சிறப்புக் கட்டுரைகள்

விளையாட்டு உலகம் : ஆக்கியின் மந்திரவாதி தயான்சந்த் + "||" + Game World: Hockey's Wizard DhyanChand

விளையாட்டு உலகம் : ஆக்கியின் மந்திரவாதி தயான்சந்த்

விளையாட்டு உலகம் : ஆக்கியின் மந்திரவாதி தயான்சந்த்
தேசிய விளையாட்டு தினமாக பின்பற்றப்படும் ஆகஸ்ட்-29-ந் தேதி, ஆக்கியின் முன்னோடி வீரரான தயான்சந்தின் பிறந்த நாளாகும்.
அவரது விளையாட்டுத் திறமையை கவுரவிக்கும் விதமாகவும், தேசிய ஆக்கி அணி ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை கைப்பற்ற காரணமாக இருந்த அவரை சிறப்பிக்கும் வகையிலும், அவரது பிறந்த நாள், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது விளையாட்டு வீரர்களை சிறப்பிக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, அர்ஜூனா விருதுகள் ஜனாதிபதியால் அறிவிக்கப்படுகிறது. சிறப்பான தொடர் சாதனைகள் செய்பவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக ‘தயான்சந்த் விருது’ மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

தயான்சந்த், தனது ஆக்கி சாதனைகளுக்காக 1956-ல் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1936-ல், ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8-1 என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூட அவர் காரணமாக இருந்தார். அந்த போட்டியில் தயான்சந்த் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறமை எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அவரது விளையாட்டை ரசித்த ஜெர்மன் அதிபர் ஹிட்லர், தயான்சந்திற்கு ஜெர்மன் குடியுரிமை வழங்குவதாகவும் ராணுவத்திலும் அதிகாரி பதவியை வழங்குவதாகவும் அறிவித்தார். தயான்சந்த், இந்திய ராணுவ வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளிலும், பல்வேறு ஆட்டங்களிலும் தயான்சந்தின் முத்திரை பதித்த விளையாட்டுத் திறமைகள் வெளிப்பட்டன. பந்தை எதிரணி வீரரிடம் இருந்து தட்டிப்பறிப்பதிலும், பந்தை தன்வசம் வைத்து கடத்திச் செல்வதிலும் அனைவரையும் வியக்க வைத்தார். ஒருவேளை அவர் தனது ஆக்கி மட்டையில் காந்தம் வைத்து பந்தை கவர்ந்துவிடுகிறாரோ என்று அனைவரும் வியந்தனர்.

விளையாட்டு நடத்திய அமைப்பினருக்கும்கூட அந்த சந்தேகம் வந்தது. ஒருமுறை ஹாலந்தில் விளையாடியபோது, விளையாட்டு அமைப்பு அதிகாரிகள், தயான்சந்தின் ஆக்கி மட்டையை உடைத்துப் பார்த்து அதில் காந்தம் ஏதும் இருக்கிறதா? என்று பரிசோதித்த வினோத நிகழ்வும் அரங்கேறியது. ஜப்பான் நாடு, அவரது திறமையை வியந்ததுடன், “அவர் தனது ஆக்கி மட்டையில் சிறப்பு பசையை தடவியிருப்பதாகவும்” கருத்துக்கூறியது. ஹிட்லர் அவரது ஆக்கி மட்டையை அதிக விலைக்கு வாங்கவும் ஆசை தெரிவித்தார். அவரது ஆக்கி மட்டையையும், அவரது ஆட்டத்திறனையும் ஆராய்ச்சி செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

இத்தகைய ஆச்சரியமான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ஒருமுறை தயான்சந்த் செயல்பட்டார். கண்காட்சிப் போட்டியாக நடந்த ஒரு ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணி பல கோல்களை அடித்திருந்தது. அதில் அதிகமானவை தயான்சந்த் அடித்தவைதான். இடைவேளையின்போது, தனது ஆக்கி மட்டையில் பசையோ, காந்தமோ இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தான் ஒரு நடக்க உதவும் குச்சியை (வாக்கிங் ஸ்டிக்) கொண்டு மீதி ஆட்டத்தை ஆடுவதாக அறிவித்தார். அப்போதும் அவர் கோல் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அந்த அளவுக்கு, தன் விளையாட்டுக் காலம் முழுவதிலும், முன்னோடி வீரராக விளங்கி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

