பெண் தொழில் முனைவோர்களின் புன்னகை உலகம்


பெண் தொழில் முனைவோர்களின் புன்னகை உலகம்
x
தினத்தந்தி 9 Dec 2018 5:53 AM GMT (Updated: 9 Dec 2018 5:53 AM GMT)

தமிழகத்தில் அமைதியாக ஒரு சாதனை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வீட்டில் சும்மாவே இருந்து பொழுதுபோக்கிக் கொண்டிருப்பதாக கருதப்பட்ட பெண்களில் பலர் தங்களுக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் பயிற்சி பெற்று, அந்த தொழிலை திறம்பட செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தில் அதனால் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கிறது. தன்னம்பிக்கை அதிகமாகி தங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள். தோற்றத்தில் கம்பீரமும், உற்சாகமும் தென்பட வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் இத்தகைய வளர்ச்சிக்கு பல்வேறு தொழில் முனைவோர் அமைப்புகள் காரணமாக இருக்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கது, வீவா எனப்படும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம்’.

இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்னையில் ‘பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கும்’ நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரபலமான தொழில் வழிகாட்டிகள் கலந்துகொண்டு, ஏராளமான பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கினார்கள். அதில் ‘புடவை பாலிஷிங்’ செய்வது பற்றிய பயிற்சி பெண்களை வெகுவாக கவர்ந்தது. இது பழைய புடவைக்கு பாலீஷ் போட்டு, டிரைகிளீனிங் செய்து புதிதுபோல் மாற்றும் லாவகமான கலையாகும்.

திரண்டிருந்த பெண்களுக்கு மத்தியில், பச்சை நிறத்திலான பழைய மைசூர் சில்க் புடவை ஒன்றை எடுத்துவந்த பயிற்சியாளர் ராஜலட்சுமி, அரை மணி நேரத்தில் அதை பளிச்சென்று பாலீஷ் செய்து காட்டினார். அது மெருகுகூடி புதிதுபோல் தோன்றியது.

உற்றுக் கவனித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பெண் களுக்கு மத்தியில் பேசிய ராஜலட்சுமி, “புடவை பாலிஷிங், பெண்களுக்கு ஏற்ற எளிமையான கலைத் தொழில். பல கடைகள் ஏறி இறங்கி பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு புடவையைத் தேர்ந்தெடுப்பார்கள். வாங்கி, உடுத்தி வருடங்கள் சில ஆகிவிட்டாலும் அதன் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆசை குறையாது. ஆனால் புடவை பழையதாகியிருக்கும். அத்தகைய புடவைகளை குறைந்த செலவில் அவர்களது மனதுக்கு பிடித்ததுபோல் பாலிஷிங் செய்து கொடுக்கலாம். கடைகளில் பாலிஷ் செய்வதற்கு உத்தேசமாக 350 ரூபாய் வாங்குவார்கள். பெண்களாகிய நாம் 200 ரூபாய்க்கு வீட்டில் வைத்தே பாலிஷ் செய்துகொடுக்கலாம். வீடுகளுக்கு நேரடியாகவே சென்று புடவைகளை வாங்கி, பாலிஷ் செய்து டோர் டெலிவரி கொடுத்தால் மாதம் எளிதாக 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்” என்றார்.

அதை தொடர்ந்து பயிற்சியாளரிடம் பெண்கள், ‘புடவை பாலிஷிங்’ தொடர்பான விளக்கங்களை கேட்டுக்கொண்டிருக்க, “பெண்கள் எளிதாக சம்பாதிப்பதற்கு வழிகாட்டும் விதத்தில் இதுபோன்ற ஏராளமான பயிற்சிகளை இலவசமாகவே வழங்கிக்கொண்டிருக்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏராளமான பெண் தொழிலதிபர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்” என்று தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அது பற்றிய நமது கேள்வி களுக்கு அவர் விளக்கமாக அளித்த பதில்:

இன்றைய பெண்களிடம் தொழில் சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது. அவர்களை தொழிலதிபர்களாக்குவது எளிதான காரியமா?

