பெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதா?


பெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதா?
x
தினத்தந்தி 12 Dec 2018 7:41 AM GMT (Updated: 12 Dec 2018 7:41 AM GMT)

பெண்கள் ஒரு விடுதியில் சேரும்போது, அவ்விடுதி பாதுகாப்பானதா, முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, பெண் விடுதிக் காப்பாளர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்தபின்னரே சேர வேண்டும்.

சமீபத்தில், சென்னையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி காப்பகம் ஒன்றில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குளியலறை, உடை மாற்றும் அறை, தூங்கும் பகுதி என எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆண் உரிமையாளரால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பெண்களிடையேயும், குறிப்பாக பல்வேறு ஊர்களிலிருந்து வேலைக்காக பெண்களை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. ஒரு வீட்டில்தான் இவ்விடுதி நடத்தப்பட்டிருக்கிறது. கீழ்தளத்தில் வீடு, மேல் தளத்தில் காப்பகம் என இயங்கி வந்திருக்கிறது. பகலில் பெண்கள் வேலைக்குச் சென்றதும், அதே இடம் அலுவலகமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில்தான், கேமராக்கள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்படுவதும், அதில் உள்ள காட்சிகள் பார்க்கப்படுவதுமாய் இருந்திருக்கிறது. இதற்கு பயன்படுத்திய கேமரா, உளவுத்துறை உபயோகப்படுத்தும் வகையைச் சேர்ந்தது.

துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்யக் கூடியது. நாட்டைப் பாதுகாப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒரு கருவி, பெண்களின் வாழ்க்கையை சீரழிப்பதற்கு ஒரு காமுகனின் கையில் இருந்ததுதான் வேதனை. அதுவும் ஆன்- லைன் வர்த்தகத்தில் சுலபமாக வாங்கியிருக்கிறான். இந்த ஒரு சம்பவம்தான், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுபோல், வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்கு, எண்ணிலடங்கா பிரச்சினைகள், பாலியல் அத்துமீறல்கள் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், படிப்பு, பயிற்சி வகுப்புகள், வேலை போன்றவற்றுக்காக சென்னையை நோக்கி வருகிறார்கள். இப்படி பெற்றோர், உற்றார், உறவினர்களை விட்டு வரும் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது இம்மாதிரியான தங்கும் விடுதிகள்தான். ஆனால், தற்போது வேலியே பயிரை மேயும் நிலைமை ஆகிவிட்டது. வியாபாரநோக்கில் மூலைக்கு மூலை திடீர் விடுதிகள் தோன்றிவிடுகின்றன. அப்பகுதியின் செல்வாக்கு மிக்கவர்களால் தொடங்கப்படும் இவ்விடுதிகள் பல்வேறு குற்றச் செயல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது.

ஒரு விடுதி ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், தீயணைப்பு, காவல்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த் துறை ஆகியவற்றில் உரிமம் பெற்று, இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் . சரியான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் கட்டடம் இயங்க வேண்டும். பெண்கள் விடுதியில் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு பெண் விடுதி கண்காணிப்பாளர், ஒரு பாதுகாவலர் இருக்க வேண்டும். அங்கு தங்கியிருக்கும் பெண்கள் எங்கு வெளியே செல்கிறார்கள், திரும்பும் நேரம், அவர்களை விடுதிக்குள் சந்திக்கும் நபர்களின் விவரங்கள் போன்றவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். விடுதியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்களுடன் மட்டுமே அவர்களை அனுப்ப வேண்டும். ஆனால் இதுபோன்ற விதிமுறைகள் கொண்ட விடுதிகள் மிக மிகக் குறைவு.

ஆரம்பத்தில் சேரும்போது நல்ல தரமான சாப்பாடு, வாரம் ஒருமுறை அசைவம், அலுவலகத்திற்கும் உணவு கட்டித்தரப்படும் என பல வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், சில நாள்களிலேயே இவை அனைத்தும் பொய்யாகி விடுகின்றன. எதிர்த்து கேட்டால், வேறு விடுதி தேடும் நிலைமை வரும். ஏற்கெனவே தங்கியிருந்த விடுதியிலிருந்து தாங்கள் கட்டிய முன்பணத்தைக் கேட்டால் அதுவும் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவார்கள். இதற்கு தற்போது இருக்கும் விடுதியே பரவாயில்லை என்று பலர் சகித்துக் கொள்கிறார்கள். விடுதிக்குள்ளும் தங்கியிருப்பவர்களிடையே திருட்டு, மனக் கசப்பு, தவறான பழக்கவழக்கம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் உலா வரும். இவற்றையெல்லாம் வீட்டில் கூறினால், பெற்றோர் பயப்படுவர். பலவித கனவுகளுடன் வரும் தங்களை, திரும்ப வீட்டிற்கு வரச் சொல்லி விடுவர் என பெண்கள் மறைத்து விடுகின்றனர். இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டாலும், உச்சக்கட்டமாய், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்போது விழித்துக் கொள்வது அவசியம். எனவே, பெண்கள், பெற்றோர் என அனைவருக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. பெண்கள் ஒரு விடுதியில் சேரும்போது, அவ்விடுதி பாதுகாப்பானதா, முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, பெண் விடுதிக் காப்பாளர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்தபின்னரே சேர வேண்டும். விடுதியில் சேர்ந்தபின்னும், பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களின் மொபைல்களில் ஹிட்டன் கேமரா டிடெக்டர் ஆப் போன்ற செயலிகளை பொருத் திக் கொள்ளலாம். தற்கொலை போன்ற எந்தவொரு தவறான முடிவுக்கும் செல்லாமல், தங்கள் பிரச்சினைகளை பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ வெளிப்படையாக கூறவேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி செயல்படாத விடுதிகளைப் புறக்கணிக்கவேண்டும். அது பற்றிய தகவல்ளை, புகார்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

கலைச்செல்வி சரவணன், எழுத்தாளர்

Next Story