அழகுக்காக கழுதைப்பால் சேகரிக்கும் பெண்


அழகுக்காக கழுதைப்பால் சேகரிக்கும் பெண்
x
தினத்தந்தி 9 Dec 2018 7:10 AM GMT (Updated: 9 Dec 2018 7:10 AM GMT)

எகிப்திய அழகி கிளியோபட்ராவின் அழகு ரகசியத்திற்கு அவர் கழுதை பாலில் குளித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் கழுதை பாலையே மூலதனமாக்கி அதில் குளியல் சோப் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார், பூஜா கவுல்.

 23 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர். புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட இவர், கழுதை பாலை மருத்துவத்துக்கு மட்டுமின்றி அழகுக்கும் பயன்படுத்தலாம் என்பதை புத்தகம் மூலம் அறிந்திருக்கிறார். சோலாப்பூர், காஜியாபாத், தாஸ்னா போன்ற பகுதிகளில் சிலர் கழுதைகள் வளர்த்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கழுதை பால் வாங்கி சோப் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார். கழுதை பாலின் முக்கியத்துவம் அதனை வளர்ப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை என்பது பூஜாவின் ஆதங்கமாக இருக்கிறது. மற்ற பாலைவிட கழுதைப் பாலுக்கு விலை மதிப்பும் அதிகம் என்கிறார்.

‘‘கழுதைப் பாலில் வைட்டமின் ஏ, சி, டி, இ, பி1, பி6, ஒமேகா 3, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், ரெட்டினோல் போன்றவற்றின் அளவும் அதிகமாக இருக்கிறது. அவை சரும சுருக்கங்களை குறைக்க உதவுகின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை 3 ஆயிரம் ரூபாய். இதுபற்றி கழுதை வளர்ப்பவர்களுக்கு தெரிவதில்லை. தாங்கள் வளர்த்துவரும் கழுதைகளை சாதாரணமாக நினைத்து விடுகிறார்கள். கழுதைகள் வளர்ப்பது மூலம் வருமானம் ஈட்டலாம் என்பது தெரியாமல் வேலை தேடி நகர்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் பகுதியில் கழுதை வளர்ப்பவர்களை சந்தித்து பேசினேன். அவர்களிடம் ஒரு லிட்டர் கழுதை பாலை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதனால் அவர்கள் கழுதை வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட தொடங்கி விட்டார்கள். ஒரு பெண் கழுதை தினமும் 500 மி.லி. முதல் 750 மி.லி. வரை பால் சுரக்கும். ஒரு வீட்டில் 4 முதல் 10 கழுதைகள் வளர்க்கிறார்கள். ஒரு கழுதையிடம் இருந்து 100 முதல் 200 மி.லி வரை பால் எடுத்துக் கொள்கிறோம். அதன் மூலம் சீராக பால் சுரந்து கொண்டிருக்கும். தேவைக்கு அதிகமாக பால் கறந்து கழுதைகளை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. தற்போது கழுதை வளர்ப்பவர்கள் 12 பேர் எங்கள் குழுவில் இணைந்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டுக்குள் கழுதை வளர்க்கும் உரிமையாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் எங்கள் சோப் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். சோப் மட்டுமின்றி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளோம். 25 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கவரும் வகையில் எங்களின் தயாரிப்புகள் அமையும்’’ என்கிறார்.

நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் முதலீடு செய்யும் தொழில் முனைவோர் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு சிறப்பாக செயல்பட முடியும் என்பது பூஜாவின் கருத்தாக இருக்கிறது.

‘‘நம் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம்பேர் கிராமங்களில் வசிக்கிறார்கள். படித்து முடித்ததும் நகர்ப்புறத்திற்கு வேலைவாய்ப்பை தேடிச்செல்லும் மன நிலையிலேயே இருப்பதால் கிராமப்புறத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்த மறந்துவிடுகிறோம். அவற்றை பயன்படுத்திக் கொண்டால் கிராமப்புறங்களிலும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம்’’ என்கிறார்.

ஆரம்பத்தில் பூஜா கழுதை பாலை சேகரித்து சோப் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பலரும் கேலி செய்திருக்கிறார்கள்.

‘‘பெண்களை பொறுத்தவரையில் சிறு நகரங்களில் தொழில் தொடங்குவது சவாலானதாகவே இருக்கிறது. அங்கே வெளிப்படையாக ஆணாதிக்க உணர்வை அறிந்துகொள்ள முடிகிறது. ஆரம்பத்தில் நான் கழுதை வளர்ப்பவர்களை சந்தித்து எனது ஆலோசனைகளை சொன்னபோது சிலர் என்னை பைத்தியக்காரி என்று அழைத்தார்கள். காலையில் 5 மணிக்கு எழுந்து பால் சேகரிக்க செல்லும்போது பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தேன். ஆணாக இருந்திருந்தால் பயம் தோன்றியிருக்காது என்று நினைக்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்கு எதிராக சமூகத்தில் முட்டுக்கட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை தகர்த்தெறிந்து பெண்கள் முன்னேற வேண்டும். நானும் அதற்கான போராட்டக்களத்தில்தான் இருக்கிறேன்’’ என்கிறார்.

Next Story