சிறப்புக் கட்டுரைகள்

ஒரு காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் + "||" + A thousand bananas per a coin

ஒரு காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள்

ஒரு காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள்
இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்தில் கி.பி. 874–ம் ஆண்டு தமிழகத்தில் குறிப்பாக பாண்டிய நாட்டில் ஒரு காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் விற்கப்பட்டுள்ளது.
இம்மன்னனுடைய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு பல பொருளியல் செய்திகளையும் தருகிறது. பண்டமாற்று முறை பற்றிய செய்திகள் தெளவாக உள்ளன. என்னென்ன பொருட்களைக் கொடுத்து என்னென்ன பொருட்களைப் பெறலாம் என்பது கூறப்பட்டுள்ளது. பண்டமாற்று முறை இருந்தாலும் காசுகளும் வழக்கில் இருந்தன. அக்காலத்தில் இருந்த விலைவாசியைத் தெளவாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஒரு காசுக்கு ஆயிரம் வாழைப்பழங்கள் விற்கப்பட்டன. ஒரு காசுக்கு 10 கலம் நெல் கிடைத்தது. ஒரு காசுக்கு 10 ஆயிரம் பாக்கு, ஒரு காசுக்கு 20 துலாம் காய்கறிகள், ஒரு காசுக்கு 60 நாழி காயம், ஒரு காசுக்கு 7 துலாம் 65 பலம் சர்க்கரை, ஒரு காசுக்கு 1,200 பற்று வெற்றிலை, ஒரு காசுக்கு 150 நாழி பூக்கள், ஒரு காசுக்கு 15 கழஞ்சு கற்பூரம் பெறலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் இருப்பது போன்ற வைப்புநிதி முறையும் கல்வெட்டில் கூறப்படுகிறது. வரகுணபாண்டியனின் அதிகாரிகளான இருப்பைக்குடி கிழவன், சாத்தப்பெருமாள், அளந்தூர் நாட்டுக்கோன் ஆகியோர் 1,400 பொற்காசுகளை பல ஊர்ச்சபையாரிடம் வைப்பு நிதியாகக் கொடுத்தனர். வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியில் கோவில் பூஜைக்கு உரிய பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காசுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு கலம் நெல் வட்டியாகக் கிடைத்தது என்ற செய்தி கூறப்படுகிறது.

“நிறைகுறையாப் பழங்காசு” என்று காசு குறிப்பிடப்படுவதால் ஒவ்வொரு காசும் குறிப்பிட்ட எடையளவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. பழங்காசுகள் என்று குறிப்பிடப்படுவதால் புதிய காசுகளும் வழக்கில் இருந்திருக்கலாம். வைப்புநிதி வழங்கப்பட்ட ஊர்ச்சபைகள் எந்தெந்த நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவை என்பதும் தெரியவருகிறது.

 இரண்டாம் வரகுணன் கல்வெட்டு தவிர வேறு சில கல்வெட்டுகளும் கோவிலில் உள்ளன. இவையும் பல்வேறு தாளங்களைக் குறிப்பிடுகின்றன.

“திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம்’’ என்று இக்கல்வெட்டுகள் திருச்செந்தூரைக் குறிப்பிடுகின்றன.

பேராசிரியர்.அ.பாஸ்கரபால்பாண்டியன்