தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை...


தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை...
x
தினத்தந்தி 12 Jan 2019 12:50 PM GMT (Updated: 12 Jan 2019 12:50 PM GMT)

நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...

தங்கத்தின் சுத்தம் கேரட் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. பொதுவாக 24 கேரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம் என்பதையும், நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் என்பதையும் உணர வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் 18 கேரட், 14 கேரட் தூய்மை அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கும்.

24 கேரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகைக் கடைகளில் 22 கேரட் தங்க நகை ஆபரணங்கள்தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 கேரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப் படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கூடுதல் என்பதைப் போல, அடமானம் வைக்கும்போது அல்லது விற்கும்போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 கேரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.

ஆபரணத் தங்கம் வாங்கும்போது செய்கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகைக் கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் செய்கூலி சதவீதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்வார்கள். எனவே தங்கம் வாங்கும்போது செய்கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தங்க நகை வாங்கும்போது அது கையால் செய்யப்பட்டது என்றால் செய்கூலி விலை அதிகமாக இருக்கும். அதுவே எந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய்கூலி குறைவாக இருக்கும்.

ஆபரணத் தங்கம் எடை அளவினால்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும்போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எமரால்டு போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையை உயர்த்தும்.

பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகைக் கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம். ஆனால் அதன் மதிப்பு ஒன்றுதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் லட்சக்கணக்கான நகைக் கடைகள் உள்ளன. பெயர் தெரியாத சிறு கடைகளில் நகை வாங்கும்போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையை வாங்குவது நல்லது.

இந்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்த பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு தங்க நகை வாங்கினால், அதன் சந்தோஷம் என்றும் நம் மனதில் தங்கும். 

Next Story