சிறப்புக் கட்டுரைகள்

புதுவை மாணவியின் புதுமை கண்டுபிடிப்பு + "||" + Punish student Innovation Invention

புதுவை மாணவியின் புதுமை கண்டுபிடிப்பு

புதுவை மாணவியின் புதுமை கண்டுபிடிப்பு
புதுவை மாணவி தேவசேனா, விவசாயிகளுக்கு உதவும் ஒரு புதுமை நீர் இறைக்கும் மோட்டாரை உருவாக்கியிருக்கிறார்.
எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக உள்ள இந்த மோட்டார், விவசாயிகளுக்குப் பெரிதும் பயன்படும் என்று கூறுகிறார் தேவசேனா.

அவரது பேட்டி...

நீங்கள் உருவாக்கியுள்ள சாதனம் பற்றிக் கூறுங்கள்...

விவசாயத்தில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு மின்சார மோட்டாரை நான் உருவாக்கியிருக்கிறேன். இதன் சிறப்பம்சமே, இது தண்ணீரில் மிதந்தபடியே இயங்கக்கூடியது என்பதுதான்.

இப்படி ஒரு மோட்டாரை நீங்கள் உருவாக்கக் காரணம் என்ன?

விவசாய குடும்ப பின்னணியைக் கொண்டவள் நான். எனவே, தண்ணீர் இறைப்பதற்கு அவர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பெரிய பெரிய நீர் இறைக்கும் மோட்டார்களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லவும், அவற்றைப் பொருத்தவும் விவசாயிகள் பல வேலையாட்களைத் தேடிச் சிரமப்படுவார்கள். அதைப் பார்த்துத்தான், எளிதாக ஒருவரால் எடுத்துச் செல்லக்கூடிய, தண்ணீரில் மிதந்தபடியே நீர் இறைக்கக்கூடிய மோட்டாரை உருவாக்கலாம் என்று எண்ணினேன். அதன் அடிப்படையில்தான் இதைத் தயாரித்தேன்.

இதன் வேறு சிறப்பம்சங்கள்?

பெரிய மோட்டார்கள், நீர் மட்டம் குறையும்போது சேறு, சகதியையும் உறிஞ்சும். மோட்டார் உட்பாகங்களில் படியும் அவற்றை நீக்குவதற்கு மிகுந்த சிரமப்படவும், அதிகம் செல வழிக்கவும் வேண்டியிருக்கும். ஆனால் எனது மோட்டாரில், சேறு உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் அமைப்பு உள்ளது. மேலும் இதில் நான் நான்கு கால்களைப் பொருத்தியிருக்கிறேன். எனவே தண்ணீர் மட்டம் முற்றிலும் குறைந்தாலும் நான்கு கால்களில் உட்கார்ந்துகொள்ளும். சேற்றில் புதையாது.

இந்த மோட்டாரை எவ்வளவு நாட்களில், எவ்வளவு செலவில் உருவாக்கினீர்கள்?

நான் எட்டு மாத கால தொடர் முயற்சியில், ரூ. 500 செலவில் இந்த மோட்டாரை உருவாக்கினேன். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இதைத் தயாரித்திருக்கிறேன். இதற்கு ஆகும் செலவை இன்னும் கூடக் குறைக்க முடியும்.

எந்தெந்த இடங்களில் உங்கள் மோட்டாரை பயன்படுத்த முடியும்?

இப்போதைக்கு எனது மோட்டாரை சிறு கிணறுகள், தொட்டிகள், குட்டைகளில் இருந்து நீர் இறைப்பதற்கும், சாலை யோரப் பள்ளங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பயன் படுத்தலாம். இதன் எடை வெறும் 600 கிராம்தான் என்பதால், எவரும் விரும்பிய இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்லலாம். குறிப்பாக, வீட்டுத் தோட்டம் அமைத்துப் பராமரிப்பவர்களுக்கு இந்த மோட்டார் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த மோட்டாரை பெரிய அளவிலான நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாதா?

நான் தற்போது 12 வோல்ட் டி.சி. மோட்டாருடன் ஒரு மாதிரி அமைப்பைப் போல இந்த மோட்டாரை உருவாக்கியிருக்கிறேன். இதில் மேலும் கூடுதல் திறனுள்ள மோட்டாரைப் பயன் படுத்தினால் அதிக நீர் இறைக்கும் திறனைப் பெறலாம்.

இந்த மோட்டாரின் குறிப்பிடத்தக்க வேறு நன்மை?

பொதுவாக டீசல் மோட்டார்கள் அதிக இரைச்சலையும், புகையையும் ஏற்படுத்தும். ஆனால் எனது மோட்டார் சத்தமின்றி ஓடும், நச்சு வாயுவை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும், நேரடி மின் இணைப்புடன், பேட்டரி மின்சாரத்திலும் இதை இயக்க முடியும்.

இந்த மிதக்கும் மோட்டாரை நடைமுறையில் பயன்படுத்தியிருக்கிறார்களா?

ஆமாம். எனது தாத்தா ஒரு விவசாயி என்பதால் அவரது தோட்டத்தில் இந்த மோட்டாரைப் பயன்படுத்தியிருக்கிறேன். வேறு சிலரிடமும் இதைப் பயன்படுத்திப் பார்க்கச் சொன்னேன். அவர்களும், எனது தாத்தாவும் கூறிய கருத்து, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதே.

இம்மோட்டார் உருவாக்கத்தில் எந்தப் பகுதி மிகவும் கடினமாக இருந்தது?

தண்ணீரில் மிதக்கக்கூடியதாக எனது மோட்டார் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரதான நோக்கம். அதற்காக இதன் வெளிப்புறப் பகுதியை மரம், தெர்மகோல் கொண்டு தயாரிக்க முற்பட்டேன். அவை பலன் தரவில்லை. அதற்கு அப்புறம்தான், பிளாஸ்டிக்கை கொண்டு மூடும் வகையில் இதை உருவாக்கினேன்.

இதன் உருவாக்கத்தில் உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்?

பிள்ளைகளை படி படி என்று நச்சரிக்கும் பெற்றோர் மத்தியில் எனது அறிவியல் சிந்தனைக்கும், புதியன கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் எனது பெற்றோர் கலிமா முருகன் -அய்யம்மாள் மிகவும் உறுதுணையாக உள்ளனர். நான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் புதுச்சேரி ஏகலைவா சர்வதேசப் பள்ளி ஆசிரியைகளும், எங்கள் பள்ளி முதல்வர் சுகந்தி விஸ்வநாதனும் எனக்கு வழிகாட்டி, ஊக்குவித்தனர்.

உங்களது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிட்டி யிருக்கிறதா?

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அறிவியல் பயிலரங்கில் சிறந்த 30 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எனது கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டது. தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய அறிவியல் போட்டியில் முதல் பரிசு கிட்டியது.

உங்கள் மோட்டாரை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

ஆமாம். அதற்காக மேலும் பல விவசாயிகளையும், விவசாய அமைப்புகளையும் அணுகி, இதுகுறித்து எடுத்துச் சொல்லப் போகிறேன்.

வேறு ஏதேனும் கண்டுடிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

ஆமாம். தற்போது, காது கேளாதோர், பார்வையற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஒரு ‘டிஜிட்டல் குக்கரை’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

தேவசேனாவின் கண்டுபிடிப்பு ஆர்வம் தீரவே தீராது போலிருக்கிறது.