கிறிஸ்துமஸ் கலை வண்ணம்


கிறிஸ்துமஸ் கலை வண்ணம்
x
தினத்தந்தி 24 Dec 2018 10:11 AM GMT (Updated: 24 Dec 2018 10:11 AM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கலை அம்சம் சேர்க்கும் அலங்கார வேலைப்பாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பவை, ‘கிறிஸ்துமஸ் குடில்கள்’. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் குடிலை வடிவமைப்பதில் மாறுபட்ட கலை ரசனை கொண்டவர் ஜான். 62 வயதாகும் இவருடைய கைவண்ணத்தில் கழிவுப்பொருட்கள்தான் குடிலை அழகுப்படுத்தும் கலைப்பொருட்களாக உருவாக்கம் பெறுகின்றன.

10 வருடங்களுக்கும் மேலாக வீணாகும் கழிவுப்பொருட்களில் குடில்களை வடிவமைத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசத்தையும், புதுமையையும் புகுத்தி கிறிஸ்துமஸ் குடிலுக்கு அழகுருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இவர் உருவாக்கி இருக்கும் ‘ஏசு குடிலும்’ கலை அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த குடில் இரண்டு தளங்களை கொண்டது. கீழ் தளத்தின் நுழைவு வாயிலை பழுப்பு நிறத்திலான கைவினை காகிதங்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அதன் உட்புறம் வைக்கோல் மற்றும் கோணிக் கூரைகளால் வேயப்பட்டுள்ளது. அதனுள் கிறிஸ்து பிறப்பை நினைவூட்டும் குழந்தை ஏசு உருவம் அழகுற அமைந்திருக்கிறது. ஒருபுறம் சூசை மறுபுறம் மரியாள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் ஆடு மேய்ப்பர், ஆடு, பசு, நட்சத்திரம் என தத்ரூப காட்சியமைப்புகளுடன் கலை நயம் காட்டியிருக்கிறார். கற்கள், குழாய்களின் துகள்கள், சோள சோகை, காய்ந்த மரக்கிளைகள், அதில் அமர்ந்திருக்கும் புறா என ஜானின் கைவண்ணம் காண்போரை கவர்கிறது. ஏசு பிரானின் அருகே களிமண் பானை, குடில் மீது மூங்கில் கூடை, தரைத்தளத்தில் கார்ட் போர்டு துண்டுகள், மரத்துகள்கள் என குடிலின் பின்னணி இயற்கையின் வாசத்தால் நிரம்பியிருக்கிறது.

இரண்டு காகிதங்களின் நடுவே பஞ்சு வைத்து இணைத்து அதில் நட்சத்திர உருவங்களை ஒட்டி இள நீல நிற வண்ணம் பூசி பின்னணியில் சீரியல் விளக்குகளை தொங்க விட்டிருக்கிறார். அது நீல வானம் போல் காட்சியளிக்கிறது. மேல் தளத்தின் இடது மாடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவும், வலது மாடத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பை அறிந்து அவருக்கு பரிசு பொருட்கள் கொண்டு வந்த மூன்று அரசர்களும் தோன்றுகிறார்கள். வெளிப்புற அமைப்பை தெர்மாகோல்களை கொண்டு அழகுப் படுத்தியிருக்கிறார். முகப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று உலோகத்தால் எழுதி வைத்திருக்கிறார். வெளிப்புற தரைத்தளத்தில் பஞ்சுகளை பரப்பி அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்திருக்கிறார். வெளிப்புற சுவர்களை தாங்கி நிற்கும் பச்சை, சிவப்பு நிறம் கொண்ட பதாகைகளில் கிறிஸ்துமஸ் வாசகங்களும், மகிழ்ச்சி, நன் நம்பிக்கை, அமைதி, அன்பு ஆகிய சொற்களும் இடம்பிடித்துள்ளன. ராந்தல் விளக்கும், நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் தேவதை உருவமும் பார்ப் பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த குடிலின் நீளம் 6 அடி. அகலமும் 6 அடி உள்ளது. 15 நாட்களில் இந்த குடிலை ஜான் உருவாக்கி இருக்கிறார்.

சென்னையை சேர்ந்தவரான ஜான் கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டுமின்றி பொங்கல், ஓணம் போன்ற பண்டிகைகளின்போதும் கலை அம்சங்களை கொண்ட படைப்புகளை காட்சிப்படுத்தி வருகிறார்.

Next Story