கரும்பும்.. கன்னியரும்..


கரும்பும்.. கன்னியரும்..
x
தினத்தந்தி 16 Jan 2019 9:22 AM GMT (Updated: 16 Jan 2019 9:22 AM GMT)

பொங்கல் பண்டிகைக்கு பொலிவும், தித்திப்பும் சேர்க்கிறது, கரும்பு.

நாட்டின் பழமையான பயிராக விளங்கும் கரும்பு, நமது பாரம்பரியத்துடன் நீண்ட நெடிய தொடர்பு கொண்டது. பழங்காலத்திலிருந்தே கரும்பு பயிரிடப்பட்டு வந்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாணக்கியரும், சுச்ருதரும் கரும்பை பற்றி தங்கள் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.

சீனச் சக்கரவர்த்தி ஒருவர் வெல்லம் தயாரிக்கும் கலையைக் கற்பதற்காக கி.பி. 600-ல் பீகாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் இலக்கியத்திலும் கரும்பை பற்றிய குறிப்புகள் இடம்பிடித்திருக்கின்றன. அதியமானின் முன்னோர்களில் ஒருவர், வெளிநாட்டிலிருந்து தர்மபுரிக்கு கரும்பை கொண்டு வந்ததாக புறநானூற்றில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கரும்பை, வில்லாக வளைத்து பயன்படுத்தி இருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒற்றைவிதையிலை தாவர வகையை சார்ந்த கரும்பு பயிர் பல பருவங்கள் வளரக் கூடியது. ஆனால் இது ஒரு பருவப்பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பில் நான்கு வகையான முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை: 1. சர்க்கரையை சேமித்து வைக்கும் தண்டு, 2. உணவு தயாரிக்கும் இலை மற்றும் அதன் பகுதிகள், 3. இனப்பெருக்கம் செய்வதற்கு பயன்படும் குருத்து, 4. திரள்களாக உள்ள சின்னஞ்சிறு பூக்களின் தொகுதி.

உலகிலுள்ள கரும்பு ரகங்களை இரண்டு பெருந்தொகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் வகை, வெப்ப பிரதேசங்களில் விளைவிக்கப்படுபவை. அவற்றுள் சாறு மிகுந்திருக்கும். மற்றொரு வகை, வட இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கரும்பின் வளர்ச்சிக்கு வெப்பமும், நீரும் இன்றியமையாதவை. கரும்பில் இனிப்பு தன்மை உண்டாவதற்கு குளிர்ச்சி மிக அவசியம். எல்லா மாதங்களிலும் கரும்பை சாகுபடி செய்வதற்கும், அறுவடை செய்வதற்கும் தகுந்த தட்ப வெப்பநிலை தமிழ்நாட்டில் நிலவுவது சிறப்பம்சம். இது உலகின் பல நாடுகளில் இல்லாத வகையில் இயற்கை நமக்கு கொடுத்த அளப்பரிய நன்கொடை.

கரும்பு பயிரிலிருந்து வெள்ளை சர்க்கரை, வெல்லம் உள்பட பலவகையான இனிப்பு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன். வெள்ளை சர்க்கரையை விட வெல்லத்தில் புரத சத்துக்களும், தாது சத்துக்களும் அதிக அளவில் கலந்திருக்கின்றன. வெல்லம் தயாரிப்பது தமிழகத்தில் குடிசை தொழிலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கரும்பாலைகள் பண்டையக்காலத்திலேயே தமிழ்நாட்டில் அதிக அளவில் இருந்திருக்கின்றன என்று பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கரும்பு கன் னியருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

-எல்.பிரைட், சிவகங்கை.

Next Story