சிறப்புக் கட்டுரைகள்

பரவசப்படுத்தும் ‘பரத யோகா’ + "||" + Pleases 'Bharatha Yoga'

பரவசப்படுத்தும் ‘பரத யோகா’

பரவசப்படுத்தும் ‘பரத யோகா’
கலைஞர்கள் இப்போது காலத்துக்கு ஏற்றபடியான மாற்றங்களை உருவாக்கி சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார்கள்.
லைஞர்கள் இப்போது காலத்துக்கு ஏற்றபடியான மாற்றங்களை உருவாக்கி சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்களின் சிறப்புகளை காலங்காலமாக கலை வடிவங்களில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருந்த அவர்கள், தற்போது சமூகத்திற்கு தேவையான அத்தியாவசியமான கருத்துக்களை அலசிஆராய்ந்து, பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞர்களின் அத்தகைய முயற்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ‘வாட்ஸ் ஆப்’, ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்றவைகளில் மூழ்கிகிடக்கும் உலகத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், பரதநாட்டிய கலைஞர் லலிதா வெங்கடேஷ். இவர் சமூகம், செல்போன் மோகத்தால் எப்படி எல்லாம் சிக்கலுக்குள்ளாகுகிறது என்பதை நாட்டிய வடிவத்தில் காட்சிப்படுத்தி, மக்களின் மனதில் ஆழமாக விழிப்புணர்வு விதைகளை தூவிக்கொண்டிருக்கிறார்.

“நமது அன்றாட வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால், அதில் வேடிக்கையும் வேதனையும் கலந்திருப்பதை உணரலாம். வளர்ந்த மரங்களை எல்லாம் நாமே வெட்டிவிட்டு, ‘மரக்கன்றுகளை நடவேண்டும்’ என்று பெருமளவு பணத்தை செலவழித்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறோம். விளைநிலத்தில் ரசாயன உரங் களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நாமே வாரிக் கொட்டிவிட்டு, ஆரோக்கியத்தை கெடுக்கிறோம். அவைகளை சாப்பிட்டு நமது உடலையும் நோய்களின் கூடாரமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகள் மீது வீடுகளை கட்டிக்கொள்கிறோம். மழை பெய்யும்போது நீர் தனது வழித்தடங்களை தேடிவந்து சேரும்போது, ‘வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டது’ என்று கூறி, வீதியில் வந்து நின்று கூச்சல் போடுகிறோம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்பதுபோல், இன்று நாம் சந்திக்கும் அத்தனை சமூக சிக்கல்களும் பிறரால் வந்ததல்ல. நாம்தான் அதற்கு காரணம். அதனால் நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொண்டு, காலத்திற்கு ஏற்ப வாழ முன்வரவேண்டும். அத்தகைய தரமான சிந்தனையைத்தூண்ட பழம் பெருமைவாய்ந்த பரதக் கலையை பயன்படுத்துகிறேன். அதற்காக விசேஷமான நிகழ்ச்சிகளை வடிவமைத்து பெண்களை ஆட வைத்து, அதை புதுவடிவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறேன்” என்கிறார், லலிதா வெங்கடேஷ்.

இவர் கலை வண்ணத்தில் உருவாகி இருக்கும் நாட்டிய நாடகம் ஒன்று, சமூக வலைத்தளத்தில் மக்கள் மூழ்காமல் இருக்க எச்சரிக்கை மணி அடிக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை உருக்கமாக எடுத்துக்கூறி மனதை உருகவும், நெகிழவும் வைக்கிறது.

“எந்த கலையாக இருந்தாலும் அது காலத்துக்கு ஏற்றபடி புதிய வடிவம் பெற்று மக்களை சென்றடைய வேண்டும். முன்பு புராண, இதிகாசங்களை கலை மூலம் வழங்கினோம். சுதந்திர போராட்ட காலத்தில், கலை மூலம்தான் புரட்சிக் கருத்துக்களை ஊட்டினோம். பின்பு இலக்கியம், பெண்ணுரிமை போன்ற கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தோம். அந்த வரிசையில் இப்போது ஒருபுறம் இணைய தளத்திற்குள் மூழ்கி கிடக்கும் புதிய தலைமுறையை மீட்க வேண்டியிருக்கிறது. மறுபுறம், அடுத்த தலைமுறை அதில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்க வேண்டியதிருக்கிறது. அதற்கு ஏற்றபடி நாங்கள் பரத நாட்டியத்தில் காட்சிகளை வடி வமைத்து அரங்கேற்றுகிறோம்.

