெயரில் ஆங்கில நாவலொன்றை எழுதி அமெஸான் கிண்டிலில் பிரசுரித்துள்ளேன். விரைவில் புத்தகமாகவும் வெளியிடவிருக்கிறேன். இயற்கையில் நிலையானது மாற்றம் மட்டுமே இல்லையா?

-ஷோபனாரவி (தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர்)

Next Story