தினம் ஒரு தகவல் : மின் சிக்கனத்தின் அவசியம்


தினம் ஒரு தகவல் : மின் சிக்கனத்தின் அவசியம்
x
தினத்தந்தி 14 Jan 2019 11:30 PM GMT (Updated: 14 Jan 2019 5:05 PM GMT)

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைக்கும் எர்த் ஹவர் பிரசாரம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

இந்த பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகள், மின் கருவிகளை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அணைத்து வைக்க வேண்டும்.

இது உலகில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரசாரங்களிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. இப்படி ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால் என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது என்ற கேள்வி எழலாம். இது ஓர் அடையாள பிரசாரம்தான். விளக்குகள், மின் விசிறிகள், மின் கருவிகளை தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்தி, மற்ற நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்த பிரசாரத்தின் அடிப்படை நோக்கம்.

இரவில் நடத்தினால் தான் மின்சார பயன்பாட்டை குறைப்பது வெளிப்படையாக தெரியும் என்பதால் தான், இந்த பிரசாரம் இரவில் நடத்தப்படுகிறது. உலக இயற்கை நிதியம் இந்த பிரசாரத்தை நடத்துகிறது. 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்த பிரசாரம், உலகில் உள்ள 7000 நகரங்களில் நடைபெறுகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், இதில் பங்கேற்கிறார்கள். புவி வெப்பமடைதலை குறைக்க, மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த பிரசாரம் தொடங்கியது.

ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதாக தொடங்கிய இது, தற்போது மாற்று எரிசக்திக்கு மாறுங்கள் என்ற பிரசாரமாக வளர்ந்துள்ளது. சூரிய சக்தி, காற்றாலை, தாவர உயிர்க்கழிவு எரிசக்தி, நீர் மின்சக்தி உள்ளிட்டவை மாற்று எரி சக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சார பயன்பாட்டுக்கான செலவும் குறையும். ஒருபுறம் இப்படிப்பட்ட முயற்சிகள் அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் மின்சாரமே எட்டி பார்க்காத எளியோர் வீடுகளும், கிராமங்களும் நம் நாட்டில் லட்சக் கணக்கில் இருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு மின்சாரம் சென்று சேர்வதையும், இது போன்ற பிரசாரங்கள் மூலம் வலியுறுத்த வேண்டும்.

எர்த் ஹவர் பிரசாரத்திலும் விளக்குகளுக்கு பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. ஆனால் இதிலும் எரிசக்தி செலவாகவே செய்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையான ஆற்றலையும் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற பிரசாரங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

Next Story