“தொழில் சிந்தனையும், நிர்வாகத்திறனும் ஒவ்வொரு பெண்ணிடமும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் ஒருங் கிணைக்கும் ஆற்றலும், வழி நடத்திச்செல்லும் ஆற்றலும் உருவாகிவிட்டதை நம்மால் ஒவ்வொரு வீட்டிலும் காண முடியும். அதுபோல் கற்றுக்கொள்ளும் திறனும், கற்றதை வெளிப்படுத்தும் திறனும் பெண்களிடம் அதிகம் இருக்கிறது. இப்படிப்பட்ட பல தகுதிகள் இருந்தாலும் அவைகளை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஒருவித தயக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். முதலில் அந்த தயக்கத்தில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அடுத்து அவர்களுக்கு எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டறியவேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். அந்த தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தொழிலில் அவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டும். அவைகளை எல்லாம் நாங்கள் அதற்குரிய நிபுணர்கள் உதவியோடு அலசி ஆராய்வதால், ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுந்தபடி தொழில்பயிற்சி தருகிறோம். அதில் அவர்கள் முழுமனதோடு ஈடுபட்டு வெற்றி காண்கிறார்கள். அதனால் பெண் தொழிலதிபர்களை உருவாக்குவது எங்களை பொறுத்தவரையில் எளிதான காரியம்தான்..”

இது போன்ற தொழில்முனைவோர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? எத்தனை ஆண்டுகாலமாக இதனை நடத்தி வருகிறீர்கள்?

“தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நான் பிறந்தேன். எனக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை உண்டு. எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளின் முன்பகுதியில் பெரிய திண்ணைகள் அமைத்திருப்பார்கள். தினமும் காலையில் என் அம்மா மரகதம் மகாராஜன் எங்கள் வீட்டுத் திண்ணையை கழுவி சுத்தம் செய்து வைப்பார். வெள்ளரிக்காய், கருவாடு, பானை விற்கும் பெண்கள் போன்றவர்களெல்லாம் அதில் வந்து உட்காருவார்கள். சிறிது நேரம் அம்மாவிடம் பேசிவிட்டு, பின்பு அவர் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு, விடைபெற்று வியாபாரத்தை கவனிக்க செல்வார்கள்.

அப்படி அவர்களிடம் பரிவுகாட்ட என்ன காரணம் என்று அம்மாவிடம் ஒருநாள் கேட்டபோது, ‘ஒவ்வொரு பெண்ணும் வயிற்றுப் பிழைப்பிற்காக, ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் தெருத்தெருவாக அலைந்து இந்த வியாபாரத்தை செய்கிறார்கள். அதனால் அவர்கள் மனதும் உடலும் சோர்ந்துபோய்இருக்கும். அவர்களை சிறிது நேரம் உட்காரவைத்து மனம்விட்டு பேசினால், மனபாரம் குறையும். உற்சாகத்தோடு தங்கள் வியாபாரத்தை கவனிப்பார்கள். இப்படி சிலருக்காவது நாம் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். கடவுள் இதற்காகத்தான் நமக்கு இந்த வாய்ப்பு வசதிகளை தந்திருக்கிறான். நம்மால் முடிந்ததை எப்போதும் மற்றவர்களுக்காக செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று சொல்வார். நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் பார்த்து வந்த இந்த விஷயங்கள்தான் நான் இந்த துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்.

என் கணவர் ராதாகிருஷ்ணன் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பிரசிடென்ட் பதவி வகிக்கிறார். அவர் சில வெளிநாடுகளில் வேலைபார்த்தபோது நானும் அங்கு தங்கியிருந்தேன். காங்கோவில் தங்கியிருந்தபோது முதன் முதலில் அங்குள்ள பெண்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற அமைப்பை தொடங்கினேன். பின்பு இந்தியா திரும்பி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியை மணிமேகலை பெண்களுக்காக நடத்தி வரும் ‘வீட்’ என்ற அமைப்பில் சேர்ந்து செயல்பட்டேன். அதன் பின்பு வீவா அமைப்பை தொடங்கினேன். பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 20 முதல் 75 வயது வரையுள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தமிழக அரசு, தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள், மாவட்ட தொழில்மையங்கள், எம்.எஸ்.எம்.ஈ-டி.ஐ, பெடரேஷன் ஆப் இண்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைஷேசன் போன்றவைகளின் உதவியால் எங்கள் பயிற்சிகளும், முயற்சிகளும் வெற்றியடைகின்றன”

எத்தனை விதமான தொழிற்பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குகிறீர்கள்?

