சிறப்புக் கட்டுரைகள்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர் + "||" + Dream heroine

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்
பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள். இதற்கிடையே தாயாரின் எதிர்ப்பை மீறி சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் அபிநயா ஈடுபடுகிறாள்.
முன்கதைச் சுருக்கம்:

பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள். இதற்கிடையே தாயாரின் எதிர்ப்பை மீறி சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் அபிநயா ஈடுபடுகிறாள். இந்த விஷயம் அவளுடைய தாயாருக்கு தெரியவர, தான் காதலிக்கும் விக்டர் மூலம் படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடப்போவதை அபிநயா ஒப்புக்கொள்கிறாள். இதற்கிடையே விக்டரிடம்தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறாள். விக்டரை சந்திக்கும் அவனுடைய மாமனாரோ விவாகரத்து முடிவை கைவிட்டு தன் மகளுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்துகிறார்.

இதனால் விரக்தியடையும் விக்டர், அபிநயாவின் கருவை கலைக்க முயற்சிக்கிறான். அபிநயாவோ தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி படம் தயாரிப்பதற்கு பத்து கோடி முதலீடு செய்வதற்கு அவனை சம்மதிக்க வைக்கிறாள். அதுபற்றி தன்னுடைய தாயாரிடம் கூறி ஆனந்தப்படுகிறாள். விக்டரை பயமுறுத்தும் நோக்கில் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்துகிறாள்.

இதற்கிடையே சினிமா நிருபர் ராஜராஜனை சந்திக்கும் இனியவன் அவரிடம், அபிநயாவும், விக்டரும் ரகசியமாக பழகிக்கொண்டிருப்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வர உதவுமாறு வேண்டுகிறான். இதையடுத்து அபிநயாவை ராஜராஜன் சந்திக்கிறார். அப்போது அவளுக்கு தெரியாமல் அவளும், காதலன் விக்டரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரகசியமாக தன் செல்போனில் படமெடுத்துவிடுகிறார்.

நிருபர் ராஜராஜன் எதிர்பார்த்தபடியே அபிநயாவும் அவளின் காதலன் விக்டரும் நெருக்கமாக அணைத்தபடி, முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்கள் அபிநயாவின் செல் போனில் இருந்தன.

அந்தப் புகைப்படங்களை ரகசியமாக தனது செல்போனில் சத்தம் வராமல் படமெடுத்துக்கொண்டார் ராஜராஜன்.

அபிநயா அவருக்கு முதுகு காட்டி நின்றபடி பேசிக்கொண்டிருக்க..போனை எடுத்த இடத்தில் ஓசை வராமல் வைத்துவிட்டார்.

அவள் சன்னக் குரலில் பேசினாலும் அமைதியான சூழ்நிலையில் துல்லியமாக அவரால் கேட்க முடிந்தது. அவள் என்ன பேசுகிறாள் என்று கூர்ந்து கவனித்தார். எதிர் முனை உரையாடல் கேட்கவில்லை என்றாலும் இவள் பேசுவது புரிந்தது.

‘‘விக்டர்..என் அக்கவுண்ட்டுக்கு பணம் எப்போ மாத்தப் போறீங்க?’’ என்றாள் அபிநயா.

‘‘அதுல ஒரு பிரச்சினை இருக்கு அபி. அக்கவுண்ட்ல பணம் இல்ல. கேஷாதான் ஏற்பாடு செய்ய முடியும்’’ என்றான் விக்டர்.

‘‘அப்படியா?’’

‘‘ஏன்.. கேஷா குடுக்கக் கூடாதா?’’

‘‘இப்பல்லாம் சினிமால கூடுமானவரைக்கும் கேஷ் டிரான்சாக்‌ஷன் வெச்சிக்கிறதில்லையே’’

‘‘எனக்கு கேஷாத்தான் குடுக்க முடியும் அபி’’

‘‘கேஷாதான் வாய்ப்பிருக்கா? சரி. பரவால்ல. நீங்க கேஷாவே குடுங்க. அதை எப்படி கணக்குக்குக் கொண்டு வரலாம்னு என் ஆடிட்டர் பார்த்துப்பார்.’’

‘‘ஓ.கே’’

‘‘எப்போ அனுப்புறீங்க?’’

‘‘நாளைக்கு உனக்கு எங்க ஷூட்டிங்?’’