“தயான்சந்த் 6-ம் வகுப்புவரையே படித்திருக்கிறார். ஆனால் திறமையான, புத்திக்கூர்மை மிக்க விளையாட்டுவீரர். தனது அணி வீரர்களும் எதிரணி வீரர்களும் களத்தில் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கணித்து பந்தை கடத்தி வியக்க வைக்கும் அபூர்வ திறமையை பெற்றிருந்ததே அவரது வெற்றிக்கு காரணம்” என்று அவருடன் விளையாடிய சக இந்திய வீரர் கேசவ் தத் கூறி இருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் “அதே நேரத்தில் தயான்சந்த், தலைக்கனமோ, சுயநலமோ அற்றவர். மற்றவர்களின் திறமையையும் மதித்தவர். சகவீரர்கள் கோல் போடும் வாய்ப்பை பலமுறை உருவாக்கிக் கொடுத்தவர். தான் கோல் அடிக்கும் வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்து மற்றவர் ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்குவார்” என்று புகழ்ந்திருக்கிறார்.

1947-ல், பெர்லின் விளையாட்டுப் போட்டிக்குப் பின்பு, ஓய்வு பெற தயான்சந்த் முடிவு செய்திருந்தார். அப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய அணியை காட்சிப் போட்டியில் பங்கெடுக்கக் கோரி அழைப்பு வந்திருந்தது. அங்கு சென்று 21 போட்டிகளில் விளையாடிய தயான்சந்த் 61 கோல்கள் அடித்து, கிழக்கு ஆப்பிரிக்கர்களையும், உலக ஆக்கி ரசிகர்களையும் தனது ஆட்டத்தால் மயக்கினார். அப்போது அவருக்கு வயது 42 என்பது குறிப்பிடத்தக்கது.

தயான்சந்திற்கு 7 மகன்களும், 4 மகள்களும் பிறந்தனர். அவரது மகன்களில் ஒருவரான அசோக்குமார், இந்திய ஆக்கி அணியில் விளையாடினார். 1975-ல் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஆனாலும் தயான்சந்த் தனது குழந்தைகள் ஆக்கி விளையாட வேண்டும் என்று விரும்பியதில்லை. அதற்கு நிதிச் சிக்கலும் ஒரு காரணமாக இருந்தது. 1960-களில் தயான்சந்த் ஓய்வூதியமாக ரூ.400 பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தயான்சந்திற்கு ஒரு மோட்டார் பைக் வாங்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்தது. இறுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். ஆனால் அது மற்றொருவர் பயன்படுத்திய இரண்டாம் தர பைக்தான். அதை அவர் ஓட்டி மகிழ்ந்ததைவிட பல நேரங்களில் தள்ளிக் கொண்டு வந்ததாக” அவரது மகன் அசோக்குமார் கூறியிருக்கிறார்.

1972-ல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடத்தப்பட்ட ஆக்கிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்திய அரசாங்கம் அவரது பயணத்திற்கு செலவு செய்ய அனுமதியளிக்காததால் அங்கு அவரால் செல்ல முடியவில்லை. இதேபோல அகமதாபாத் நகரில் நடத்தப்பட்ட ஒரு போட்டியை நேரில் கண்டுகளிக்கவும் அவர் ஆசைப்பட்டார். அந்த ஆசையும் நிறைவேறவில்லை. “இதுபோன்ற தருணங்கள், ஒரு நிஜமான விளையாட்டு ஜாம்பவானை இந்தியா அடையாளம் கண்டுகொள்ளவில்லை” என்று விமர்சிக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் 1979-ல் டிசம்பர் 3-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் ஆக்கி விளையாடி வளர்ந்த ஜான்சி ஆக்கி மைதானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.