சிறப்புக் கட்டுரைகள்

வாழை கொடுத்த வரம் + "||" + Benefit from Banana

வாழை கொடுத்த வரம்

வாழை கொடுத்த வரம்
விவசாயம் மிக அற்புதமான தொழில். கொஞ்சம் மாற்றி யோசித்து, நாம் விளைவிப்பவைகளை மதிப்புகூட்டு பொருட்களாக்கினால் விவசாயத்தை போன்று லாபம் தரும் தொழில் வேறு எதுவும் இல்லை.
விவசாயம் மிக அற்புதமான தொழில். கொஞ்சம் மாற்றி யோசித்து, நாம் விளைவிப்பவைகளை மதிப்புகூட்டு பொருட்களாக்கினால் விவசாயத்தை போன்று லாபம் தரும் தொழில் வேறு எதுவும் இல்லை. அனுபவமும், கடுமையான உழைப்பும் இருந்தால் பெண்களால்கூட மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்” என்கிறார், பெண் விவசாயி தமிழ்ச்செல்வி. இவர் விருது பெற்ற சாதனையாளர். பெண்களிடம் இருக்கும் திறமைகளை தூண்டிவிடும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் திகழ்கிறார்.

தமிழ்ச்செல்வி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் கொண்டையம் பாளையம் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். பசுமை நிறைந்த தென்னை, வாழை, மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களின் நடுவே அவரது வீடு அமைந்திருக்கிறது. கணவர் புகழேந்திரன். அவர்களது மகள் ஞானசவுந்தர்யா. நேந்திரன் காயில் இருந்து சிப்ஸ் தயாரிப்பது மற்றும் எள் உருண்டை தயாரித்தல், கடலை உருண்டை செய்தல்.. என்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார், தமிழ்ச்செல்வி.

“நான் அந்தியூர் அருகில் உள்ள கரட்டூர் கிராமத்தில் பிறந்தேன். எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் குப்பாண்டம்பாளையத்தில் இருந்தது. அது வானம் பார்த்த பூமி. ஆனாலும் நாங்கள் அதை தரிசாக கிடக்கவிட்டதில்லை. கடலை, எள் எதையாவது விதைத்துக்கொண்டே இருப்போம். நான் பிளஸ்-டூ வரை படித்தேன். அப்புறம், விவசாயம்தான் முழுநேர தொழில். எனக்கு 1996-ல் திருமணம் நடந்தது. திரு மணத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்புதான் எங்கள் பகுதிக்கு ஆற்றுநீர் பாசனம் கிடைத்தது. அதனால் தரிசாக கிடந்த மண் எல்லாம் கரும்பும், மஞ்சளும் விளையும் வளமான நிலமாக மாறிச்சு.

நான் ஆசைஆசையாய் விவசாயம் செய்துகொண்டிருந்தபோது சில நெருக்கடிகளும் ஏற்பட்டன. மயில், முயல், காட்டு பன்றி போன்றவைகளால் எங்களுக்கும் தொந்தரவு வந்தது. ஆனாலும் விவசாயத்தை கைவிட மனசு வரலை. கிணற்று பாசனத்தில் வாழை வளர்த்தேன். தார்போட்டதும் வியாபாரிங்க வருவாங்க. அவங்க வச்சதுதான் விலை. நமக்கும் என்ன ஏதுன்னு வெளிஉலகம் தெரியாது. அவங்களுக்கே கேட்ட விலைக்கு விற்றுவிட்டு அடுத்த பயிருக்கு போய்விடுவேன்.

இப்படிப்பட்ட சூழலில் திடீரென்று ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டது. கிணற்றில் தண்ணீர் இல்லை. பச்சைப் பசேல்னு இருந்த நிலம் முழுக்க வானத்தை பார்த்துட்டு வறண்டு போய் கிடந்துச்சு. சிரமத்தோடு சிரமமாக 2 ஆழ்குழாய் கிணறு தோண்டினோம். 500 அடி ஆழம் தோண்டிய பிறகு தண்ணீர் வந்துச்சு. அதில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்தும் எந்த லாபமும் இல்லை. விவசாயிகளுக்கு முதல் எதிரி இயற்கைதான். மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும். காற்று எதிர்பாராமல் வந்தும் தாக்கும். அதை எல்லாம் தாண்டி ஜெயிக்கணும்.

