நீண்ட பயணம் போகும் ‘கறுப்பு காண்டாமிருகங்கள்’


நீண்ட பயணம் போகும் ‘கறுப்பு காண்டாமிருகங்கள்’
x
தினத்தந்தி 8 Dec 2018 10:56 AM GMT (Updated: 8 Dec 2018 10:56 AM GMT)

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை கறுப்பு காண்டாமிருகங்கள், ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவின் ருவாண்டாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன.

குறிப்பிட்ட இன கறுப்பு காண்டாமிருகங்களை மீண்டும் ருவாண்டாவில் உள்ள காட்டுப் பகுதியில் விட 3 ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.

உலகில் சுமார் 2,500 கறுப்பு காண்டா மிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவற்றுள் 90 காண்டாமிருகங்கள் 22 ஐரோப்பிய விலங்கியல் பூங்காக்களில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் செக் குடியரசு, இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள 5 கறுப்பு காண்டாமிருகங்கள் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொண்டுவிடப்பட உள்ளன.

செக் குடியரசில் உள்ள டுவுர் கிரலோவ் உயிரியல் பூங்கா, இங்கிலாந்தின் பிளெமிங்கோ லாண்ட் மற்றும் டென்மார்க்கில் உள்ள ரீ பார்க் சபாரி ஆகிய இடங்களில் இருந்து 3 பெண் காண்டாமிருகங்களும், 2 ஆண் காண்டாமிருகங்களும் முதலில் செக் குடியரசு நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் பழகவிடப்பட்டு, பின்னர் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் கிழக்கு ருவாண்டாவில் உள்ள அககெரா தேசியப் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கறுப்பு காண்டாமிருக இனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்ததாகக் கூறப்படுகிறது. ருவாண்டாவில் 1970-களில் பல நூறு கறுப்பு காண்டாமிருகங்கள் திறந்த புல்வெளிகளில் உலவிவந்தன.

1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலையால் 5 லட்சம் மக்கள் மட்டுமல்லாமல், விலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும் சட்டவிரோத வேட்டை காரணமாக அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

இந்நிலையில் அரியவகை கறுப்பு காண்டாமிருகங்கள் தங்களது சொந்த மண்ணுக்குத் திரும்புகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 18 காண்டாமிருகங்கள், தென்ஆப்பிரிக்காவில் இருந்து ருவாண்டாவுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Next Story