யானைகளின் கும்மாளம்.. ஏகப்பட்ட கொண்டாட்டம்..


யானைகளின் கும்மாளம்.. ஏகப்பட்ட கொண்டாட்டம்..
x
தினத்தந்தி 13 Jan 2019 8:11 AM GMT (Updated: 13 Jan 2019 8:11 AM GMT)

பசுமை நிறைந்த தேக்கம்பட்டி பவானிஆற்றுப்படுகை அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது.

சுமை நிறைந்த தேக்கம்பட்டி பவானிஆற்றுப்படுகை அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. கோவிலுக்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துதரப்பினருக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளையும் ஒருசேர கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த யானைகளுக்கு இளைப்பாறுதல், விளையாட்டு, வேளாவேளைக்கு வாய்க்கு ருசியான உணவு, உடலுக்கு தேவையான பயிற்சி, மருத்துவ பரிசோதனை, சிகிச்சை எல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வாழ்க என்று முகாமுக்கு அழைத்து வரப்பட்ட யானைகளை வாழ்த்தலாம்.

கோவை மாவட்டம் பவானி ஆற்றுப்படுகையில் கோவில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி, வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த யானைகளுமாக மொத்தம் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. 6 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் கடந்து செல்லும் பாதையாக தேக்கம்பட்டி சாலை அமைந்துள்ளதால் முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காட்டு விலங்குகள் ஏதாவது முகாமுக்குள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக உயர்கோபுரம் அமைத்து கண்காணிக்கிறார்கள். யானைகளின் சொர்க்கத்திற்கு எந்த இடைஞ்சலும் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

முகாம் பகுதியில் ஆங்காங்கே உள்ள பசுமை படர்ந்த மரங் களின் கீழே கோவில் யானைகள் ஒவ்வொன்றாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு தினசரி காலை, மாலை நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் குளிப்பாட்டப்படுகிறது. ஆற்றோர படுகையில் அவை குளிப்பதற்காக ஷவர் மேடை மற்றும் குளியல் மேடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தினசரி காலை, மாலை இரண்டு வேளைகளும் யானைகள் அழைத்து செல்லப்பட்டு குளிப்பாட்டப்படுகின்றன. அவைகள் படுத்துக்கிடந்து குளிக்கும் அழகே அழகு. குளிக்கும்போது அவற்றின் கால்பாதம் முதல், முதுகு வரை பாகன்கள் மசாஜ் செய்வதுபோன்று தேய்த்து குளிப்பாட்டுவது யானைகளையே நெகிழ வைக்கிறது. இதனால் பாகன் சொல்லை தட்டாத பாசத்துடன் யானைகள் குஷியாக நீராடி வெளியேறுகின்றன.

நடைப்பயிற்சி மற்றும் குளியல் முடிந்ததும், யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அரிசி சாதம், பச்சைப்பயிறு, கொள்ளு, உப்பு, மஞ்சள், ஆயுர்வேத மருந்துகளான அஷ்டசூரணம், சவனப்ராஸ், பயோ பூஸ்ட் மாத்திரை, லிவ் மாத்திரை, புரோட்டின் சப்ளிமென்ட், மல்டி வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்சர் ஆகியவைகளை கலந்து உணவாக வழங்கப்படுகின்றன. மேலும் தேவைப்படும் யானைகளுக்கு மட்டும் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. பேரீச்சை, அவல், கேரட், பீட்ரூட் ஆகியவை அதில் இடம்பெறுகிறது.

இந்த விசேஷ உணவுகளால், சற்று மெலிந்த தோற்றம் உடைய சில யானைகள் பலம் கொண்டவைகளாக மாறி வருகின்றன. தீவன மேடையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கூந்தல்பனை, தென்னைமட்டை, புல், கரும்பு சோகை, சாறுள்ள கரும்பு, கீரை வகைகளை யானைகளே துதிக்கையால் சாப்பிடுவதற்கு எடுத்து செல்கின்றன. ஓய்வு நேரத்தில் மரத்துடன் பிணைக்கப்பட்டுள்ள யானைகள் துதிக்கையால் மண்ணை உடலில் வாரியிறைத்து விளை யாடுகின்றன. ஒரு சில யானைகள் உண்ட களைப்பில் நன்றாக உறங்குகின்றன.