எப்படி ஜெயிப்பது என்று யோசித்து விவசாயத்தை பண்ணைத் தொழிலாக மாற்றினோம். மாடு வாங்கினோம். ஆடு வளர்த்தோம். கோழி வளர்த்தோம். இப்படி எல்லாம் செய்ததால் எனக்கு பண்ணைத்தொழில் மீது ஈர்ப்பு வந்தது. ஆனாலும் எப்போதா வதுதான் வருமானம் வந்தது..” என்று கூறும் தமிழ்ச்செல்வி அடுத்து, சிப்பிக்காளான் வளர்ப்புக்கான பயிற்சியை பெற்று, காளான் உற்பத்தியில் இறங்கியுள்ளார்.

“முதலில் சிறிதளவு காளான் வளர்த்து, அக்கம்பக்கத்தினரிடம் விற்றேன். அவர்களும் ஆர்வமாக வாங்கினார்கள். பின்பு தினமும் பத்து கிலோ காளான் கிடைத்தது. கிராமத்தில் அவ்வளவு காளானையும் விற்க முடியாது என்பதால், அதை பையில் போட்டு எடுத்துக்கொண்டு பஸ் பிடித்து, 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் பவானி வந்தேன். அங்கு வீடுவீடாக சென்று, நானே விளைவித்தது என்றுகூறி விற்பனை செய்தேன். மக்கள் போட்டிபோட்டு வாங்கினார்கள். நல்ல வருவாய் கிடைத்தது. அதை தொடர்ந்து காளான் உற்பத்தியிலும், விற்பனையிலும் சாதனை படைத்தேன். அப்போதுதான் எனக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறந்த பெண் விவசாயி விருது கிடைத்தது” என்றார்.

தமிழ்ச்செல்வி அடுத்து நம்மை வாழைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அவர் விவசாயத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். தோட்டத்தில் நேந்திரம் குலைகள் கம்பீரமாய் நிற்கின்றன. “இவைகளை இன்னும் 2 மாதத்தில் வெட்டிவிடலாம். அருகில் உள்ள தோட்டத்தில் செவ்வாழை பயிரிட்டிருக்கிறோம். குச்சிக்கிழங்கும் போட்டுள்ளோம். இவைகளை எல்லாம் உற்பத்தி செய்வது என் கணவர் புகழேந்திரன்தான். விளைபொருட்களை சந்தைப்படுத்துவது என்வேலை..” என்ற தமிழ்ச்செல்வி, லாவகமாக இடது கையின் சுண்டு விரலை மடக்கி வாய்க்குள் விட்டு ஊத... விசில் சத்தம் காதைப்பிளக்கிறது.

விசில் சத்தத்தை கேட்டு ஓடோடிவந்தார் புகழேந்திரன். அடுத்து காவல்காக்கும் நாய்களும் ஓடிவந்து தமிழ்ச்செல்வி முன்பு நின்றன. விவசாய தொழிலாளர்களும் வந்துவிட்டார்கள். இவர்கள் அனைவருக்குமான தொலைத்தொடர்பாக விசில் சத்தம் இருக்கிறது. விசில் சத்தத்தைக் கேட்டு தூரத்தை கணித்து, தேடி வந்துவிடுகிறார்கள். தோட்டத்தில் உள்ள வாழைத்தார்களை வியாபாரிகளுக்கு விற்றால் குறைந்த லாபமே கிடைக்கும் என்பதால் தமிழ்ச்செல்வியே ‘வாழைக்காய் சிப்ஸ்’ தயாரித்து, விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கிறார். சிப்ஸ் தயாரிக்கும் சிந்தனை அவருக்கு எப்படி வந்தது? என்பதை பற்றி விளக்குகிறார்.

“ஒருமுறை எங்கள் தோட்டத்தில் நேந்திரன் வாழைகள் நன்றாக விளைந்திருந்தன. அப்போது அதை வாங்க வந்த வியாபாரி கள் ஒரு தாருக்கு 150 ரூபாய் என விலை நிர்ணயித்தார்கள். அதே நேரத்தில் சுவீட் கடையில் ஒரு கிலோ நேந்திரங்காய் சிப்ஸ் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போது, ‘இவ்வளவு குறைந்த விலைக்கு வாழைக்காயை விற்பதைவிட நாமே சிப்ஸ் தயாரித்தால் நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும். மக்களுக்கும் தரமான சிப்ஸ் கிடைக்குமே!’ என்ற கோணத்தில் சிந்தித்தேன். உடனே செயலிலும் இறங்கினேன்.

சிப்ஸ் தயாரிக்கும் விதம் பற்றி முறைப்படி தெரிந்துகொண்டு, முதலில் ஒரு தார் நேந்திரங்காயில் சிப்ஸ் தயாரித்தேன். அதில் மூன்று கிலோ சிப்ஸ் கிடைத்தது. 1200 ரூபாய்க்கு விற்றேன். எல்லா செலவும் போக 500 ரூபாய் லாபம் கிடைத்தது. நான் அதை வாழைக்காயாக விற்றிருந்தால் 150 ரூபாய்தான் கிடைத்திருக்கும். அப்போதுதான் எனக்கு மதிப்பு கூட்டி விற்கப்படும் பொருட்களின் மகத்துவம் தெரிந்தது.

