மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..


மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..
x
தினத்தந்தி 9 Dec 2018 10:11 AM GMT (Updated: 9 Dec 2018 10:11 AM GMT)

மிதவைக் கூண்டு மீன்வளர்ப்பு முறை இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் குறுகிய இடத்தில் மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறமுடியும்.

இதற்கான இடத் தேர்வு, கூண்டு அமைக்கும் முறை, வலை மற்றும் வலை அமிழ்த்திகளின் செயல்பாடுகள், நங்கூரம் அமைத்தல், நாற்றங்கால் கூண்டு அமைத்தல் போன்றவைகளை பற்றி கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சி..

வளர்ப்புக் கூண்டு

இக்கூண்டின் வலைகள் 13 மி.மீ கண்அளவு கொண்டவை. மீன்கள் வளரும்போது அவைகளின் அளவைப் பொருத்து வலைகளின் கண் அளவை மாற்றிக் கொள்ளலாம். இக்கூண்டுகளில் 1 கன மீட்டரில் 100 மீன்கள் என்ற எண்ணிக்கையில் இருப்பு செய்து 6 மாதங்களில் 500 கிராமிலிருந்து 800 கிராம் வரை வளர்த்து அறுவடை செய்யலாம்.

மிதக்கும் கொட்டகை

வேலையாட்கள் தங்குவதற்கும், தீவனம் வைப்பதற்கும், அத்தியாவசிய பொருட்கள் வைப்பதற்கும் மிதக்கும் கொட்டகைப் பயன் படுகிறது.

தினசரி மிதவைக் கூண்டுகளுக்கு சென்று மீன்களுக்கு உணவு இடவும், மீன்களின் இயல்பு நிலையை கண்காணிக்கவும் நடைபாதை அவசியமாகிறது.

பாதுகாப்பு மிதவை கூண்டில் வளர்க்கப்படும் மீன்கள் திருடு போகாமல் இருக்க காவலாளிகள், சூரிய மின்சாரத்தில் இயங்கும் ஒளிவிளக்குகள், சி.சி.டி.வி. கேமரா மற்றும் காவலுக்கு பழக்கப் படுத்தப்பட்ட நாய்கள் ஆகியவை தேவைப்படும்.

உணவு மேலாண்மை

நீர்நிலைகளில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்கும்போது மீன்களுக்கு இயற்கை உணவு அதிகம் கிடைப்பதில்லை. எனவே மீன்களுக்கு அளிக்கப்படும் உணவு தரம் வாய்ந்ததாகவும், மீன்கள் வேகமாக வளருவதற்கு ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும். மீன்களுக்கு தேவையான புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்கான உணவுகளில் இருக்கவேண்டும்.

மீன்களுக்கு தேவையான மீன் உணவு துகள்களாக மற்றும் மிதக்கும் குறுணைகளாக 0.5.மி.மீ., 1 மி.மீ., 2 மி.மீ., 3 மி.மீ. மற்றும் 4 மி.மீ ஆகிய வடிவங்களில் கிடைக்கிறது. மீன்களின் நீளம் மற்றும் எடையளவை பொருத்து தேவையான அளவில் உணவினை அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட உணவை 20 நிமிடங்களில் மீன்கள் உட்கொள்ளவேண்டும். திலேப்பியா மீன் களுக்கு 25 முதல் 35 விழுக்காடு புரதம் கொண்ட உணவும், கெண்டை மற்றும் பங்கஸ் மீன்களுக்கு 24 முதல் 28 விழுக்காடு புரத உணவும் அளிக்கப்படவேண்டும். மிதக்கும் உணவினை பயன்படுத்தினால், உணவு வீணாவது தடுக்கப்படும். ஆனால் காற்று அதிகம் உள்ள சமயங்களில் உணவு வேகமாக கூண்டை விட்டுவெளியேறி விடும் சூழ்நிலை இருப்பதால் உணவை ஒரே நேரத்தில் இடாமல் பலமுறை குறைந்த அளவுகளில் இட வேண்டும். மீன்கள் உணவு உட்கொள்ளும் நேரத்தை கவனித்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு இடுவது நல்லது.

நோய் பராமரிப்பு

மிதவைக் கூண்டுகளில் மீன்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவைகளுக்கு நோய் வராமல் பராமரிப்பது மிக முக்கியம். நோய் ஏற்பட்டால் கீழ்கண்ட அறிகுறிகள் காணப்படும்.

