மழை வளம் காக்கும் புல்வெளிக் காடுகள்


மழை வளம் காக்கும் புல்வெளிக் காடுகள்
x
தினத்தந்தி 11 Dec 2018 5:48 AM GMT (Updated: 11 Dec 2018 5:48 AM GMT)

புல்வெளிக் காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இயற்கையின் சங்கிலிக் கண்ணிகளில் ஒன்று.

ஆங்கிலேயர் நமது மலை வாசஸ்தலங்களில் காலூன்றிய பின்பு மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் உச்சியில் சோலைக் காடுகளுக்கு இடையிடையே இருக்கும் புல்வெளி காடுகளை விநோதமாகப் பார்த்தார்கள். அன்றைய ஆங்கிலேய சூழலியாளர்களுக்கும் புல்வெளிக் காடுகளின் உயிர் சூழல் புரியவில்லை.

அவர்களில் சிலர் புல்வெளிக் காடுகளை பயன்பாடற்ற நிலம் என்றும், இன்னும் சிலர் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளுக்காக உருவாக்கிய புல்வெளிகள் என்றும் முடிவுக்கு வந்தனர். புல்வெளிக் காடுகளை அழித்து தங்களது எரிபொருள் தேவைக்கான வாட்டில் எனப்படும் சீகை மரம், தேவதாரு, தைல மரம், சாம்பிராணி மரம் ஆகியவற்றை நட்டார்கள். நாடு விடுதலை அடைந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும்கூட, நமது வனத்துறையும் மேற்கண்ட மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தது.

இமயமலை தொடர், விந்திய மலை தொடர், மேற்கு, கிழக்கு மலை தொடர் உள்ளிட்டவற்றில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் இருக்கும் சோலைக் காடுகளின் ஊடேயும், புல்வெளிக் காடுகளை அழித்தும் இம்மரங்கள் நடப்பட்டன. நட்ட வேகத்தில் இவை அதிவேகமாக வளர்ந்து, பரவின. இதற்குக் காரணம், அவை நம் இயல் தாவரங்கள் இல்லை என்பதுதான். அயல் தாவரங்களுக்கு, நம் மண்ணில் இயற்கை எதிரிகள் குறைவு.

மேலும் இந்த மரங்களில் தங்களுக்கு தேவையான உணவு ஆதாரம் இல்லை என்பதால் பெரும்பாலான பறவைகள், விலங்குகள் இம்மரங்களை நாடுவதில்லை. பறவைகளின் வருகை குறைந்ததால் சோலைக் காடுகளின் பாரம்பரிய மரங்களான அத்தி, நீர்மத்தி, வேலம், புங்கன், நாவல், கருப்பாலை, இலுப்பை ஆகிய மரங்களின் இயல்பான இனப்பெருக்கமும் மட்டுப்பட்டது. அதற்கு காரணம், பறவைகள் உண்ட பிறகு, அவற்றின் எச்சம் வழியாக வெளியேறும் விதையிலிருந்தே ஆரோக்கியமான கன்று முளைக்கும். ஒரு கட்டத்தில் சோலைக் காடுகள் சீர்குலைந்து அழியத் தொடங்கின.

சோலையும், புல்வெளியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. புல்வெளிக் காடுகள் இல்லை எனில், சோலைக் காடுகள் இல்லை. புல்வெளிக் காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான இயற்கையின் சங்கிலிக் கண்ணிகளில் ஒன்று. சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப்பொழிவு பல மடங்கு அதிகம்.

மழைப் பொழிவின்போது மலை உச்சிகளில் இருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளப் பெருக்கில் இருந்து, சமவெளிகளைக் காக்கும் அரண்கள் புல்வெளிக் காடுகளே. புல்வெளி காடுகளின் மண்ணுடன் இயைந்த வேர்ப் பகுதிகள் மழைப் பொழிவின் மொத்த நீரையும் சிந்தாமல் சிதறாமல் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை.

அங்குச் சேகரமாகும் நீர் படிப்படியாக கீழே கசிந்து இடையிடையே இருக்கும் அடர்ந்த சோலைக் காடுகளுக்கு தண்ணீர் ஆதாரமாக திகழ்கின்றன. இதுவே ஆயிரக்கணக்கான சிற்றோடைகளாகவும், அருவிகளாகவும் மலையிடுக்குகளில் இருந்து வழிந்தோடி ஆறுகளாக உருப்பெறுகின்றன.

Next Story