சிப்ஸ் தயாரிப்பது சற்று கடினமான வேலைதான். தேங்காய் எண்ணெய்யில் வாழைக்காயை சீவிப்போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். சீவிவைத்துக்கொண்டு சேர்த்துபோட்டால், அவை ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொள்ளும். சிப்ஸ் தனித்தனியாக கிடைக்காது. வேகவும் செய்யாது. தோலை உரிக்கும்போது நேந்திரன் காய் உடைந்துவிடகூடாது. காய்களை தரம்பார்த்து சிப்ஸ் தயாரிக்க தேர்வுசெய்யவேண்டும். பக்குவமாக அந்த வேலையை செய்யவேண்டும். நான் இதற்காக எந்த உபகரணங்களையும் புதிதாக வாங்கவில்லை. வீட்டு உபயோகத்திற்காக வைத்திருக்கும் பெரிய சீவல், பெரிய வாணலி போன்றவைகளை பயன்படுத்தி அன்றன்றைய தேவைக்கு மட்டும் தயாரிக்கிறேன். ரவா லட்டு, கடலை உருண்டை, ஒப்புட்டு, தேங்காய்ப்பால், மாட்டுப்பால், வெண்ணெய், தயிர், நெய் என்று எங்கள் தோட்டத்தில் கிடைத்த அத்தனையையும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக்கி விற்பனைசெய்கிறேன்.

இப்போது தினசரி 40 கிலோ அளவுக்கு பொருட்களை தயாரித்து விற்கிறேன். இதற்கு ஒரு வாகனமும் வைத்திருக்கிறேன். தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து பொருட்களை தயார்செய்து, காலை 6 மணிக்கு பஸ் ஏறி, 8 மணிக்கு விற்கும் இடத்துக்கு போய்விடுவேன். அங்கு எனது பொருட்களுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். 11 மணிக்கு வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புவேன். திரும்பி வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தோட்டத்திற்கு விவசாய பணிகளை கவனிக்க சென்றுவிடுவேன். குடும்பத்தினர் அனைவருமே இந்த பணியில் எனக்கு உதவுகிறார்கள். விவசாய பொருட்களை நான் எப்படி மதிப்புகூட்டப்பட்ட பொருட் களாக மாற்றுகிறேன் என்பதை, விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகவே கற்றுக்கொடுக்கிறேன். பெண்களுக்காக தன்னம்பிக்கை பேச்சரங்கங்களிலும் கலந்து கொள்கிறேன். இத்தனை ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பின்பு என்னால் விவசாயம் சார்ந்த தொழிலால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது” என்கிறார்.

இவர், மைராடா நிறுவனம் மூலம் நடத்தப்படும் மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மையம்தான் தனது வளர்ச்சிக்கு காரணம் என்று கூறுகிறார். அங்குதான் காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்றிருக்கிறார். சிறந்த பெண் விவசாயி விருதுக்காக இவரை பரிந்துரை செய்ததும் இந்த நிறுவனம்தான்.

“சமீபத்தில் நான் புதுடெல்லியில் நடந்த இந்திய அளவிலான சிறந்த பெண் விவசாயிகளுக்கான போட்டியில் கலந்துகொண்டேன். அதில் தமிழ்நாட்டில் இருந்து 9 பெண்கள் கலந்துகொண்டோம். முதலில் டெல்லியில் இருந்து தூர்தர்ஷன் வேளாண்மை பிரிவினர் என் தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் என் தோட்டங்கள், நான் செய்யும் விவசாய பணிகளை எல்லாம் ஆவணப்படுத்திவிட்டு பின்பு என்னை டெல்லிக்கு அழைத்தார்கள். நான் குடும்பத்தோடு சென்றிருந்தேன். அங்கு எனது விவசாய அனுபவங்களை எல்லாம் கேட்டார்கள். தொடர்ந்து அதற்குரிய நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இறுதியில் வெற்றியாளரை அறிவிப்பார்கள். டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளை சந்தித்து பேசினேன். அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அடுத்தகட்டத்திற்கு நான் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளையும் அது உருவாக்கித் தந்திருக்கிறது. பெண்கள் ஆர்வத்தோடு விவசாயத்தில் இறங்கவேண்டும். கடுமையாக உழைத்தால், பெண்களால் தேவைக்கு அதிகமாக விவசாயத்தில் சம்பாதிக்க முடியும்” என்கிறார்.