நினைவுகளில் மணக்கும் ‘பாசமலர்’


நினைவுகளில் மணக்கும் ‘பாசமலர்’
x
தினத்தந்தி 6 Dec 2018 5:06 AM GMT (Updated: 6 Dec 2018 5:06 AM GMT)

இன்று (டிசம்பர் 6-ந்தேதி) நடிகை சாவித்திரி பிறந்ததினம்.

திரை உலகில் தனித்துவமிக்க நடிப்பாற்றலால் முத்திரை பதித்து நடிகையர் திலகம் என பெருமையுடன் அழைக்கப்படும் எனது தாயார் சாவித்திரி வாழ்ந்த போதும் ராணியாக இருந்தார். இறந்தபோதும் ராணியாகவே இறந்தார். இறந்த பிறகும் மக்கள் மனதில் ராணியாகவே நிறைந்து இருக்கிறார்.

அம்மாவும், அப்பாவும் (நடிகர் ஜெமினிகணேசன்) காதலித்து மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அம்மா முதலில் நடித்தது விஜயா ஸ்டூடியோவில். இதன் நினைவாக எனக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயர் வைத்தனர்.

அப்பாவுக்கு 7 பெண் குழந்தைகள். அவருக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் இருந்தது. ராமேசுவரம் கோவிலுக்குச் சென்றால் ஆண் குழந்தை பிறக்கும் என்று சிலர் கூற, அப்பா அம்மாவையும் என்னையும் அழைத்துக்கொண்டு ராமேசுவரம் சென்றார்.. அப்போது எனக்கு 6 வயது.

அந்த நேரத்தில் தனுஷ்கோடியில் வீசிய புயலில் சிக்கிக் கொண்டோம். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் வெள்ளம் சூழ்ந்ததும் டெண்ட் அமைத்து, தங்கி இருந்ததும், உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டதும், வெள்ளத்தில் பெரிய வவ்வால் மீன் நீந்தி வந்ததும் எனக்கு நினைவில் இருக்கிறது. ராணுவத்தினர் உதவியுடன் வீடு திரும்பியது நெஞ்சில் நிறைந்த பசுமையான நினைவுகள்.

சில மாதங்களில் அம்மா கர்ப்பம் தரித்து ஆண் குழந்தைக்கு தாயானார். அப்பாவுக்கு மிகவும் சந்தோஷம். அம்மா சூட்டிங்குக்கு சென்றால் அவனை நான் கவனித்துக் கொள்வேன். ஸ்ரீராமநாராயண சத்தீஷ்குமார் என்பது அவன் பெயர். தற்போது அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கிறான்.

அந்தக் காலத்தில் அம்மா காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புவார். அதற்குள் பாட்டியிடம் சென்று தூங்கி விடுவேன். காலையில் எழுந்து பார்த்தால் அம்மாவின் படுக்கை அறையில் இருப்பேன். இரவில் சூட்டிங் முடிந்து வந்ததும் என்னை தூக்கிக் கொண்டு அம்மா அவரது அறைக்கு சென்று விடுவாராம். பெரிய நடிகையாக இருந்தாலும் வீட்டில் இருக்கும்போது அம்மா குடும்ப பெண்ணாகவே நடந்து கொள்வார். காலையில் மஞ்சள் பூசி, குளித்துவிட்டு, வாசலில் கோலம் போடுவார். தோட்டத்திற்கு சென்று மல்லிகைப்பூக்களை பறித்து வந்து அதைக்கோர்த்து தலைக்கு சூடிக்கொள்வார். ஓய்வு பொழுதில் பாகுபாடின்றி வீட்டில் உள்ள டிரைவர், சமையல்காரர்களை அழைத்து வைத்து சீட்டு விளையாடுவார்.

