‘செல்பி’ என்ற சொல் வந்தது எப்படி?


‘செல்பி’ என்ற சொல் வந்தது எப்படி?
x
தினத்தந்தி 19 Dec 2018 6:05 AM GMT (Updated: 19 Dec 2018 6:05 AM GMT)

செல்போன்களில் தன்னைத்தானே ‘செல்பி’ படம் எடுத்துக் கொள்வது இப்போது சாதாரணமாகி விட்டது.

எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய கோடாக் பிரவுனி பெட்டிக் கேமரா அறிமுகமானபோது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. அக்காலக் கட்டத்தில் பெண்மணி ஒருவர் நிலைக்கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.

புகைப்பட வரலாற்றில், கண்ணாடி, கேமராவின் துணையுடன் ரஷியாவின் அண்டாசியா நிகோவ்லேவ்னா என்பவர் தன் 13-வது வயதில் புகைப்படம் எடுத்து, அதை ஒரு கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்த புகைப்படத்தை கண்ணாடியை பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்தபோது தன் கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். இது 1914-ல் நடந்தது.

‘பேஸ்புக் கலாசாரம்’ பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக ‘மைஸ்பேஸ்’ இணையதளத்தில் காணப்பட்டது. இது 2000 ஆண்டுகளின் கதை.

பின்னர் ‘பிளிக்கர்’ தளத்தில் புகைப் படப் பகிர்வில் செல்பி என்ற வார்த்தை இடம்பெற்றது. இளம் பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘பிளிக்கர்’ தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவ தொடங்கியது.

கொரியா மற்றும் ஜப்பானிய செல்போன்களை கொண்டும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலெடுக்கப்பட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இம்முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவ தொடங்கியது.

2012-ம் ஆண்டுக்குப் பின்னர் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது. 2013-ல் கரென் நியேபெர்க் விண்வெளியில் இருந்தபோது ‘செல்பி’ எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும்போது தலைமுடியை எப்படி சுத்தம் செய்துகொள்வது என்றுகூட அவர் அப்போது செய்து காட்டினார். அதே ஆண்டில் நடிகை ரிகன்னா தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த ‘செல்பி’ உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக கருதப்படுவதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் அறிய முடிந்தது.

பின்னர் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக ‘செல்பி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இச்சொல்லின் பயன்பாடு மிக மிக வியக்கத்தக்க வகையில் இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது, அமெரிக்க அதிபர் எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி ‘செல்பி’ என்ற சொல்லையும், அதன் பயன்பாட்டையும் பரப்பியது.

Next Story