கட்டிட கழிவுகள் மறுசுழற்சி


கட்டிட கழிவுகள் மறுசுழற்சி
x
தினத்தந்தி 21 Nov 2018 6:44 AM GMT (Updated: 21 Nov 2018 6:44 AM GMT)

பிரமாண்டமான கட்டிடங்கள் பெருகி வரும் இந்திய பெருநகரங்களில் கட்டுமான கழிவால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் அதிகம்.

பழைய கட்டிடங்களை உடைத்து நொறுக்கும்போது குவியும் கழிவுகளையும், கட்டுமானக் கழிவுகளையும் சூழலைப் பாதிக்காத வண்ணம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் வகையில் இந்தியாவின் முதல் மறுசுழற்சி தொழிற்சாலை டெல்லியில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, ஆலைக்கழிவுகளால் மாசு நிறைந்த யமுனை, மேலும் கட்டிடக்கழிவுகளால் சீர்கேடு அடையாமல் இருக்க இந்த தொழிற்சாலை மூலம் நிவாரணம் கிடைத்திருக்கிறது. டெல்லி மாநகராட்சி 2009-ம் ஆண்டில் இந்த தொழிற்சாலையை வடக்கு டெல்லியில் உள்ள ஜாகங்கிர்புரியில் அமைத்து, யமுனை நதியில் 15.4 லட்சம் டன் கட்டிட கழிவு கொட்டப்படாமல் பாதுகாத்துள்ளது.

10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் இந்த மறுசுழற்சித் தொழிற்சாலையை அமைக்க நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. 2019-ம் ஆண்டு வரை இந்த தொழிற்சாலைக்கு கட்டிட கழிவுகளை கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவுக்கு ரூ.23 கோடியை கொடுத்து ஒப்பந்தத்தையும் புதுப்பித்துள்ளது. இந்தக் கட்டிட கழிவுகளில் இருந்து கிடைக்கும் கற்களை நொறுக்கி, ரெடிமிக்ஸ் கான்கிரீட், சிமெண்டு பிரிக்ஸ், பிளாட்பார கற்கள், ஹாலோ பிரிக்ஸ் மற்றும் மணலாக மாற்றமுடியும். கட்டிடகழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் மரத்தைப் பிரித்து டெல்லியில் ஓக்லாவில் அமைந்துள்ள குப்பையில் இருந்து எரிபொருளாக மாற்றும் நிலையத்திற்கு அனுப்புகிறார்கள்.

இந்தியப் பெருநகரங்களில் உருவாகும் கட்டிட கழிவுகளை பெரும்பாலும் சாலைகளிலும் நீர்நிலைகளிலும் கொட்டும் நிலைதான் உள்ளது. இவை போக்குவரத்து நெருக்கடிகளையும், காற்று மாசுபாட்டையும், நீர்மாசுபாட்டையும் ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகளில் 25 சதவீதம் கட்டிட கழிவுகள் உள்ளன.

டெல்லி, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன்களில் கட்டிட கழிவுகள் உருவாகின்றன. இவை அனைத்தும் திடக்கழிவு குப்பைகளாக மாறி சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. இந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்குரிய நடவடிக்கைகளை நாம் சீக்கிரம் எடுத்தல் அவசியம்.

Next Story