ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா  -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்
x
தினத்தந்தி 12 Dec 2018 5:59 AM GMT (Updated: 12 Dec 2018 7:42 AM GMT)

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் வாக்கு வங்கியை பாரதீய ஜனதா கணிசமாக இழந்து உள்ளது.

சென்னை

ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் காங்கிரசே ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

சத்தீஸ்கார்



சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள  மொத்தம் 90 இடங்களில், காங்கிரஸ் 68 தொகுதிகளை வென்றது, பிஜேபி 15, சத்தீஸ்கார் ஜனதா காங்கிரஸ் 5,   பகுஜன்  சமாஜ் கட்சி 2 தொகுதிகளையும் கைபற்றி உள்ளன.

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் இந்த தேர்தலில் 43 சதவீத  வாக்குகளைப் பெற்று உள்ளது. 2013 மாநில தேர்தலில் 40.3 சதவீதமாக இருந்தது.
பா.ஜ.க. 2013 இல் 41 சதவீதமாக  இருந்து, 2018 தேர்தலில்  33 சதவீதமாக  வீழ்ச்சியடைந்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு  3.9 சதவீத  வாக்குகள் கிடைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜோகியின்  கட்சியான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கார் (ஜே)யுடன் அதன் கூட்டணி 7.6% வாக்குகளை பெற்று உள்ளது.  சுயேட்சைகள் 6.9 சதவீத வாக்குகளை பெற்று உள்ளன.

ராஜஸ்தான்




ராஜஸ்தானில் உள்ள  200 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு 199 தொகுதிகளில் மட்டுமே நடைபெற்றது. வேட்பாளரின் மரணத்தின் காரணமாக ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

5 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை கைபற்றிய பாரதீய ஜனதா  இந்த முறை 73  தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.  காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 6 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், ராஷ்டீரிய லோக்தாந்த்ரீக் கட்சி 3 இடங்களையும், பாரதீய பழங்குடியின  கட்சி 2 இடங்களையும்,  ராஷ்டீரிய லோக்தள் ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் அதிகமாக 13 இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

கடந்த தேர்தலில் 45.2 சதவீத ஓட்டுகள் பெற்ற  பாரதீய ஜனதா இந்த முறை 38.8 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று உள்ளது. காங்கிரஸ்  39.3 சதவீத ஓட்டுகளை பெற்று உள்ளது.  சுயேட்சைகள் மட்டும்  9.5 சதவீத ஓட்டுகளை பெற்று உள்ளன.

மத்திய பிரதேசம்



மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையே சிறிதளவு வித்தியாசங்களே உள்ளன.  காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. பாரதீய ஜனதா 108 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

கடந்த முறை 36.4 சதவீத ஓட்டுகள் வாங்கிய காங்கிரஸ் இந்த முறை 40.9 சதவீத ஓட்டுக்களை பெற்று உள்ளது. பாரதீய ஜனதா 44.9 சதவீததில் இருந்து 41 சவீதமாக குறைந்து உள்ளது. பகுஜன் சமாஜ்  கட்சி 5 சதவீத ஓட்டுக்களை பெற்று உள்ளது.

தெலுங்கானா


தெலுங்கானாவில்  சந்திரசேகர ராவின் ராஷ்டீரிய கட்சி  வரலாற்று வெற்றியை பெற்று உள்ளது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில்  வெற்றி பெற்று உள்ளது.  காங்கிரஸ் 19 இடங்களையும் கடந்த முறையை விட 2 இடங்கள் குறைவாகும். கடந்த முறை 2014-ல் 15 இடங்களை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.  அனைத்து  இந்திய  மஜ்லீஸ் கட்சி இந்த முறை  7 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

ராஷ்டீரிய சமிதி கட்சி தேர்தலில் 34 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. இந்த முறை  46.9 சதவீத ஓட்டுகளை பெற்று உள்ளது. காங்கிரசின் வாக்கு சதவீதம்  25.2 சதவீதத்தில் இருந்து 28.4 சதவீதமாக உயர்ந்து உள்ளது.  பிஜேபி 7 சதவீத ஓட்டுகளையும், தெலுங்கு தேசம்  3.5 சதவீத ஓட்டுகளையும் பெற்று உள்ளன.

மிசோரம்



மிசோரம் மாநிலத்தில்  மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 5 தொகுதிகளையும், பாரதீய ஜனதா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 8 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. காங்கிரஸ்  ஓட்டு விகிதம் கடந்த முறை பெற்ற 45 சதவீதத்தில் இருந்து 30.2 சதவீதமாக குறைந்து உள்ளது. பி.ஜே.பி ஓட்டு சதவீதம்   ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

Next Story