பகல் பொழுதில் எங்கு சென்றாலும் அம்மாவை பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள். இதனால் பவுர்ணமியன்று இரவு 10 மணிக்கு மேல் மெரினா பீச்சுக்கு சென்று ‘நிலாச்சோறு’ சாப்பிடுவோம்.அம்மா அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். வீட்டுக்கு யார் வந்தாலும் உட்கார வைத்து பேசிவிட்டுதான் செல்வார். மற்றவர்களிடமும் மரியாதையை எதிர்பார்ப்பார்.

ஒருமுறை அவர் ஷூட்டிங் சென்றபோது சிக்னலுக்காக சாலையில் கார் நின்றது. அப்போது அம்மாவை பார்த்துவிட்ட ஒருவர், சாவி-3 என்று கூறி கிண்டல் செய்தார். அம்மா பொறுமையுடன் இருந்தார்.தொடர்ந்து அந்த நபர் சாவி திருடி, ஏய், ஏய் எனக்கூறி கிண்டல் செய்தார். அம்மாவுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. காரில் இருந்து இறங்கி சென்று அந்த நபரின் இடது கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்து விட்டு, ‘மரியாதையை கற்றுக்கோ’ என்று கூறினார்.

அம்மாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அபிபுல்லா ரோட்டில் உள்ள வீட்டில் இருந்து என்னையும், தம்பியையும் திருவேற்காடு கோவிலுக்கு பாத யாத்திரையாக அழைத்துச் சென்றார். திருப்பதி கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து மலைக்கு படி ஏறி சென்று உள்ளார்.

என் தம்பிக்கு திருமணம் ஆகி, அவன் மனைவி கர்ப்பமாக இருந்த நேரம், திடீரென்றுஅப்பா போன் செய்து அவரை பற்றி விசாரித்தார். சிறிது நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்து பார்த்தால் வீட்டு வாசலில் கையில் 2 பெரிய மீன்களுடன் அப்பா நின்று கொண்டு இருந்தார். ‘அம்மா! இது ‘கோல்டன் பிஷ்.’ அவளுக்கு மீன் என்றால் ரொம்ப பிரியம். சமைத்துக்கொடு என்று கூறினார். அன்று மீனை சமைத்து சாப்பிட்டோம் .மறுநாள் தம்பி மனைவிக்கு ஆண்குழந்தை பிறந்தது.

இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின்போது எனக்கு நகைகளை அணிவித்து அம்மாவும், ஏராளமான நகைகளை அணிந்து கொண்டு பிரதமர் சாஸ்திரியிடம் அழைத்துச் சென்றார். பின்னர் அனைத்து நகைகளையும் கழற்றி அவரிடம் நிதியாக அளித்தார்.

ஆந்திராவில் விஜயவாடாவில் தும்மலபள்ளி கலாஷேத்திரத்தில் உள்ள அரங்கத்தில் அம்மாவுக்கு வெண்கல சிலை உள்ளது. ஆந்திராவில் மேலும் 2 இடங்களிலும் அம்மாவுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒருமுறை யோகாசன வகுப்புக்கு சென்ற போது ஒரு பெண் என்னிடம் வந்து நீங்கள் சாவித்திரி மகளா? என்று கேட்டார். நான் ஆமாம். நீங்கள் யார்? என்று கேட்டேன். உடனே அவர் என்னை கட்டிப்பிடித்தபடி கண்ணீர் விட்டபடி, என் தாயார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்தபோது அந்த வழியாக காரில் சென்ற உன் அம்மா, என் தாயாரை காரில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு நான் பிறந்தேன். அவரது நினைவாக எனக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டினார். உன் அம்மா சரியான நேரத்தில் உதவி செய்யாவிட்டால் என் அம்மா உயிர் போயிருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டபோது என் கண்கள் கலங்கின.

அம்மாவும், அப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அம்மாவை பார்க்க அவர் இருந்த வீட்டுக்கு அப்பா காரில் வருவாராம். தெரு முனையில் காரை நிறுத்திவிட்டு, ‘பீம்’, ‘பீம்’ என்று காரின் ‘ஹாரன்’ அடிப்பாராம். இந்தச் சத்தத்தைக் கேட்டதும் அம்மா வெளியில் புறப்பட்டு செல்வாராம். இவர்கள் காதல் லீலை குறித்து வசனகர்த்தா ஆரூர்தாஸ் என்னிடம் தெரிவித்தார்.