முன்பெல்லாம் திருமணம் என்றால், நேரில் போய் நலம் விசாரித்து அழைப்பிதழை கொடுத்து வருகை தரும்படி அன்புடன் அழைப்பார்கள். இப்போது ‘வாட்ஸ் ஆப்’ பில் போட்டிருக்கிறேன். பார்த்துக்கொள், என்று கூறி விடுகிறார்கள். ‘அழைப்பிதழை நேரில் வந்து தந்திருக்கலாமே!’ என்று கேட்டால், ‘இந்த காலத்துக்குதக்கபடி மாறு. பத்தாம் பசலியாக இருக்காதே!’ என்று கிண்டலடிக்கிறார்கள். அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் மக்களின் இதயங்களை சுருக்கி, அன்பை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறது. இப்போது பலரும் நேரடியாக பார்ப்பதில்லை. உயிரோட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைப்பதில்லை. கை குலுக்கல் இல்லை. அன்போடு ஒரு அரவணைப்பு இல்லை. ஆறுதலும் இல்லை.

வீட்டிற்குள் அனைவரும் ஒரே அறையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. அனைவரும் ஆளுக்கொரு போன் வைத்துக்கொண்டு வேறு யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேறு எதை எதையோ அதில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய சமூக சீரழிவுகள் தோன்றுகின்றன. குழந்தை அழாமல் இருக்க அதற்கும் ஒரு ‘ஐ பேடு’ வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் வெளியே சென்று விளையாடாமல் அதையே பார்த்து, அதிலே விளையாடிக்கொண்டிருப்பதால், அவர்களது கண், மூளை பாதித்து உடல் இயக்கமும் குறைந்துபோகிறது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற எதிர்கால இந்தியா உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிலையை மாற்றத்தான் அதிகப்படியான இணையதள பயன்பாட்டிற்கு எதிரான புரட்சியை பரதநாட்டியம் மூலம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

கலை மூலம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க நினைக்கும் லலிதா வெங்கடேஷீக்கும்-பரதநாட்டியத்திற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?

“எனது பூர்வீகம் சென்னை தான். 5-வயதிலே என்னை தாயார் மரகதம் அம்மாள் பரத நாட்டிய பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். கலைமாமணி எஸ்.கே. காமேஸ்வரனிடம் நான் கற்றேன். எனக்கு தமிழ் மீதும் அதிக பற்று உண்டு. அதனால் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. படித்துவிட்டு, பி.எட். கல்வியும் கற்றேன். பம்மல் ஸ்ரீசங்கரா குளோபல் பள்ளியில் தமிழாசிரியையாகவும், நடன ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடனம் ஆடுவேன் என்று என்னை பெண் பார்க்க வந்தபோதே கணவரிடம் கூறிவிட்டேன். அவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். ஏராளமான நிகழ்ச்சி கள் நடத்தினேன். பரதநாட்டியத்தை நன்றாக கற்று தேர்ச்சியடைந்த பின்பு ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி கலா மந்திர் என்ற மையத்தை மடிப்பாக்கத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். எனக்கு குழந்தை இல்லாத குறையை, நடனம் கற்கும் குழந்தைகள் மூலம் நிவர்த்தி செய்துகொண்டேன். இதில் எனக்கு மிகுந்த ஆத்ம திருப்திகிடைக்கிறது.” என்று கூறும் இவர், வயதில் அரை சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். 45 வயதைக் கடந்த பெண் களுக்கு பரதநாட்டியம் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தி உற்சாகம் தரும் என்றும் சொல்கிறார். அது எப்படி என்று அவரே விளக்குகிறார்.

