தங்கம் விலை உயர்வு ஏன்?


தங்கம் விலை உயர்வு ஏன்?
x
தினத்தந்தி 12 Jan 2019 3:00 AM GMT (Updated: 11 Jan 2019 4:02 PM GMT)

தங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை அன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்தது. ஜனவரி மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.432 உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி விலையுடன் ஒப்பிட்டால் பவுனுக்கு ரூ.1,400 அதிகமாகும். தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,150 ஆக உள்ளது. ஏன் இந்த திடீர் விலை உயர்வு? தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்குமா? அல்லது இறங்குமா? என்பது தான் இன்று அனைவர் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி.

கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தால், ஜனவரி 2014-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,450 ஆக இருந்தது. 2016 ஜூலை மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,900-ஐ தொட்டு பின் ஆறுமாத காலத்தில் மீண்டும் 2,450-க்கு அருகில் வந்தது.

அந்த விலையில் இருந்து நடுவில் அவ்வப்போது இறங்கினாலும், மீண்டும் மீண்டும் உயர்ந்து இப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.3,150 ஆக உள்ளது. வேறு எந்தப் பொருளின் விலை மாற்றங்களை சரியாக கணிக்கக் கூடியவர்களாலேயே கூட தங்கத்தின் விலைப்போக்கை கணிக்க இயலவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு காரணம், தங்கம் வெறும் நகைக்காக பயன்படும் ஒரு உலோகம் மட்டுமில்லை, அது பல்வேறு தரப்பினரால் பல்வேறு காரணங்களுக்காக வாங்கப்படுகிறது, விற்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களும் அவர்கள் தேவைகளுக்காக தங்க நகைகள் வாங்குகிறார்கள். குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் வர்த்தகர்கள் லாப நோக்கில் தங்கத்தை வாங்கி விற்று லாபம் பார்க்கிறார்கள். சில உற்பத்தியாளர்கள் மொபைல் போன்கள் உள்பட சில பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் எந்திரங்களில் பயன்படுத்த தங்கம் வாங்குகிறார்கள். முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி இருப்பில் வைத்தால் விலை ஏறும் என்று கருதி பெரும் அளவுகளில் தங்கம் வாங்குகிறார்கள். இதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் அவர்களது ரிசர்வ் வங்கிகள் மூலம் பெரும் அளவுகளில் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.

காரணம், பல்வேறு நாடுகளும் உடனடியாக செல்லுபடியாகும் பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி சேமித்து வைத்து கொள்ளும் பணம் சர்வதேச செலவாணியாக இருக்க வேண்டும். செய்யும் ஏற்றுமதிகள் போக கூடுதலாக செய்துகொள்ளும் இறக்குமதிகளுக்கு, ‘பாரின் எக்ஸ்சேஞ் ரிசர்வ்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த சேமிப்பில் இருந்துதான் எடுத்துக்கொடுக்க வேண்டும். அதை அமெரிக்க டாலர்களாக வைத்துக்கொள்ளலாம். தவிர, தங்கமாவும் வைத்துக்கொள்ளலாம் என்பதால் பல்வேறு அரசாங்கங்களும் தங்கம் வாங்கிச் சேர்க்கிறார்கள் .

‘வெர்ல்ட் கோல்ட் கவுன்சில்’ தகவல்படி, 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே, 480 டன் தங்கத்தை பல்வேறு அரசாங்கங்களின் ரிசர்வ் வங்கிகள் வாங்கியிருக்கின்றன. நம் தேசத்தின் ரிசர்வ் வங்கி 40 டன் தங்கத்தை வாங்கி, அதன் மொத்த இருப்பை 592 டன்னாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திய விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம். ஆக, தங்கத்தை வாங்காத நாடுகள் இல்லை. விரும்பாத மக்கள் இல்லை. உலகத்தின் முக்கிய வர்த்தக பொருட்களில் ஒன்றான பளபளக்கும் இந்த மஞ்சள் உலோகம், பன்னூறு ஆண்டுகளாக உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பின், நம் நாட்டில் தங்கம் உற்பத்தி என்பது மருந்துக்கும் இல்லை.

அதன் காரணமாக, விற்கும் சிலரால் மறு சுழற்சிக்கு வரும் தங்கம் தவிர மற்றபடி மீத தேவை மொத்ததிற்கும் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிதான் செய்யவேண்டும். ஆண்டு ஒன்றுக்கு இந்தியா சுமார் 700 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது. இதில் ஒரு பகுதி நகை களாக மதிப்புக் கூட்டப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்குப் ஏற்றுமதி செய்யப்பட்டாலும். இந்தியா செய்வது இறக்குமதிதான்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக, இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு கூடினால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரிக்கும்.

டிசம்பர் 2018-ல் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடைந்து ரூ.70-க்கும் கீழ் வந்தது. அதனால் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இப்போது ஜனவரி மாதம் சில நாட்களாக டாலர் மதிப்பு அதிகரித்து ரூபாய் மதிப்பு குறைந்திருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் சிறு உயர்வு வந்திருக்கிறது.

சர்வதேச சந்தைகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தியாவால் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரமுடியாது. சர்வதேச, வர்த்தக செய்திகளே தாக்கம் கொடுக்கின்றன.

அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய் போன்றவையும் உலக சந்தைகளில் பெரும் அளவில் வர்த்தகம் செய்யப்படுபவை. அவற்றுக்கும் தங்கத்துக்கும் உறவு உண்டு.

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை குறையும். அது குறைந்தால் தங்கம் விலை கூடும். அதே போன்ற உறவுதான் கச்சா எண்ணெயுடனும். சமீபத்தில் தங்கம் விலை உயர கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியும் ஒரு காரணம்.

மேலும் உலக அளவில் முக்கிய நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை குறைகிற போதும், போர் மூளும் அபாயங்கள் தெரிகிறபோதும் தங்கம் விலை உயரும். ஏன் என்றால், தங்கத்தின் மதிப்பு அவற்றால் எல்லாம் போய்விடாது என்ற அடிப்படையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கி குவிப்பார்கள்.

டிரம்ப் அதிபர் ஆனபின், அமெரிக்கா உலகநாடுகளுடன் அது செய்யும் வர்த்தகத்தில் பல கெடுபிடிகள் செய்தது. முக்கியமாக சீனாவுடன். அதன் காரணமாக உலக வர்த்தகத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவியது. சமீபத்தில் அமெரிக்க சீனாவுடனான அதன் நிலைப்பாட்டில் தளர்வு செய்திருப்பதால், உலக வர்த்தகத்தில் ஸ்திரத்தன்மை திரும்புகிறதென்று சில முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்

மேலும், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறையவிருக்கிறது என்ற கணிப்பையும் சமீபத்தில் வெளிவந்த ‘பே ரோல் டேட்டா’ எனப்படும் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் தவறு என்று சுட்டுகிறது.

சீனாவின் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக குறைந்துவிட்டது என்பதால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைகிறது.

கடந்த மாதம் நடந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பெடரல் ரிசர்வ் அப்படி ஒருமுடிவுக்கு வந்தால் அந்நாட்டில் வட்டி விகிதத்தை அதிகரிக்க மாட்டார்கள். வட்டி விகிதம் அதிகரிக்காவிட்டால் அது தங்கத்துக்கு சாதகம்.

இப்படியாக பல்வேறு சர்வதேச காரணகளுக்காக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடரவே செய்யும். 

- டாக்டர் சோம வள்ளியப்பன்

Next Story