டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து விலகிய முதலீடு ரூ.1.37 லட்சம் கோடி


டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து விலகிய முதலீடு ரூ.1.37 லட்சம் கோடி
x
தினத்தந்தி 10 Jan 2019 11:11 AM GMT (Updated: 10 Jan 2019 11:11 AM GMT)

டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.1.37 லட்சம் கோடி முதலீடு விலகி இருக்கிறது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

டிசம்பர் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.23.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2017 டிசம்பர் இறுதியில் அது ரூ.22.37 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, சென்ற ஆண்டில் மட்டும் இத்துறையின் சொத்து மதிப்பு ரூ.1.24 லட்சம் கோடி அதிகரித்து இருக்கிறது.

பரஸ்பர நிதி துறையின் பெரும்பாலான திட்டங்கள் அதிக முதலீட்டை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக அண்மைக் காலத்தில் பங்குசார்ந்த திட்டங்கள் மற்றும் சீரான முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இத்துறையில் இருந்து நிகர அடிப்படையில் ரூ.1.37 லட்சம் கோடி வெளியேறி உள்ளது. முந்தைய மாதத்தில் ரூ.1.24 லட்சம் கோடி ஈர்க்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.2.30 லட்சம் கோடி வெளியேறி இருந்தது.

டிசம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் நிதிச்சந்தை திட்டங்களில் இருந்து அதிகபட்சமாக ரூ.1.49 லட்சம் கோடி வெளியேறி உள்ளது. அதே சமயம் பங்குசார்ந்த திட்டங்களில், ரூ.5,765 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. எனினும் நவம்பர் மாதத்தில் இத்திட்டங்கள் ரூ.7,579 கோடியை ஈர்த்து இருந்தன.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story