“ஐம்பது வயதை நெருங்கும் பெண்கள் பாதிக்கிணறு தாண்டிவிட்டோம் என்று கூறி சோர்ந்து போகிறார்கள். ‘குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள். அவர் களுக்கு கல்யாணமும் நடந்துவிட்டது. இனி நமது வாழ்க்கையில் என்ன இருக்கிறது’ என்று தங்களை முடக்கிப்போடும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். உண்மையில் 50 வயது என்பது அனுபவங்கள் நிறைந்த அற்புதமான பருவம். குடும்ப பொறுப்புகள் முடிந்து பெண்கள் தங்களுக்காக வாழ வேண்டிய காலம் அது. இதை உணர்ந்து இப்போது நடுத்தர வயது பெண்களும் பரதம் கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள்.

எந்த வயதில் பரதம் கற்றுக்கொண்டாலும் உடல் எப்போதும் பளிச்சென்று பலமாக இருக்கும். இளமையை தக்கவைத்துக்கொள்ளலாம். தேவையற்ற தயக்கங்கள் விலகும். உடலை எப்போதும் கட்டுக்குள் அழகாக வைத்துக்கொள்ளும் ஆசை தோன்றும். அதனால் அளவோடு சாப்பிடுவார்கள். முகத்திலும் தேஜஸ் உருவாகும். அவர்களது புன்னகை உயிரோட்டமிக்கதாக மாறும். புருவம், இமைகளுக்கு பயிற்சி கிடைப்பதால் கண் அழகு கூடும். மனோபாஸ் தொந்தரவுகள் ஏற்படாது. தனிமையும் வாட்டாது. இப்போது பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் ஆர்வமாக பரதம் கற்கிறார்கள். நான் இதுவரை 200 பேருக்கு சலங்கை பூஜை செய்திருக்கிறேன். 300 பேருக்கு பரதநாட்டிய அரங்கேற்றமும் நடத்தியிருக்கிறேன்” என்று கூறும் இவர் பரதத்தில் யோகாவை இணைத்து ‘பரதயோகா’ என்பதை வடிவமைத்துள்ளார்.

“நான் சிறுவயதிலே யோகாசனம், தியானம் போன்றவைகளை கற்று தேர்ச்சி பெற்றேன். பரதமும் கற்றிருப்பதால் அவை மூன்றையும் இணைத்து ஆராய்ந்தேன். யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ள தனி இடம் வேண்டும். அவைகளை செய்யும்போது மனதை ஒருநிலைப்படுத்தி அவைகளில் மட்டுமே ஈடுபட முடியும். அதனால் பரதம், யோகா ஆகிய இரண்டையும் இணைத்து ‘டூ இன் ஒன்’ னாக அதனை வடிவமைத்திருக்கிறேன். அதன்படி பரதம் ஆடும்போது யோகாவின் பலனும் சேர்ந்து கிடைக்கும். யோகா செய்யும்போது மனம் ஒருநிலைப்படுவதுபோல், பரதம் ஆடும்போதும் தாளம் பாவங்களில் கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறோம். யோகாவில் ‘சின்’ முத்திரை இருப்பதுபோல் பரதத்திலும் அது இருக்கிறது. யோகா கலந்த பரதத்தின் மூலம் பெண்களின் மன அழுத்தம் அகலும். உடலும் பலம் பெறும். யோகா மட்டும் செய்யும்போது அது ஒரு உடற்பயிற்சி போன்ற அலுப்பான மனநிலையை உருவாக்கும். பரத யோகா நடனமாகிவிடுவதால் மன மகிழ்ச்சியோடு அதை பெண்கள் அனுபவித்து, ரசித்து செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. நடனமாடும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், பார்ப்பவர்களுக்கும் அது பலனை தருவதால், பரத யோகா பரவசத்தோடு பலன் மிகுந்ததாக உள்ளது.

பரதம் இன்றைய சமூகத்தில் புதிய நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது. ‘பரத கலை பயிற்சிபெறும் பெண்கள் ஒழுக்கமாக வாழ்வார்கள். நன்றாக படிப்பார்கள்’ என்ற நம்பிக்கை பெற்றோர் களிடம் உருவாகியுள்ளது. அது உண்மைதான். பரதகலை பெண்களின் ஒழுக்கத்திற்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் சிறப்பு சேர்க்கிறது” என்கிறார், லலிதா வெங்கடேஷ்.

பரதம் பெண்களின் வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துக்கொடுக்கட்டும்!