சிறப்புக் கட்டுரைகள்

3 நிமிட படம்... 2 கோடி பணம் + "||" + 3 min movie ... 2 crore money

3 நிமிட படம்... 2 கோடி பணம்

3 நிமிட படம்... 2 கோடி பணம்
பெங்களூரு மாணவர் சமய் கொடிகா, இன்று ஒரு கோடீஸ்வரர். அதுவும் இவர் தயாரித்த வெறும் 3 நிமிட வீடியோ படத்துக்காக 2.9 கோடி ரூபாய் பரிசுத்தொகையைப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘பிரேக்த்ரூ ஜூனியர் சேலஞ்ச்’ என்ற சர்வதேச வருடாந்திரப் போட்டியில் வென்றதற்காக சமய்க்கு இந்தப் பரிசு கிட்டி யிருக்கிறது. 13 முதல் 18 வயது வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். அவர்கள், அன்றாட அறிவியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைகள் சார்ந்த 3 நிமிட வீடியோ படங்களை உருவாக்க வேண்டும். அவை, கடினமான விஷயத்தையும் எளிதாகப் புரிய வைக்கும்படி இருக்க வேண்டும்.

அப்படி, நம் உடலுக்குள் இயங்கும் ‘சர்க்கேடியன் ரிதம்’ என்ற உயிர்க் கடிகாரம் பற்றிய தனது வீடியோவுக்காகத்தான் சமய் பரிசு பெற்றிருக்கிறார்.

இவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருகிறார். அந்தச் சொந்த அனுபவமே இப்படி ஒரு வீடியோவை உருவாக்கத் தூண்டுதலாக இருந்திருக்கிறது.

‘‘எனக்கு தினமும் பகலில் ஆஸ்துமா தொந்தரவு மிதமாக இருக்கும் என்றால், அதிகாலையில் அதிகமாக இருக்கும். அது குறித்து ஆராய்ந்தபோது, இதற்கு சர்க்கேடியன் ரிதம்தான் காரணம் என அறிந்தேன்’’ என்கிறார், இந்த 11-ம் வகுப்பு மாணவர்.

மாரடைப்பு ஏன் பெரும்பாலும் அதிகாலையில் ஏற்படுகிறது, ஒலிம்பிக் சாதனைகள் அதிகம் மதிய வேளையில் தகர்க்கப்படுவது ஏன் என்றும் சமய் தனது வீடியோவில் விளக்கி இருக்கிறார்.

இவருக்கான பரிசுத்தொகையில் ரூ. 1.8 கோடி, ஸ்காலர்ஷிப் ஆக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் சமய் கல்வி கற்க இயலும். இவரது 9, 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 36 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தில், இவர் படிக்கும் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஓர் அதிநவீன அறிவியல் ஆய்வகம் அமையப் போகிறது. அப்பணியை ஒரு சர்வதேச நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. சமய்யின் வெற்றியால், பலருக்கும் பயன்.

சிறுவயது முதலே அறிவியல் ஆய்வுகளிலும், வீடியோ படம் எடுப்பதிலும் ஈடுபாடு காட்டிவந்த சமய், எளிய கதை சொல்லல் முறையில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அதிலும், அரசுப் பள்ளி மாணவர்களிடம் தான் முதலில் இந்த முயற்சியில் ஈடுபடுவேன் என்கிறார்.

சமய் கொடிகாவின் இந்த நல்லெண்ணம், ‘கோடிகளை’ விடப் பெரிது.