‘‘நாளைக்கா? நாளைக்கு பின்னி மில்லுல ஒரு செட் போட்ருக்காங்க. அங்கதான் இருப்பேன். நைன் டு பைவ்’’

‘‘அப்போ நாளைக்கு கேஷ் உங்கிட்ட கொண்டாந்து ஒப்படைப்பாங்க. எப்போ அனுப்பிச்சா உனக்கு சவுகரியம்?’’

‘‘லன்ச் பிரேக் டைம்ல அனுப்புறீங்களா? ஒன் டு ட்டூ’’

‘‘சரி’’

‘‘டென்தானே அனுப்புறீங்க?’’

‘‘டென்தானே கேட்டே? அனுப்பறேன்’’

‘‘ஹேப்பி விக்டர். ஐ லவ் யூப்பா’’

‘‘மீ ட்டூ டியர்’’

அபிநயா போனை வைத்துவிட்டுத் திரும்பி அவரை நோக்கி வரும்போது ராஜராஜன் மிக ஈடுபாட்டுடன் ஒரு சினிமா பத்திரிகையைப் படித்துக் கொண்டிருப்பதுபோல பாவனை செய்தார்.

‘‘சாரி சார். காக்க வெச்சிட்டேன்’’ என்று எதிரில் அமர்ந்தாள், ‘‘காபி குடுத்தாங்களா?’’

‘‘ஆச்சும்மா. கேள்விகள் கேக்கட்டுமா? நீ சொந்தப் படம் எடுக்கப் போறதாப் பேச்சு அடிபடுதே.. உண்மைதானா?’’

‘‘ஆமாம் சார். உண்மைதான்.’’

‘‘யார் ஹீரோ?’’

‘‘நான்தான் ஹீரோ’’ என்று சிரித்தவள், ‘‘நான் எடுக்கப் போறது கதாநாயகியை மய்யமா வெச்சிருக்கற சப்ஜெக்ட் சார்.’’

‘‘ஓ. சூப்பர். டைரக்‌ஷன் யாரு?’’

‘‘நானே பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்’’

‘‘வாவ். இன்னிக்கு இதுதான் அசத்தல் நியூஸ்! நடிகை அபிநயா இயக்குனராகிறார்! பெருசா கவர் பண்ணிடறேன்’’

‘‘செய்ங்க சார். ஒண்ணு தெரியுமா? இந்த நியூசை முதல்ல உங்ககிட்டதான் சொல்றேன். நீங்க ராசியான ஆளு சார். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்’’ என்று அவள் சட்டென்று குனிந்து அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

‘‘உன்னைக் குழந்தை நட்சத்திரத்திலேருந்து பார்த்துட்டிருக்கறவன்ம்மா நான். ஓகோன்னு வருவே..அப்போ நான் புறப்படறேன்’’என்று எழுந்து கொண்டார் ராஜராஜன்.

***

பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் வேலையில் மும்முரமாகஇருந்தான் இனியவன்.

திரையில் அவன் பேசிய ஒரு காட்சியின் வசனம் மழுப்பப்பட்டு வெறும் உதட்டசைவுகளாகப் போடப்பட..

அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்ட பிறகு கண்ணாடித் திரைக்கு அந்தப் பக்கம் இருந்த ஒலிப்பதிவாளருக்கு தான் தயார்என்று சைகை காட்டினான்.

அவர் மைக்கில் ‘‘டேக்’’ என்று அறிவித்துவிட்டு ரெக்கார்ட் பட்டனை அழுத்தியதும், உதட்டசைவுக்குத் தக்கபடி தன் வசனத்தைப் பேசினான்.

ஒரே டேக்கில் ஓ.கே ஆனது.

இப்போது கண்ணாடி ஜன்னலுக்கு வெளியில் ராஜராஜன் வந்துநாற்காலியில் அமர்வதைக் கவனித்து ஐந்து நிமிடங்களில் தான் அவரைச் சந்திப்பதாக சைகை காட்டினான்.

அந்தக் காட்சிக்குக் குரல் கொடுத்து முடித்துவிட்டு ஒலிப்பதி வாளரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த இனியவனைப் பார்த்ததும் ராஜராஜன் அவசரமாக எழுந்துகொண்டார்.

அவர் தோளில் கை போட்டு அருகில் வேப்ப மரத்தடிக்கு நகர்த்திச் சென்று,‘‘எதாச்சும் நியூஸ் இருக்கா சார்?’’ என்றான்.

‘‘நீ உற்சாகத்துல துள்ளிக் குதிக்கப் போறே!’’

