சிறப்புக் கட்டுரைகள்

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு...! + "||" + The amazing man GD Naidu

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு...!

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு...!
ஜி.டி. நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். கோயம்புத்தூரில் உள்ள கலங்கல் என்னுமிடத்தில் 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பிறந்தார்.
இளம் வயதில் படிப்பில் அதிக விருப்பமில்லாதவராக இருந்தார். ஆயினும் தனக்குத்தானே ஆசிரியராக இருந்து, தான் விரும்பிய புத்தகங்களை எல்லாம் வாங்கி படித்து தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

மும்பையிலும் தன்னுடைய பருத்தி தொழிலை விரிவுபடுத்தினார், ஆனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வெள்ளைகாரரான ஸ்டேன்ஸ் துரை என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தார். ஒரு பேருந்தை கடனாக கொடுத்த ஸ்டேன்ஸ் துரை தவணை முறையில் கடனை அடைத்தால் போதும் என்றார். உற்சாகமான நாயுடு முதலாளியாக மட்டுமல்லாமல் தொழிலாளியாகவும் இருந்து பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு பேருந்தை இயக்கினார்.

கூடிய விரைவிலேயே யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதோடு, தான் மட்டுமே முதலாளியாக இருக்க விரும்பாமல் இன்னும் சிலரையும் அதில் இணைத்துக் கொண்டார். முதல் முறையாக பேருந்து வரும் நேரத்தையும், புறப்படும் நேரத்தையும் காட்டும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். அந்த காலத்திலேயே பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார். அப்போதெல்லாம் என்ஜின் சூடாகாமல் இருக்க அடிக்கடி ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றவேண்டும், மோட்டார் ரேடியேட்டருக்கு இணையாக ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அந்த பிரச்சினையையும் சரி செய்தார்.

புகைப்படத்துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. இவர் கண்டுபிடித்த பிளேடை தானே தயாரித்துக்கொள்ள விரும்பிய ஒரு அமெரிக்க நிறுவனம் அதன் காப்புரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விலை பேசியது. தன்னுடைய கண்டுபிடிப்புகள் தாய் நாட்டிற்கே பயன்படவேண்டும் என்று எண்ணியவர், தமிழ் நாட்டிலேயே அதை தயாரிக்க முடிவெடுத்து நார்வே நாட்டிலிருந்து அதன் மூலப்பொருளை இறக்குமதி செய்ய விரும்பினார். அந்த முயற்சிகள் கை கூடாமல் போகவே காப்புரிமையும் கை நழுவிப்போனது. இவருக்கு ஆறுதலாக ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான சவரக்கத்திக்கு முதல் பரிசும், பிளேடுக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார் நாயுடு. என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் தேசத்திற்குதான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். விதை இல்லா நார்த்தங்காய், ஆரஞ்சு இவருடைய கண்டுபிடிப்பு. சோள செடிக்கு ஊசிமூலம் மருந்து செலுத்தி குறுகிய காலத்திலேயே 26 கிளைகளுடன் பதினெட்டரை அடி உயரத்திற்கு வளரச்செய்தார். சாதாரண சோள செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் இவருடைய அதிசயசெடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன. அதன்பிறகும் பருத்திசெடி, துவரை செடி என அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. ஜெர்மானியர்கள் அவருடைய அதிசய பருத்தி செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று பெயரிட்டு கவுரவித்தனர். தன்னுடைய சுய முயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை கோவையில் அமைந்ததற்கான பெருமை நாயுடுவையே சாரும். நாயுடுவின் திறமைகளுக்கு அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருந்தால் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர், உலகம் முழுவதும் எடிசனுக்கு நிகராக போற்றப்பட்டிருப்பார். ஆயினும் இவருடைய வாழ்க்கை இப்போதும் இந்திய இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கிறது என்பதே உண்மை. ஜி.டி.நாயுடு 1974-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி காலமானார்.

கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் அருங்காட்சியகம் இவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது. இன்று (ஜனவரி 4-ந்தேதி) ஜி.டி.நாயுடு நினைவு தினம்.

-வித்யா வெற்றிச்செல்வன்