இந்த முகாம் யானைகளுக்கு சொல்லத்தெரியாத சொர்க்கமாக இருக்கிறது. யானைகளின் செயல்கள் அனைத்தும் முழு நேரமும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப் படுகிறது. பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புப்பணியில் போலீசார் மற்றும் வனத்துறையினர், தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும் முகாம் ஒருங்கிணைப்பாளருமான ராஜமாணிக்கம், உதவி ஒருங்கிணைப்பாளரும் பண்ணாரியம்மன் கோவில் துணை ஆணையருமான பழனிக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அறநிலையத்துறை அலு வலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைகளின் முகாமில் நாம் அச்சுதனை சந்தித்தோம். அவருக்கு வயது 19. முகாமில் உள்ள இளவயது பாகன் இவர்தான். அச்சுதன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோதை (வயது 26) என்கிற கோவில் யானைக்கு உதவிபாகனாக உள்ளார். முகாமில் அந்த யானையை தினசரி காலை, மாலை வேளைகளில் ஆற்றோரத்தில் உள்ள குளியல் மேடைக்கு அழைத்து சென்று அதனை படுக்கவைத்து, தண்ணீர் ஊற்றி, நைலான் இழை களால் தேய்த்து குளிப்பாட்டுகிறார். அந்த யானையும் இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறது. தேர்ச்சிபெற்ற பாகன்போன்று பணிபுரியும் அவரது மனதில் நீங்காத சோகம் ஒன்று குடிகொண்டிருக்கிறது. அது யானையால் நடந்த இன்னல்தான். அந்த சம்பவத்தில் இவரது தந்தை இறந்துபோனார். அதற்கு காரணமான யானை இவரிடம் கண்கலங்கி, மன்னிப்பு கேட்டதுபோல் நடந்துகொண்டு இப்போதும் அச்சுதனிடம் பாசம் காட்டிக்கொண்டிருக்கிறது.

சமயபுரத்தில் நடந்த அந்த சோக சம்பவம் பற்றி அச்சுதன் சொல்லக்கேட்போம்!

‘‘நான் 10-ம் வகுப்புவரை படித்துள்ளேன். எனது தங்கை கல்லூரியில் படித்து வருகிறார். நாங்கள் 4 தலைமுறைகளாக யானை பாகன்களாக பணிசெய்து வருகிறோம். எனது தாத்தா கோபாலநாயர் சென்னைக்கு அருகில் உள்ள நரசிம்மர் கோவில் மடத்து யானைகளுக்கு பாகனாக இருந்தார். எங்கள் குடும்பமும் அங்கேதான் இருந்தது. எனது தந்தை கஜேந்திரனும் அங்கே இருந்து பாகன்களுக்கான பணியை அனுபவ ரீதியாக கற்றார். இதனால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே அந்த மடத்தில் உள்ள யானைகளுடன் பழகினேன். எனது தாத்தா யானைகளை எப்படி பழக்கப்படுத்துகிறார் என்று அறிந்து, அதனை எல்லாம் தெரிந்துகொண்டேன். யானையின் மீது ஏறி விளையாடுவது எனது பொழுது போக்காக இருந்தது. இதனால் எனக்கு சிறுவயதில் இருந்தே யானை என்றால் வீட்டு வளர்ப்பு பிராணி போன்று எனக்கு அதன் மீது பற்றும், பாசமும் ஏற்பட்டது.

பின்பு தாத்தா, தந்தை ஆகியோரது வழிகாட்டுதல்படி பாகன் பணிகளை யானைகளுக்கு செய்து வந்தேன். இந்த நிலையில் எனது தந்தை கஜேந்திரன் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் யானை பாகனாக பணியில் சேர்ந்தார். வனத்துறையால் முதுமலையில் இருந்து வழங்கப்பட்ட மசினி என்கிற 12 வயது யானையை அவர் பராமரித்து வந்தார்.

அது குட்டி யானை என்பதால் காட்டில் இருந்து நாட்டுக்கு வந்து பழகும் இயல்பு நிலைக்கு வராமலே இருந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அந்த யானைக்கு உதவிபாகனாக நானும் பணிக்கு வந்தேன். எனது தந்தையுடன், நானும் அந்த யானையை பராமரித்தேன். அப்போதுதான் அந்த சோகம் நடந்தது” என்று கூறும்போது அச்சுதன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகுகிறது. அதை அருகில் நின்றிருந்த யானைகளும் கவனித்தன!

- அடுத்த வாரமும்...

Next Story