“முதலில் பெண்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி, வெளி உலகத்தினுடனான அணுகுமுறைக்கான பயிற்சி, தகவல் தொடர்பு பயிற்சி, அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் பயிற்சி, ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்கான பயிற்சி, ஆளுமைத் திறன் வளர்ப்பு பயிற்சி போன்ற பல வகை பயிற்சிகளை அளிக்கிறோம். இவைகள்தான் பெண்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சி கள். இதை அவர்கள் பெற்ற பின்பு, அவரவருக்கு பிடித்தமான தொழிற்பயிற்சியை அளிக்கிறோம். அதில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, கேக் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, பேப்ரிகேஷன் தொழில்நுட்ப பயிற்சி, ஏற்றுமதி தொழில்கள் பற்றிய பயிற்சி இப்படி.. நூறுக்கும் மேற்பட்ட பயிற்சி களை, அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் மூலம் வழங்குகிறோம். பின்பு அவர்களை அந்த தொழிலில் ஈடுபடவைத்து தொடர்ந்து லாபம் ஈட்டும் வரை கண்காணித்து வழிகாட்டுகிறோம். நாளுக்கு நாள் புதிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தலைவிகள் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொண்டே தொழிலையும் செய்யும் அளவுக்கு அவர்களை பக்குவப்படுத்திவிடுகிறோம். எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் சிவஞானம் எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். எங்கள் சங்கம் சென்னை, ஈக்காட்டுதாங்கலில் இயங்கிவருகிறது. அங்கு கிராம பகுதி பெண் களுக்கு தங்கும் இடவசதியுடன் குறுகிய கால அழகுக்கலை பயிற்சியும் வழங்குகிறோம்”

சிறப்பாக நீங்கள் தொழில்பயிற்சிகளை வழங்கினாலும், பெண்கள் தொழிலை நடத்த பணம் தேவைப்படும் அல்லவா?

“பணம் முக்கியம்தான். அதனை முறைப்படி கடனாக தர மத்திய அரசிலும், மாநில அரசிலும் மானியத்தோடுகூடிய பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண் தொழில்முனைவோர்களுக்காக ‘நீட்ஸ்’ என்ற கடனுதவி திட்டத்தை அறிவித்தார். அதன்படி 5 ஆயிரம் ரூபாய் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன்பெற்று தொழில் செய்யலாம். மத்திய அரசும் முத்ரா என்ற கடனுதவி திட்டத்தை பெண்களுக்காக செயல்படுத்துகிறது. இப்படி பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதனை பற்றி அந்த துறை சார்ந்த அதிகாரிகளே வந்து விளக்கிகூறி, கடன் பெற வழிகாட்டு கிறார்கள். இப்படி கடன் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அதை பயன்படுத்திக்கொள்கிறவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் சிறுவணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்”

இளம் பெண்களிடம் தொழில் ஆர்வத்தை தூண்ட ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?

“இன்றைய கல்லூரி மாணவிகளிடம் சுயதொழில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதை மேம்படுத்துவதற்காக கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை அழைத்து அதற்குரிய வழிகாட்டுதல் வகுப்புகளை நடத்தும்படி கூறுகிறார்கள். பல்வேறு பெண்கள் கல்லூரிகளில் சுயதொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அதன் மூலம் எதிர்காலத்தில் ஏராளமான கல்லூரி மாணவிகள் தொழில் முனைவோராகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது”

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண் களுக்குத்தானே இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பெண்களும் பலன் அடைய என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

“சென்னையில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் இலவச தொழிற் பயிற்சி்க்கான வாய்ப்பு தென்கோடி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘மாவட்டந்தோறும் மங்கையருக்கான தொழிற் பயிற்சி’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு பல்வேறு விதமான இலவச தொழில்பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மீதமுள்ள மாவட்டங்களில் தொடரவும் திட்டமிட்டிருக்கிறோம். ஆறு மாதங்களில் அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் பயிற்சி வழங்கிவிடுவோம். எங்கள் மூலம் இதுவரை 400 பெண் தொழில்முனைவோர் உருவாகியிருக்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில், ஆயிரம் பேர் என்ற இலக்கை அடைந்துவிடுவோம்”

இவரது நம்பிக்கை வெல்லட்டும்.. தமிழக பெண்களின் வாழ்க்கை ஜொலிக்கட்டும்..

(கிருஷ்ணா- ராதாகிருஷ்ணன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். அஸ்வின் இந்திய அரசுப் பணிக்கான கல்விப் பயிற்சியை பெற்று வருகிறார். அக்‌ஷய், டாக்டருக்கு படிக்கிறார்)

Next Story