சிறப்புக் கட்டுரைகள்

பட்டாசு தொழில் சட்டமும், பொருளாதாரமும்...! + "||" + Fireworks Law and Economics

பட்டாசு தொழில் சட்டமும், பொருளாதாரமும்...!

பட்டாசு தொழில் சட்டமும், பொருளாதாரமும்...!
எல்லா ஊர்களுக்கும் தனி அடையாளமும், பொருளாதார, பண்பாட்டு முக்கியத்துவமும் உண்டு. அப்படித்தான் சிவகாசியும். சிவகாசிப்பட்டாசுகள் பண்டிகைகளுக்குக் குதூகலத்தை ஊட்டி சிறப்பித்தவை, இன்று பிரச்சினையாகப்பார்க்கப்படுபவை.
தீபாவளிக்கு வாங்கிய மிச்சப் பட்டாசுகளைக் கார்த்திகை தீபத்தன்று வெடித்துக் கொண்டாடிய பொழுதுகளை யாரும் எளிதில் மறந்து விட்டுருக்க முடியாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகப் பட்டாசு வெடித்து தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா, பட்டாசு இல்லாமல் கொண்டாடினால் தான் என்ன குறைந்து விடும், பட்டாசு தொழிலில் எத்தனை குழந்தை தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள், அதனால் சுற்றுச்சூழல் எப்படி மாசுபடுகிறது என்பனவற்றை எண்ணிப் பார்க்க வேண்டாமா? போன்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகள் பொருளுள்ளவைகள்தான் என்றாலும் வேறு சில முக்கிய விஷயங்களையும் உற்று நோக்க வேண்டியதுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவற்றை மட்டும் கருத்தில் கொண்டு இதனைப் பார்க்கலாம். 2017-ல் பெட்ரோலிய மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் பட்டாசு கடைகளுக்கென கொண்டு வந்த சில பாதுகாப்பு விதிகளும் பட்டாசு வெடிக்க நேரம் குறித்து உச்சநீதிமன்றத்தீர்ப்பும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

பெட்ரோலிய மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் விதிகள் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமானவையல்ல என்று அகில இந்திய பட்டாசு தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூறியுள்ளது.

புதிதாக தொடங்கப்படும் கடைகள் வேண்டுமானால் இந்தவிதிகளைப் பின்பற்றி அமைக்கப்படலாமேயன்றி ஏற்கனவே இருக்கும் கடைகளுக்கு இவற்றை செயல் படுத்துவது சிரமம். பட்டாசு கடைக்கு மேல் ஒரு மாடி கூட இருக்கக்கூடாது, கடையைச் சுற்றி நான்குபக்கத்திலும் மூன்று மீட்டர் திறந்த வெளி இருக்க வேண்டும் போன்ற விதிகள் நடைமுறைக்கு சாத்தியமா? அது போலவே பள்ளிக்கூடம் மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட்டப் பணியிடங்களுக்கும் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கும் இடையே குறைந்தது பதினைந்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா?குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் சாத்தியமில்லாதது. பாதுகாப்பு விதிகள் வேண்டவே வேண்டாம் என்பதல்ல வாதம் ஆனால் பாதுகாப்பு விதிகள் நடைமுறைக்கு ஏற்றவையாக இருப்பது முக்கியம். நடைமுறை படுத்த முடியாத விதிகள் மீறப்படுவதைத் தடுக்க முடியாது. அதுபோலவே தான் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பும். இரவு பத்துமணி முதல் இரண்டு மணிநேரம் தான் பட்டாசு வெடிக்கலாம் என்பது நடைமுறைக்கு சாத்தியமா?.

சரி இவை போகட்டும் பட்டாசு தொழிலின் முக்கியத்துவம் தான் என்ன? ஏறத்தாழ எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் பேருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் தரக்கூடியது பட்டாசு தொழில். அதுமட்டுமல்ல ஆண்டுக்கு ஏறத்தாழ ஆறாயிரம் கோடி ரூபாய் வர்த்தகமாகும். இதில் முக்கியமாக நோக்க வேண்டியது என்னவென்றால் பட்டாசு தொழிற்சாலைகள் சிறு மற்றும் குறுந் தொழில்களாகும். ஏற்கனவே பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியாலும் பெரும்பாதிப்புக்குள்ளானது, பெரும்பாலான பட்டாசு ஆலைகள் வாடிக்கையாளர்களின் முன்பணத்தை ஆதரமாகக் கொண்டே முதலீடு செய்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்திற்குப்பின் முன்பணம் வாங்குவது சிக்கலாகி விட்டது. மேலும் பட்டாசுக்கு சரக்குவரி இருபத்தியெட்டு சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பட்டாசு விலையேற்றத்திற்கான மிக முக்கிய காரணமாகும். இதனால் பட்டாசு வாங்குவோரும் குறைந்து விட்டனர், அப்படி வாங்குவோரும் மிக குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர்.

புதுடெல்லி மற்றும் ஏனைய வட இந்தியாவில் தீபாவளிக்கு என அதிக அளவில் பட்டாசு வாங்குவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அது பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ஏற்பட்ட கற்று மாசும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளும் இதற்கு காரணம். அதனைத் தொடர்ந்து பேரியம் ஹைடிரைடு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பசுமை விவசாயம் பசுமை எரிபொருள் போன்று பசுமை வெடிகள் என்பது சாத்தியமே அல்ல. இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் குறைவாக மாசுபடுத்தும் பட்டாசுத்தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்துள்ளது. ஆனால் அந்தத் தொழில் நுட்பம் ந டைமுறைப்படுத்துவதற்கு எளிதானதல்ல. மேலும் அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் பட்டாசு ஆலைகள் தமக்கு உரிமைத் தொகையாக ஒரு பங்கினைத் தர வேண்டுமெனக் கேட்கிறது. அந்நிறுவனத்துக்கு உரிமைத் தொகையை கொடுத்தால் பட்டாசு ஆலைகளின் மூலதனம் அதிகமாகும். இது மேலும் சிக்கலை உண்டாக்குகிறது. பட்டாசு வெடித்தால் ஓரளவுக்கு சூழல் மாசு ஏற்படுத்துவதை தடுக்க முடியாது. அதற்காக எனது முறைப்படுத்தலுமே வேண்டாம் என்பதல்ல வாதம். விதிகள் நடைமுறைக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

இவற்றை விட முக்கியமானது பெட்ரோலிய மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது தான். ஏற்கனவே அதிகப் பணிச்சுமை கொண்ட மாவட்ட நிர்வாகத்துக்கு இது மேலும் சுமையைச் சேர்க்கும். அது மட்டுமல்ல இது போன்ற சிக்கலான விதிகள் பட்டாசு நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நன்மை செய்வதை விட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கி லஞ்சம் பெருகுவதற்குத் தான் வழி வகுக்கும். எனவே விதிகள் மக்கள் வாழ்வதற்கு வழி செய்யும் வகையிலும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் இருந்தால்தான் மதிக்கப்படும் என்பதை புரிந்து கொண்டால் நன்று.

சோ.கணேசசுப்பிரமணியன்,
கல்வியாளர்

தொடர்புடைய செய்திகள்

1. பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு
இந்தியாவில் பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
2. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3. சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4. பட்டாசு தொழில் பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...