‘‘இங்க வேணாம்’’ என்று அவரைத் தன் காருக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் பின் இருக்கைகளில் அமர்ந்ததும்,‘‘இப்ப சொல்லுங்க’’ என்றான்.

‘‘அபிநயா சொந்தப் படம் எடுக்கப் போறா.’’

‘‘இது பழைய நியூஸ்தானே சார்?’’

‘‘அதுக்கு பணம் அவளோட காதலன் விக்டர்தான் குடுக்கப் போறான். இது புது நியூஸ் இல்லையா?’’

‘‘கண்டிப்பா சார்’’

‘‘அதுவும் எப்படி? ரொக்கமா தரப் போறான்’’

‘‘அவன் எப்படிக் குடுத்தா நமக்கென்ன சார்?’’

‘‘அந்த ரொக்கம் எவ்வளவு தெரியுமா? பத்து கோடி! அதுவும் நாளைக்கு தன் ஆள் மூலமா கொடுத்தனுப்பப் போறான்’’

‘‘எங்கே அனுப்பப் போறான்னு தெரியுமா?’’

‘‘அதுவும் தெரியுமே. பின்னி மில்லுல படப்பிடிப்புல இருக்கறஅபிநயாவுக்குக்கு மத்தியானம் உணவு இடைவேளை நேரத்துல பணம் வருது’’

அவரை அப்படியே கட்டிப் பிடித்த இனியவன்,‘‘எப்படி சார்? இவ்ளோ மேட்டர்ஸ்!’’

‘‘எங்கிட்ட ஒரு வேலை குடுத்தா கச்சிதமா செஞ்சிடுவேன் தம்பி’’ என்று சிரித்தார் ராஜராஜன்.

அந்த சிரிப்புக்கான பொருளை உணர்ந்தவனாய் இனியவன் தன் மணிபர்சி லிருந்து சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவர் சட்டைப் பையில் செருகினான்.

‘‘இதைவிட மதிப்பான ஒரு சமாச்சாரமும் இருக்கே. அதுக்கு இன்னும் அதிகமா கிடைக்குமா?’’

‘‘என்ன சார் அது?’’

‘‘அவளும், விக்டரும் அந்தரங்கமா இருக்கற சில போட்டோசும் கொண்டு வந்திருக்கேன்’’

‘‘நிஜமாவா? விளையாடாதீங்க.. அதெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கும்?’’

‘‘புகை நுழைய முடியாத இடத்துல கூட ஒரு நிருபர் நுழைஞ்சிடுவான் தம்பி. அபிநயா வீட்ல அவளைப் பேட்டி எடுக்கப் போற மாதிரி போனேன். ஜிம்முல அவ பாட்டுக்கு போன்ல பேசிக்கிட்டே இருந்தா. இன்னொரு போன் அனாதையா கிடந்துச்சி.எடுத்து நோண்டிப் பார்த்தேன். பொக்கிஷம் மாதிரி இதெல்லாம் கிடைச்சது. பாரேன்’’ என்று தன் போனில் அந்தப் புகைப்படங் களைக் காட்டினார்.

‘‘சூப்பர் சார். இதையெல்லாம் அப்படியே எனக்கு அனுப்பிடுங்க சார்.’’

‘‘இப்பவே அனுப்பறேன்’’ அதற்கான உத்தரவுகளைக் கொடுத்து படங்களை அவன் போனுக்கு புளூடூத் வழியாக அனுப்பி வைத்தார் ராஜராஜன்.

‘‘ஆமாம்.. இதெல்லாம் வெச்சிக்கிட்டு நீ என்னப்பா செய்யப் போறே?’’

‘‘அது நான் பார்த்துக்கறேன் சார்.’’

மேலும் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவர் சட்டைப் பைக்குள் வைத்தான் இனியவன்.

‘‘எனக்கு எந்தப் பிரச்சினையும் வராதே..’’ என்றார் அவர்.

‘‘கவலையேப் படாதீங்க. எங்கயும் உங்க பேர் வராது’’

‘‘இன்னும் ஏதாச்சும் நான் செய்யணுமா?’’

‘‘இப்போதைக்குப் போதும் சார். இதுவே அதிகம்.’’

இருவரும் காரை விட்டிறங்கினார்கள்.

ராஜராஜன் வணக்கம் வைத்துவிட்டு விலகிச் சென்றதும், இனியவன் மெதுவாக அங்குமிங்கும் மரத்தடியில் நடந்தபடி மனதிற்குள் ஒரு திட்டத்தை வடிவமைக்கத் தொடங்கினான்.

-தொடரும்