* தோல் மற்றும் துடுப்புகளில் நிறமாற்றம் ஏற்படும்.

* தலைகீழாக நீந்தும்.

* நீரின் மேற்பரப்பில் நீந்துவதோடு, மெதுவாகவும் நீந்தும்.

* வாயை திறந்து காற்றை விழுங்கும்.

* குறைவாக உணவு உண்ணுதல் அல்லது உண்ணாமல் இருத்தல்.

அறுவடை

மிதவைக் கூண்டுகளில் இருந்து மீன்களை அறுவடை செய்வது மிக எளிது. விற்பனையை பொருத்து தேவைக்கு மீன்களை அறுவடை செய்யலாம். பெரிய மீன்களை முதலில் பிடித்து விற்பது மூலம் படிப்படியாக வருடம் முழுவதும் விற்பனை செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் மீன் கிடைக்கும். பொதுவாக 500 கிராம் முதல் 800 கிராம் அளவு மீன்கள் வளர 6 முதல் 8 மாதங்கள் ஆகும்.

(மிதவைக் கூண்டுகளில் மீன்கள் வளர்க்க குறைந்த முதலீடுபோதும். மிதவைக் கூண்டுகள் அமைப்பது எளிது. மீன்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை எளிதாக பரிசோதித்துவிடலாம். நெருக்கடியான நேரங்களில் மிதவைக்கூண்டுகளை விரைவாக இடமாற்றிவிடலாம். ஆண்டு முழுவதும் மீன் கிடைக்கும். அறுவடையும் எளிது)

மிதவைக் கூண்டு பராமரிப்பு

மிதவைக் கூண்டில் உள் மற்றும் வெளி வலைகளை அடிக்கடி சுத்தப்படுத்தினால், மிதவை கூண்டு களுக்கு நீரோட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மீன் களுக்கு அதிக பிராணவாயு கிடைப்பதுடன் மீன் கழிவுகளும் கூண்டைவிட்டு வெளியே சென்றுவிடும். மீன்கள் ஆரோக்கியமாக வளரும்.

நீரின் ஆழம் குறையும்போது மிதவைக்கூண்டின் வலைகள் அடியில் உள்ள சகதியை தொடுவதால் பாக்டீரியா கிருமிகளால் மீன்கள் தாக்கப்பட்டு இறக்க நேரிடும். இதனை தவிர்க்க அப்படிப்பட்ட நேரங்களில் மீன் வலை களைத் தூக்கி கட்ட வேண்டும்.

நீர்நிலைக்கு வெளியிடங்களில் இருந்து கால்வாய் மூலம் புதிய நீர் வரும்போது மிதவைக் கூண்டுகளில் உள்ள மீன்களை கவனமாக பராமரிக்க வேண்டும். நீர் மாற்றத்தினால் மீன்கள் சில சமயங்களில் இறக்க நேரிடலாம்.

அறுவடை முடிந்த பிறகு மீன் வலைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும், மீன் கூண்டுகளில் உள்ள வலைகளை தண்ணீரிலேயேவைத்தும் பாதுகாக்கலாம். வெளியில் வைத்தால் சூரியஒளி மற்றும் எலிகளால் சேதம் ஏற்படலாம்.

சேதமடைந்த வலைகளை அவ்வப்பொழுது அதற்கேற்ற நூல்களை கொண்டு தைக்க வேண்டும்.

மிதவைக்கூண்டில் இடப்படும் உணவு வெளியே அடித்து செல்லும் இழப்பைத் தவிர்க்க, மிதவைக் கூண்டின் உள் வலையின் மேற்புறத்தில் நீர்மட்டத்தின் அளவைப்பொருத்து 15 முதல் 20 செ.மீ. அளவுக்கு நான்கு புறமும் பாலித்தீன் பை அல்லது தீவனப்பை இணைத்து தைக்கவேண்டும்.

மீன் வளர்ப்புத் தொழில் லாபகரமானது. அதை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு, இ்ந்த தொழிலில் ஈடுபடுவது மிகுந்த பயன்தரும். 

- நிறைவடைந்தது.

கட்டுரை: பேராசிரியர்கள் குழு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம், நாகப்பட்டினம். 


Next Story