இலக்கியம், கல்வெட்டில் கார்த்திகை...!


இலக்கியம், கல்வெட்டில் கார்த்திகை...!
x
தினத்தந்தி 20 Nov 2018 5:39 AM GMT (Updated: 20 Nov 2018 5:39 AM GMT)

பழங்காலம் தொட்டே தமிழர்கள் பல்வேறு விழாக்கள் கொண்டாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகைப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை சங்கத்தமிழ் நூல்களும், காப்பிய நூல்களும், கல்வெட்டுகளும் காட்டி நிற்கின்றன. கார்த்திகை விழா குறித்து அகநானூறு, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கார்நாற்பது, களவழி நாற்பது, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களும், முதலாம் ராசேந்திரன், ராஜாதிராஜன் போன்ற சோழப் பெருமன்னர்களின் கல்வெட்டுகளும், பின்னர் வந்த புராண இலக்கியங்களும், சமஸ்கிருத காவிய நாடகங்களும் குறிப்பிட்டுள்ளன.

கார்த்திகை என்பது நாண் மீனுக்கும், மாதத்திற்கும், விழாவிற்கும் உரிய பெயராகும். இங்கு கார்த்திகை எனும் நாண்மீன் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகும். மேஷத்தில் கால் பகுதியும், ரிஷபத்தில் முக்கால் பகுதியும் அமைந்துள்ள இந்த விண்மீன் கூட்ட மானது குத்து விளக்கு போல் தோற்றமளிக்கும். மாதத்திற்கு ஒருமுறை சந்திரன் இம்மீனுக்கு அருகில் வரும்போது அந்நாளினை கார்த்திகை என்று குறிப்பிடுகிறோம். கார்த்திகை நாள் தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய நாளில் முருகனுக்காக விரதம் இருந்து வணங்குவதோடு, முருகன் கோவில் கொண்டுள்ள இடங்களிலெல்லாம் இந்நாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வது தமிழர் மரபாகும்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஒரு மாதத்தின் பெயராக கார்த்திகை வழங்கப்பெறுகிறது. இம்மாதத்தில் முப்பது நாட்களும் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். முழுமதி கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடுகின்ற நாளை பெரிய கார்த்திகை என்று அழைப்பர். கார்த்திகை என்பதற்கு அழல் என்றும், ஆரல் என்றும் பெயர்கள் உண்டு.சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் கட்டுரைக் காதையில்,

ஆடித் திங்கட் போரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெளளி வாரத் தொள்ளெரி யுண்ண

என்ற பாடல் அடிகளின் வழி சிலப்பதிகாரம் கார்த்திகையை அழல் எனச் சுட்டுகிறது.

எட்டுத்தொகை நூலான பரிபாடலில்
விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து

காணப்படும் இச்செய்யுள் அடியில் எரிசடை எழில் வேழம் என்ற சொற்றொடாரில் எரி என்பதன் பொருள் கார்த்திகை என்று பரிமேலழகர் குறிப்பிட்டுள்ளார். ஆரல்மீன் எனவும் கார்த்திகை குறிப்பிடப்படுகின்றது.

திருவண்ணாமலையில் மலையின் மீது விளக்கேற்றி இந்நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இறைவன் ஒளிப் பிழம்பானவன் என்பது வழக்கு. மலையின் உச்சியில் விளக்கைக் கண்டு வழிப்பட்ட பின்னரே உணவு உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே உண்டு. மலையின் மீது அல்லது குன்றின்மீது விளக்கிடுதலையும், வழிபடுதலையும் தொன்று தொட்டு மக்கள் செய்து வந்தனர். இதனை குன்றத்துச் சிச்சுடர் என்று சீவக சிந்தாமணி சுட்டுகின்றது.

அகநானூற்றுப் பாடல் கார்த் திகைத் திங்கள், கார்த்திகை நாளில் தெருக்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி விழா கொண்டாடியதை

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி

என்று குறிப்பிடுகிறது. திருஞான சம்பந்தர் தேவார பதிகத்தில் கார்த்திகை பற்றி

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

பூம்பாவாய் வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும் தளர்வற்ற கபாலிச்சரம் என்னும் கோவிலில் பெருமானை கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின் போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றி கொண்டாடும் காட்சி காணாது செல்வது முறையோ? என்கிறார்.

தமிழ் நூல்கள் குறிப்பிடுவது மட்டுமன்றி கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக்காட்டுகிறது. முதலாம் ராசேந்திர சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.1021) வெட்டப்பட்ட கல்வெட்டில் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்கு பதினாறு நாழி நெய்க்காக பதினாறு ஆடுகளை திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாக கொடுத்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களின் பண்டைய விழாவான கார்த்திகை விழா, பிற்காலத்தில் புராணக் கதையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத காவிய நாடகங்களில் கார்த்திகை பவுர்ணமி அன்று கவுமுதி மகோற்சவம் என்ற நிறைமதி விழா நடைபெற்றதை குறிப் பிடுகிறது. ஈராயிரம் ஆண்டுகளாக இப்பெருவிழா சிறப்புற நடைபெற்று வந்ததை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் துணைநின்று நமக்கு சான்று பகர்கின்றது.

- மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

Next Story