தாலாட்டை மறந்த தமிழ் மக்கள்


தாலாட்டை மறந்த தமிழ் மக்கள்
x
தினத்தந்தி 7 Dec 2018 6:54 AM GMT (Updated: 7 Dec 2018 6:54 AM GMT)

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன.

பிறந்த குழந்தைகளை வீட்டில் உள்ள தந்தையின் வேட்டி, அல்லது தாயின் சேலையால் தொட்டில் கட்டி தூங்க வைப்பார்கள். அப்போது அந்த குழந்தையின் தாயோ, அல்லது குழந்தையின் பாட்டியோ குழந்தை தூங்க வேண்டும் என்பதற்காக தாலாட்டு பாடல்களை பாடுவார்கள். தொட்டிலில் படுத்து இருக்கும் குழந்தை தாயின் தாலாட்டு பாடலை ராகத்தோடு கேட்கும் போது அப்படியே மெய்மறந்து தூங்கிவிடும்.இப்படி தாலாட்டு பாடல் கேட்டு தூங்கிய காலம் இப்போது மலையேறி விட்டது.அழுகிற குழந்தையை தூங்க வைக்க தாலாட்டுப்பாடல், வயல்களில் நாற்று நடும் போதும், களை பறிக்கும் போதும், கதிர் அடிக்கும் போதும் என இப்படி ஒவ்வொரு கிராம பெண்களும் கிராமிய தாலாட்டு பாடல்களை பாடி வந்தனர். அதே போன்று தான் கோவில், வீடுகளில் பொங்கல்பானை வைத்து பொங்கல் பொங்கும் போது குலவையிடுவார்கள். கோவில்களிலும் பெண்கள் குலவையிடுவார்கள். ஆனால் இப்போது இந்த தாலாட்டுப்பாடல்களையும், குலவை சத்தத்தையும் கிராமங்களில் கூட காண முடியவில்லை.

இந்த தாலாட்டு பாடல்கள் எல்லாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் வயதான பாட்டிகள் கூட பாடுவதில்லை. அவர்களுக்கு வயது ஆக, ஆக அந்த தாலாட்டு பாடல் வரிகளும் மறந்தே போய் விட்டன. இப்படி காலத்தால் தாலாட்டு பாடல்களும் அழிந்து விட்டன. இருந்த போதிலும் பேத்தி, கொள்ளுப்பேத்தி வரை உறவுகளை கொண்ட நெல்லை மாவட்டம் பொழிக்கரையைச் சேர்ந்த 80 வயதான பாலம்மாள் இன்றும் குழந்தைகளை தூங்க வைக்கும் தாலாட்டுப்பாடல் வரிகளை அசை போட்டு பார்க்கிறார். இவருக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அத்தனை குழந்தைகளும் சுக பிரசவத்தில் பிறந்தன. அத்தனை குழந்தைகளையும் அவர் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது தாலாட்டுப்பாடல் பாடி தூங்க வைப்பது உண்டு. ஒரு கட்டத்தில் அவரது குடும்பத்தில் மூத்த மகன் அடுத்து உள்ள குழந்தையை தூங்க வைக்க தாய் பாலம்மாள் பாடிய தாலாட்டு பாடலை பாடி தனது தம்பியை தூங்க வைக்கிறார். இப்படி அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அந்த தாய் பாடிய தாலாட்டு பாடல் இன்றும் அவர்களது நெஞ்சில் பசுமரத்தாணி அடித்தது போன்று ஆழமாக பதிந்து இருக்கிறது.இதோ பாலம்மாளின் பாடல் வரிகள் வருமாறு:-

ஆராரோ..ஆரிராரோ, என் கண்ணே கண்மணியே
உனக்கு ஆராரோ... ஆரிராரோ
காக்கா கதிர் அறுக்க என் கண்ணே கண்மணியே
உனக்கு கட்டெறும்பு சூடு அடிக்க
ஆராரோ...ஆரிராரோ...
மாமன் பொதி அளக்க என் கண்ணே கண்மணியே
உனக்கு மச்சினன் மார் கோட்டை கட்ட
ஆராரோ...ஆரிராரோ
தூங்காத கண்ணுக்கு துரும்பு கொண்டு மை எழுதி
உறங்காத கண்ணுக்கு ஓலை கொண்டு மை எழுதி
ஆராரோ... ஆரிராரோ...
பாலும் அடுப்பிலே தான்
இந்த பாலகனும் தொட்டிலே தான்
ஆராரோ...ஆரிராரோ
பாலைத்தான் பார்க்கட்டா...இந்த பாலகனை ஆட்டட்டா
ஆராரோ...ஆரிராரோ...
சோறும் அடுப்பிலே தான்
இந்த சொர்ணக்கிளியும் தொட்டிலே தான்
நான் சோறத்தான் பார்க்கட்டா
இந்த சொர்ணக்கிளியை ஆட்டட்டா
ஆராரோ...ஆரிராரோ.
கண்ணே ஏன் அழுகிற...
மாமன் அடிச்சானோ
மல்லிகைப்பூ செண்டாலே
கண்ணே ஏன் அழுகிற...
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூ செண்டாலே
கண்ணே ஏன் அழுகிற...

முதல் பாடலில் தான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நெற்கதிர் அடிக்கும் காட்சியை மையப்படுத்தியும், அடுத்த பாடலில் சமையல் வேலையை பார்த்துக்கொண்டு தொட்டிலையும் ஆட்டும் போது ஏற்பட்ட வரிகளையும் பாடலாக்கி இருப்பது தெரிகிறது.3-வதுபாடலில் அந்த தாய் தனது தம்பி, தம்பி மனைவியை மையப்படுத்தி அந்த பாடல் பாடி இருப்பது விளங்குகிறது.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன தான் வசதி இருந்தாலும் அந்த கால தாலாட்டுப்பாடல் என்ற வரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. குழந்தைகளின் அழுகையை நிறுத்த வேண்டும் என்றால் உடனே செல்போனை எடுத்து காண்பிக்கிறார்கள். அதில் வரும் படங்கள், இசை, பாடல்களை போட்டு காண்பித்து அழுகையை நிறுத்துகிறார்கள். பிறந்து தவழ்ந்து ஊர்ந்து செல்லும் போதே விலையுயர்ந்த செல்போனை குழந்தை கையில் கொடுத்து விளையாட வைத்து விடுகிறார்கள்.

இதனால் இப்போது பெரியவர்களுக்கு செல்போனில் தெரியாத தொழில் நுட்பத்தை எல்லாம் இப்போது உள்ள பிஞ்சு குழந்தைகள் கற்று தரும் நிலைமை உள்ளது. ஆனால் என்ன தான் இருந்தாலும் இந்த மண் உள்ளவரை தாலாட்டுப்பாடல்களும், கிராமியபாடல்களும் மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- சுமதி, திருச்சி

Next Story