கழிவுக்கலை அல்ல கவரும் கலை


கழிவுக்கலை அல்ல கவரும் கலை
x
தினத்தந்தி 9 Dec 2018 7:56 AM GMT (Updated: 9 Dec 2018 7:56 AM GMT)

சுற்றுச்சூழல் மாசுபாடு, உலக வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குப்பையில் வீசப்படும் கழிவு பொருட்கள், மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவற்றை கொண்டு கண்களை கவரும் விதத்தில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை 14 நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜெண்டினாவை சேர்ந்த ஆகஸ்டோ டேனியல் கலோ, நமது தேசிய சின்னத்தை கழிவு பொருட்களை கொண்டு அழகாக வடிவமைத்திருக்கிறார். 

நியூசிலாந்தை சேர்ந்த டோனால்டு பக்லாஸ் இரும்பு கழிவுகளை கொண்டு பறக்கும் கழுகு உருவத்தை உருவாக்கியுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த அனிதா மரியா வில்ஹெல்மினா டி ஹார்டே வங்க புலியையும், ஸ்பெயினை சேர்ந்த டேனியல் புத்த சிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கி உள்ளார்கள். பரோடாவை சேர்ந்த ஜிதெண்டர் குமார் ஓஜா, பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றிய விளக்க சிற்பத்தையும் கழிவு பொருட்களால் உருவாக்கியுள்ளார்.



சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதுடன் கழிவு பொருட்களை மறுபடியும் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாகும். இந்தியாவில் முதன் முறையாக திறந்தவெளியில் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தை ஒடிசா அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து அமைத் திருக்கின்றன.

‘‘இது கண்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வு மட்டும் அல்ல. சமூக அக்கறை சார்ந்த வலுவான தகவலை குறுகிய நேரத்தில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது. இந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளையும் கவரும். சமூக, கலாசார கலைகளை ஊக்குவிப்பதோடு இளம் கலைஞர்களிடம் புதிய சிந்தனை களையும் விதைக்கும்’’ என்று அதை பார்த்து ரசிப்பவர்கள் சொல்கிறார்கள்.

Next Story