கடைசிக்காலத்தில் அம்மா “பிராப்தம்“ படம் எடுத்தபோது அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. அவர் நம்பியவர்கள் அவரை ஏமாற்றினார்கள். அப்பாவை இழந்து, நிம்மதி இழந்து, பொருள் இழந்து, மனதளவில் வாடினார்.

வருமான வரி கட்டுவதற்காக சென்னை அபிபுல்லா சாலையில் அம்மா வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது. அம்மாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அவரின் கல்லீரல் சுரக்கும் ஹார்மோன் அளவு குறைந்தது. சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டது. மது அருந்தக்கூடாது என்று நாங்கள் வற்புறுத்தியதால் ஒரு சிலர் அண்ணா நகரில் வீடு பார்த்து அங்கே அம்மாவை அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சுற்றி இருந்தவர்கள் சுய நலத்துக்காக அம்மாவிடம் இருந்த நகை, பணத்தைப் பறித்துக்கொண்டனர்.

கன்னட பட சூட்டிங்கிற்காக அம்மா பெங்களூரு சென்று இருந்தபோது சர்க்கரை நோய்க்காக இன்சுலின் ஊசி போட்டார். அந்த நேரத்தில் வருமான வரித்துறையிடம் இருந்து அம்மாவுக்கு நோட்டீஸ் சென்றது. இதனால் மன வேதனை அடைந்த அம்மா நிறுத்தி இருந்த மதுப்பழக்கத்தை மீண்டும் தொடர்ந்தார்.மதுவை அதிகமாக குடித்துவிட்டு அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அம்மா கோமா நிலைக்கு சென்று விட்டார். பெங்களூருவில் இருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

19 மாதம் ஆஸ்பத்திரியில் அம்மா இருந்தார். அப்பா தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து அம்மாவிடம் பேசுவார். அவருக்கு பிடித்தமான பாடல்களை அவர் கேட்கும்படி செய்தார். ஒருநாள் என் தம்பியை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.அம்மா என்று அவன் கூப்பிட்டதும் அதிசயமாக அம்மா கண் திறந்து பார்த்தார். தம்பியை பார்த்ததும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சற்றே கையை தூக்கினார்.பேச முடிய வில்லை. சிறிது நேரத்தில் கோமா நிலைக்கே சென்று விட்டார்.

ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் படுக்கையில் இருந்ததால் அம்மாவின் முதுகில் புண்ணாகி விட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். உடலில் சூரிய ஒளி படவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் வீட்டுக்கு வெளியில் உள்ள கார் ஷெட்டில் ஒரு நாடாக்கட்டில் செய்து அதில் அம்மாவை படுக்கச்செய்து சூரிய ஒளி படும்படி செய்வோம். அப்போது ஒரு பத்திரிகையாளர் வந்து பார்த்து ‘ராணி’ போன்று வாழ்ந்த சாவித்திரி, கார்ஷெட்டில் சொரி நாயுடன் தேவதாஸ் போல் வாழ்கிறார் என்று எழுதி விட்டார். அம்மா வறுமையில் வாடவில்லை. அம்மாவின் மறைவுக்கு பிறகும் சொத்துக்கள் இருந்தன. கொடைக்கானல் பங்களா, ஐதராபாத்தில் உள்ள பங்களா, சென்னையில் 3 வீடுகள் இருந்தன. இவற்றை நானும், தம்பியும் பிரித்துக் கொண்டோம்.

1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி அம்மா எங்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார். அம்மாவை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அப்பா எடுத்துச்சென்று இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தார். மனைவி என்ற அங்கீகாரத்துடன் சுமங்கலியாக அம்மாவின் கடைசி பயணம் தொடங்கியது.

- விஜய சாமுண்டீஸ்வரி (நடிகை சாவித்திரி மகள்)

Next Story