சந்திரனில் ஆம்ஸ்டிராங்... செவ்வாயில்?


சந்திரனில் ஆம்ஸ்டிராங்... செவ்வாயில்?
x
தினத்தந்தி 21 Nov 2018 5:42 AM GMT (Updated: 21 Nov 2018 5:42 AM GMT)

அரை நூற்றாண்டு ஆகப்போகிறது, சந்திரனில் மனிதன் காலடித்தடம் பதித்து. 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி சந்திரனில் நீல் ஆம்ஸ்டிராங் காலடித் தடத்தை பதித்து வரலாறு படைத்தார்.

விஞ்ஞானிகளின் அடுத்த தேடல் என்ன தெரியுமா?அது, செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான். அந்த திட்டம் இன்றளவிலும் கனவாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். இது, சூரிய குடும்பத்தில் உள்ள 4-வது கிரகமாக அமைந்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு காணப்படுவதால் அது சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. செவ்வாய் கிரகத்தைப்பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய கூட்டமைப்பின் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் போன்றவை செயற்கை கோள்களை அனுப்பி இருக்கின்றன. ஏன், நமது நாட்டில் இருந்தும் ‘இஸ்ரோ’ சந்திரனுக்கு மங்கள்யான் செயற்கைக்கோளை 2013-ம் ஆண்டு, நவம்பர் 5-ந்தேதி விண்ணில் செலுத்தியது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட முதல் செயற்கைகோள் என்ற பெருமை மங்கள்யானுக்கு மட்டுமே உண்டு.

இந்த செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் சென்று காலடித்தடத்தை பதிக்க வேண்டும் என்ற ஆசை ‘நாசா’வுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் இதற்காக இரவு, பகலாக விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறது.

தற்போது கூட செவ்வாய் கிரகத்துக்கு அது, ‘இன்சைட்’ என்ற பெயரிலான ரோபாட்டிக் லேண்டர் என்னும் கருவியை அனுப்பி இருக்கிறது. இந்த கருவி மே மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 26-ந் தேதி அது செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘இன்சைட்’ ரோபாட்டிக் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் போய் என்ன செய்யும்? செவ்வாய் கிரகத்தின் நிலவரத்தைப் போய் பார்த்து ‘நாசா’ விஞ்ஞானிகளுக்கு சொல்லும். அங்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகள், சாத்தியக்கூறுகள் பற்றிய விவரங்களையும் தரும்.

இதுபற்றி ‘நாசா’வின் தலைமை விஞ்ஞானி ஜிம் கர்வின் கூறும்போது, “இன்சைட் ரோபாட்டிக் லேண்டரைப் பொறுத்தமட்டில் அது செவ்வாய் கிரகம் பற்றிய அறியப்படாத முக்கியமான தகவல்களை தரும். செவ்வாய் கிரகம் பற்றிய முக்கியப் புரிதலை நமக்குத் தரும்” என்கிறார்.

அடுத்த கட்டமாக 2020-ம் ஆண்டு ‘நாசா’ இன்னொரு ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இருக்கிறது. அது, செவ்வாய் சூழலில் மனிதர்கள் வாழ இயலுமா? பழங்காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா, இயற்கை வளங்கள் என்னென்ன? எதிர்காலத்தில் மனிதர்கள் செல்வதற்கு என்னென்ன அம்சங்கள் தடையாக உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்து சொல்லும்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க நம்மைப்போன்ற சாமானிய மனிதர்களுக்கு, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல வேண்டும் என்றால் அது சாத்தியம் தானா, எவ்வளவு தொலைவில் செவ்வாய் கிரகம் இருக்கிறது, அங்கே போய்ச்சேர எவ்வளவு காலம் ஆகும் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றன.

செவ்வாய் கிரகத்துக்கும், பூமிக்கும் உள்ள தூரம் 22 கோடியே 50 லட்சம் கி.மீ. செவ்வாய் கிரகத்துக்கு சென்றடைய வேண்டும் என்றால் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்தின்படி அதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 9 மாதங்கள் ஆகும். ஆனால் இதில்தான் சிக்கலோ சிக்கல்.

‘ஜீரோ கிராவிட்டி’ என்று சொல்லப்படுகிற புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் மனிதர்கள் நீண்ட காலம் பயணிக்கிறபோது அது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகம். குறிப்பாக ‘ரெட்டினா’ என்று சொல்லப்படக்கூடிய கண் விழித்திரையின் ரத்த நாளங்களில் சரிசெய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படும். பளரென சொல்வதென்றால் கண் பார்வை போய் விடலாம். எலும்புக்கூடு கால்சியம் இழப்பை சந்தித்து, எலும்புகள் வலுவிழந்து போக வாய்ப்பு இருக்கிறது. இவை மட்டுமல்ல, காஸ்மிக் கதிர் வீச்சையும் அதிகளவில் எதிர்கொள்ள வேண்டியது வரும். அதனால் புற்று நோய் வரும் ஆபத்து இருக்கிறது. ஆக இதற்கெல்லாம் தீர்வு காணாமல் செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியாது.

அப்படியென்றால் எவ்வளவு காலம் இன்னும் ஆகலாம்?

‘நாசா’வின் முன்னாள் விஞ்ஞானி டாம் ஜோன்ஸ், இதற்கு இன்னும் 25 ஆண்டுகள் பிடிக்கலாம் என்கிறார். இவர் 4 முறை வெற்றிகரமாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்கிறபோது ஏற்படக்கூடிய காஸ்மிக் கதிர் வீச்சு, சூரிய அனலில் இருந்து மனிதர்களை காக்கக் கூடிய பாதுகாப்பு கவசமும் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பது விஞ்ஞானி டாம் ஜோன்சின் கருத்தாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு போகிற மனிதர்களுக்கு உடலளவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், 9 மாதம் என்ற பயண நேரம் அதிரடியாக குறைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். இன்னும் அதிவேகத்தில் செல்லக்கூடிய விண்கலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அணுசக்தி உந்துவிசை அமைப்பு கண்டுபிடித்தால் அது பயண வேகத்தை அதிகரிக்க துணை நிற்குமாம்.

இப்போதே நாம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால், தொழில் நுட்ப முன்னேற்றங்களை கண்டடைய முடியும். ஆனால் அதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என்று முடிவாய் சொல்கிறார் ஜோன்ஸ்.

நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, நமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நிச்சயம் ஒரு நாள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் காலடித் தடம் பதிப்பதை பார்க்கத்தான் போகிறார்கள். பூமிக்கும், செவ்வாய்க்கும் வேண்டுமானால் 22 கோடியே 50 லட்சம் கி.மீ தொலைவு இருக்கலாம். ஆனால் 2018-க்கும் 2043-க்கும் அதிக தொலைவில்லைதான்.

- இலஞ்சியன்

Next Story