தினம் ஒரு தகவல் : விற்கும் வீட்டிற்கு வரி


தினம் ஒரு தகவல் : விற்கும் வீட்டிற்கு வரி
x
தினத்தந்தி 12 Jan 2019 8:50 AM GMT (Updated: 12 Jan 2019 8:50 AM GMT)

நாம் வருமான வரி செலுத்துகிறோம். சேவை வரி செலுத்துகிறோம். வாங்கிய வீட்டை விற்று, அதில் லாபம் கிடைத்தால் அதற்கும் வரி செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழலாம்.

ஆம், ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் லாபம் ஈட்டுகிறார் என்றால், அந்த லாபத்துக்கு நிச்சயமாக வரி செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் வரியை மூலதன வரி என்கிறார்கள். இந்த வரி இரண்டு வகைப்படுகிறது. முதலாவது நீண்டகால மூலதன வரி. இரண்டாவது, குறுகிய கால மூலதன வரி.

ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை, இப்போது விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன லாபம் என்று பெயர். மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில் வாங்கிய வீட்டை விற்றால் அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை குறுகிய கால மூலதன லாபம் என்கிறார்கள். இதற்கான வரி, சாதாரணமாக ஒருவர் வருமான வரி செலுத்தினால் எந்த விகிதத்தில் செலுத்துவாரோ, அந்த விகிதத்தில் குறுகிய கால மூலதன லாப வரி செலுத்த வேண்டும்.

சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையை கழித்தால், மீதம் வருவது லாபம் என்பது அனைவரும் அறிந்ததே. நீண்டகால மூலதன லாபத்தை கணக்கிடுவதற்கு, இன்டக்ஸ் முறை கையாளப்படுகிறது. பண வீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு இன்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. பண வீக்கம் உயர்ந்தால் விலை உயரும் என்பது உங்களுக்கு தெரியும். இந்த இன்டக்ஸ் முறை 1981-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 1981-1982 நிதியாண்டில் இன்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்த ஆண்டு, அதாவது 1982-83-ல் இன்டக்ஸ் 109 புள்ளிகளாக உயர்ந்தது. தற்சமயம் இன்டக்ஸ் 939 புள்ளிகளாக உள்ளது. கிட்டத்தட்ட 9 மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணத்துக்கு ஒருவர் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கினார். அப்போது அதன் விலை ரூ.2 லட்சம். இப்போது அதை ரூ.25 லட்சத்துக்கு விற்கிறார். அவருக்கு கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் இதுதான்.

இணையதளங்களில் இதற்கான கால்குலேட்டர்கள் உள்ளன. இதன் வாயிலாக மூலதன லாபத்தை எளிதில் கணக்கிட்டு கொள்ளலாம். உங்கள் பழைய வீட்டை விற்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள், புதிய வீடு வாங்கினால் மூலதனத்துக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. உதாரணத்துக்கு உங்களுக்கு ரூ.22 லட்சம் நீண்ட கால மூலதன லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ரூ.20 லட்சத்துக்குப் புதிய வீடு வாங்குகிறீர்கள். மீதமுள்ள 2 லட்சத்துக்கு நீங்கள் 20.6 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது. ஒரு நிபந்தனை. புதிதாக வாங்கிய வீட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விற்கக்கூடாது என்பதாகும். 

Next Story