ஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரம்


ஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரம்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:54 AM GMT (Updated: 10 Dec 2018 10:54 AM GMT)

ஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரமாக ‘டெலிவரி பாய்ஸ்’ கருதப்படுகிறார்கள்.

பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்பத்துடன் கடைவீதிக்கு வந்தது அந்தக்காலம். இப்போது வீட்டில் இருந்தே பொருட்களை வாங்குவது இந்தக்காலம் என்ற புரட்சி ஏற்பட்டு உள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே இன்று உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது. நமக்கு என்ன தேவை என்றாலும் இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். இடத்தை வாங்கி கடையை கட்டி, மின்சாரத்துக்கு பணத்தை கொடுத்து சம்பளத்துக்கு ஆட்களை வைத்து வியாபாரம் செய்யும் நிலை இப்போது கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இப்போது பொருட்களை உற்பத்தி செய்து அதனை ஆன்-லைனில் விற்பனை செய்வது என்பது அதிகரித்து விட்டது. இப்போது சட்டைப்பொத்தான் முதல் பிரியாணி வரை லட்சக்கணக்கான பொருட்கள் ஆன்-லைன் வர்த்தகத்தில் நமக்கு கிடைக்கிறது.

இதனால் பொது மக்கள் கடைவீதியில் கிடைக்கும் அதே பொருள் ஆன்-லைனில் சற்று குறைவாக இருப்பதால் ஆன்-லைன் வர்த்தகம் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். ஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரமாக ‘டெலிவரி பாய்ஸ்’ கருதப்படுகிறார்கள். நாம் வீட்டில் உட்கார்ந்து பொருட்களை தேர்வு செய்து கணினியிலோ அல்லது செல்போனிலோ ஓ.கே. செய்து விடுகிறோம். குறிப்பிட்ட பொருள் ஆன்-லைன் வர்த்தக நிறுவன கிளைகளுக்கு வந்து சேரும்.

பின்னர் அவற்றை அங்குள்ள டெலிவரி பாய்ஸ் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு வீடு, வீடாக தேடிச்சென்று பொருட்களை கொடுத்து வருகிறார்கள். இதனால் இப்போது நகர பகுதியில் எங்கு பார்த்தாலும் டெலிவரி பாய்ஸ் மோட்டார் சைக்கிளில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. தங்களது தோளில் மிகப்பெரிய பையை மாட்டிக்கொண்டு நகரில் வலம் வருகிறார்கள். வீட்டில் இருந்து பொருளை நாம் தேர்வு செய்தாலும் அதனை நம்மிடம் சேர்க்கும் டெலிவரி பாய்ஸ் தான் ஆன்-லைன் வர்த்தகத்தின் அஸ்திவாரமாக பார்க்கப்படுகிறார்கள். ஆன்-லைன் வர்த்தகத்தில் பொருட்களின் விலை சற்று குறைவாக இருப்பதாக பெரும்பாலானோர் தெரிவிக்கிறார்கள். ஆன்-லைன் பொருட்களை வினியோகம் செய்யும் டெலிவரி பாய்ஸ் இளைஞர் ஒருவரிடம் கேட்ட போது பொது மக்களின் ஆதரவுடன் ஆன்-லைன் வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. இதனால் எங்களை போன்ற பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பட்டப்படிப்பு படித்தும் வேலை கிடைப்பதில்லை. இதனால் எங்களைப் போன்ற பட்டதாரி இளைஞர்கள் இந்த தொழிலில் இறங்கி விட்டோம் என்று கூறினார்.

அனு, திருச்சி.

Next Story